ஜப்பான்: அய்ந்தாம் பன்னாட்டு பெரியார் மாநாட்டில், தமிழர் தலைவர் ஆசிரியர் (காணொலிமூலம்) ஆற்றிய சிறப்புரை!

10 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திராவிடம் என்பது ஓர் இனவெறி அமைப்பு அல்ல;
முழுக்க முழுக்க அது ஒரு பண்பாட்டுப் படைக்கலன், பாதுகாப்புத் தத்துவம்!
சுயமரியாதை ஒரு நாட்டுக்குச் சொந்தமல்ல!
ஒரு குறிப்பிட்ட மக்களுக்குச் சொந்தமில்லை! மானிடத்திற்கே உரியது!
அந்த மானிடப் பற்றை மய்யப்படுத்தி, ஆய்வு செய்யுங்கள்! ஆராய்ந்துப் பேசுங்கள்! சமூக நோய்க் கிருமிகளை அழிப்பதற்குத் தயாராக இருங்கள்!

 

Contents

‘‘திராவிடம் என்பது ஓர் இனவெறி அமைப்பு அல்ல; முழுக்க முழுக்க அது ஒரு பண்பாட்டுப் படைக்கலன், பாதுகாப்புத் தத்துவம்! சுயமரியாதை ஒரு நாட்டுக்குச் சொந்தமல்ல! ஒரு குறிப்பிட்ட மக்களுக்குச் சொந்தமில்லை! மானிடத்திற்கே உரிய மகத்தான சேர்க்கையாகும். அந்த மானிடப் பற்றை மய்யப்படுத்தி, ஆய்வு செய்யுங்கள்! ஆராய்ந்துப் பேசுங்கள்! அடுத்த காலத்திலே என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்! நோய்க் கிருமிகளை அழிப்பதற்குத் தயாராக இருங்கள்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

அனைவருக்கும் வணக்கம்!

ஒஹாயோ கோசாய்மாஸ்!

குட் மார்னிங்!

இந்த அற்புதமான காலகட்டத்தில், ஜப்பானில் அய்ந்தாம் பன்னாட்டு பெரியார் மாநாடு மிகச் சிறப்பாக, தலைநகர் டோக்கியோவில் நடைபெறுவது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

மானிடப் பற்றோடு இருந்த ஒரு தலைவர், கொள்கை கள். ஜீவநதி போல ஓடிக்கொண்டிருக்கிற அந்தக் கொள்கைகள், உலகம் முழுவதும் இன்றைக்குப் பரவிக் கொண்டிருக்கின்றன. அதனுடைய தேவை ஏற்படுவது ஏன்? என்பதற்காக தக்க தருணத்தில், ஏற்பாடு செய்துள்ள ஜப்பானியத் தோழர்கள் அனைவருக்கும்,  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

குறிப்பாக, நம்முடைய நாட்டில், இந்தியாவிலிருந்து  பங்கேற்கக்கூடிய பெருமதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர், சீரிய பகுத்தறிவாளர், கவிஞர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்களே, அதுபோல  மேனாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களே, பொருளாதார அறிஞர் பெருமதிப்பிற்குரிய ஜெயரஞ்சன் அவர்களே, மற்றும் இந்த மாநாட்டிலே கலந்து கொள்ளக்கூடிய முக்கிய தோழர்களே, அதுவும் இந்த நாட்டை ஒருங்கி ணைக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், சங்கப் பொறுப்பாளர்கள், இரா.செந்தில்குமார், கமலக்கண்ணன், கோவிந்த பாசம், குன்றாளன் ஆகிய அன்பர்களே!

இந்த மாநாடு மட்டுமல்ல, கடந்த நான்கு மாநாடுகளை உலகமெங்கும் நடத்திக்கொண்டு, ‘‘பெரியார் உலகமயம்; உலகம் பெரியார் மயம்’’ என்ற தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதே தன்னுடைய வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருக்கக்கூடிய, அமெரிக்காவைச் சார்ந்த டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே,

அமெரிக்காவைச் சார்ந்த அருமைப் பேராளர்களே!

பெரியார் – அம்பேத்கர் ஆஸ்திரேலியாவில் உள்ள சிந்தனை வட்டத்தைச் சார்ந்த பொறுப்பாளர்கள் ராதிகா அவர்களே, மூர்த்தி அவர்களே, சுமதி அவர்களே மற்றும் பல பேராளர்களே,

ஜப்பான் ஹியூமன் ரைட்ஸ் ஆக்டிவிட்டிஸ் கோரோ ஒஷிடா அவர்களே, அதுபோல டாக்டர் புகாவோ ஜூனிச்சி அவர்களே!

மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, தான்சானியா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா, தமிழ்நாடு ஆகிய  பல நாடுகளில், பல பகுதிகளில் இருந்து வந்திருக்கக்கூடிய நம்முடைய பேராளர்கள், அருமைக் கேளிர் என்று சொல்லக்கூடிய கொள்கை உறவுகளே, உங்கள் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பை நல்குகிறோம்.

நியாயமாக, நேரிலே வந்து உங்களை எல்லாம் சந்தித்து, உங்களோடு மகிழ வேண்டிய ஒரு வாய்ப்பு எனக்கு இருந்தாலும் கூட, அது தவிர்க்க முடியாத காரணங்களாலே, மருத்துவர்களுடைய ஆலோச னையினால் நேரில் வர இயலவில்லை. அதற்காக நீங்கள் பொறுத்தருள வேண்டும் என்று முதலில் கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிரியர் உரை ஆசிரியர் உரை ஆசிரியர் உரை ஆசிரியர் உரை

அருமைச் சகோதரர்
டாக்டர் சோம. இளங்கோவன்

இப்படி ஒரு மாநாட்டை, அய்ந்து  கண்டங்களில், நாடுகளில் சிறப்பாக பெரியார் பன்னாட்டு அமைப்பும், ஆங்காங்கே இருக்கிற அந்த அமைப்புகளும் சேர்ந்து நடத்துவதிலே, தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு, அதை வெற்றிகரமாக அருமைச் சகோதரர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் பெரியார் பன்னாட்டு அமைப்பின் மூலமாகவும் செய்வதற்கு ஒத்துழைப்புத் தந்திருக்கிற ஜப்பானிய தோழர்களுக்கு உளங்கனிந்த நன்றி!

பெரியார் ஏன் தேவைப்படுகிறார்? ‘பெரியார் உலக மயம்; உலகம் மயம் பெரியார் மயம்’ என்பது இருக்கிறதே, அது ஏதோ ஒரு விசித்திரமான  எண்ணங்கள் இல்லை. அந்த வாய்ப்புகளை மிக மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

மதவெறியும், ஜாதிவெறியும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு…

எப்படி ஒரு மருந்து நமக்குத் தேவைப்படுகிறதோ, அது டாக்டருக்காக அல்ல; மருந்து விற்பனைக்காக அல்ல; மாறாக நம்முடைய நோயைத் தீர்ப்பதற்காக. இன்றைக்கு என்ன பெரியாருக்கு இங்கே அவசியம்? இப்படி ஒரு மாநாடு ஏன்? என்று சிலர் நினைக்கக்கூடும். உலகமெங்கும் இப்போது ஒருவிதமான பாய்க்கல் மிகப்பெரிய அளவிற்குப் பரவிக் கொண்டிருக்கிற போது, கரோனா எப்படி உலக மக்கள் மத்தியிலே, வெகுவாகப் பறந்து பல உயிர்களைத் தாக்கம் செய்து, பலிகொண்டது. அதுபோல இப்போது, மதவெறியும், ஜாதிவெறியும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு, மற்ற நாடுகளிலும் குடிகொண்டிருக்கிறது.

புலம்பெயர்ந்த நம்முடைய தமிழர்கள் ஒரு காலத்தில் வெறும் தோட்டத் தொழிலாளர்களாகவும், வெறும் உழைப்பாளிகளாகவும் சென்றவர்கள், இன்றைக்கு ‘அறிவாளிகள் நாங்கள்’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நம்முடைய அறிவு அந்த நாடுகளுக்குத் தேவைப்படுகிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ந்து இருந்தும் கூட, நல்ல அளவிற்கு ஊதியத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதற்குப் பிறகும் கூட, புலம்பெயர்ந்து குடியுரிமையைப் பெற்றி ருக்கிறார்கள்.

வேகமாக உள்ளே நுழைந்து கொண்டிருக்கின்றன!

அங்கேயும் கொண்டுபோய், எந்த வருணம் இங்கே நம்மைப் பிரித்து வைத்ததோ, எது நம்மைக் கீழ்ஜாதி ஆக்கியதோ, எது நம்மை எட்டி நில் என்று சொன்னதோ, அதை அப்படியே கொண்டுவந்து இறக்கக்கூடிய சக்திகள், இப்போது வேகமாக உள்ளே நுழைந்து கொண்டிருக்கின்றன.

உடலுக்கு நோய் வந்தால், தடுப்பூசி தேவை! ஆனால், இது உடல் நோய் அல்ல; மனதிலே இருக்கக்கூடிய ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை இணைத்த ஓர் ஆபத்தானப் பெருநோய். மிகப்பெரிய அளவிற்கு, இது புற்று நோயை விட ஆபத்தானது. ஏனென்றால், அந்த நோய் உடலை மட்டுமே கொல்லும். ஆனால், அறிவை, மூளைக் காயம் என்று ஏற்படக்கூடிய அளவுக்கு, மூளைக் காய்ச்சல்.

தனி மனிதனுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டால், அதனால்  பாதிப்பு, அவனுக்கு மட்டும். ஆனால், பண்பாட்டுப் படையெடுப்பு என்பது ஒரு சமுதா யத்திற்கே மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு. அதுவும் நல்ல அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிற ஒரு சமுதாயத்துக்கு. காலம் காலமாக படிப்பு மறுக்கப்பட்டு, குலக்கல்வியைச் சொல்லி, அதை எதிர்த்துப் போராடி, அதிலே பூத்த வெற்றி மலர்கள் தான் இங்கே இருக்கிறவர்கள். அப்படிப்பட்டவர்கள் மத்தியிலே, ஜாதி என்னவென்று தெரியாது. ஒருங்கிணைந்து வாழ வேண்டியவர்கள். நம்முடைய தத்துவம் என்னவென்று தந்தை பெரியார் சொன்னார்.

ஏன் பெரியார் தேவைப்படுகிறார்? பெரியார் மானிடப் பற்றுள்ளவர்; அறிவுப் பற்றுள்ளவர். எனக்கு வேறு எந்தப் பற்றும் கிடையாது என்று மிகத் தெளிவாகச் சொன்னவர்.

திராவிடம் என்பது ஓர் இனவெறி அமைப்பு அல்ல!

அது மட்டுமல்ல தோழர்களே, என்னுடைய பற்று வளர்ச்சிப் பற்று, அறிவுப்பற்று என்று சொன்னார்கள். அந்த அறிவுப் பற்றினுடைய தாக்கம்தான், மானிடப் பற்றுக்கு எல்லை இல்லை. திராவிடம் என்பது ஓர் இனவெறி அமைப்பு அல்ல; முழுக்க முழுக்க அது ஒரு பண்பாட்டுப் படைக்கலன், பாதுகாப்புத் தத்துவம்.

‘எல்லோருக்கும் எல்லாம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுதான். ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ இதுதான் திராவிடத் தத்துவம். இதற்கு நாட்டுக்கு எல்லை கிடையாது. இது முழுக்க முழுக்க மனித குலத்தினுடைய மானிடம்தான் – மானிட பரப்பு முழுவதும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதுதான் பெரியாருடைய தத்துவம். அதற்கு எதிரானக் கருத்துகள் இப்போது வேகமாகப் பரவுவதற்கு முயற்சி செய்தார்கள்.

‘‘தன்மான உணர்வோடு நிமிந்து நில்!
யாருக்கும் நீ அடிமை அல்ல!’’

ஒரு நூற்றாண்டு, தன்னந்தனியராக நின்று, எதிர்நீச்சலிலே வென்று, அதற்குப் பிறகு இவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்திருக்கிறவர்கள். படிப்பைக் கொடுத்து, உத்தியோகத்திற்கு வாய்ப்புக் கொடுத்து, நமக்கெல்லாம் மிகப்பெரிய அளவுக்கு முதுகெலும்பு கொடுத்து, ‘‘தன்மான உணர்வோடு நிமிர்ந்து நில்! யாருக்கும் நீ அடிமை அல்ல’’ என்று சொன்ன ஒரு நிலை, உள்நாட்டிலே ஏற்படுவதற்கு முன்னாலே, வெளிநாட்டிலே இருக்கக்கூடியவர்கள் ஒரு நல்ல அளவிற்கு இருக்கிறீர்கள் என்று சொல்லும்போது, எங்களுக்குப் பெருமிதம். உங்களை நோய்த் தாக்கக் கூடாது. அந்த நோய் ஜாதி வெறி நோயாக, மதவெறி  நோயாக – இன்னும் இன்னும் பேதத்தை வளர்க்கக் கூடிய அளவிற்கு இல்லை.

எனவே, பேதமிலா பெருவாழ்வு வாழ வேண்டும். அதுதான் பெரியார் மாநாட்டினுடைய நோக்கம். எல்லோரும் ஓர்குலம் என்று இருக்கிறதே, எல்லோரும் ‘யாதும் ஊரே’ என்று நீங்கள் வந்திருக்கிறீர்கள், அது மகிழ்ச்சி. ஆனால், ‘யாவரும் கேளிர்’ என்று அங்கு வாழக்கூடிய சூழ்நிலை இருக்கிறதா? என்பதுதான்  மிக முக்கியமான மில்லியன் டாலர் கேள்வி. ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலை, அங்கே செல்கிற போது, அந்த நாட்டுக்காரர்களால் நமக்கு இல்லை. மாறாக சென்றவர்கள் புதிதாக அங்கே ஜாதியை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.

திராவிடம் என்றால், சமத்துவ மூச்சுக் காற்று!

எனவேதான், பெரியார் மாநாடு, பெரியார் தத்து வம் தேவை. பெரியார் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல; பெரியார் என்பது, அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைப் போல, ஒரு காலகட்டம், ஒரு திருப்பம், மிகப்பெரிய அளவிற்கு ஒரு வாழ்க்கைத் தத்துவம். எங்கெல்லாம் மூடநம்பிக்கை இருக்கிறதோ, எங்கெல்லாம் மனிதனுக்குள்ளே பேதம் இருக்கிறதோ, எங்கெல்லாம் ஆண் எஜமானன்; பெண் அடிமை என்ற சூழ்நிலை இருக்கிறதோ, அங்கெல்லாம் பெரியார் தேவைப்படுகிறார்! பேதத்தை வைத்துக்கொண்டு வாழ்வதுதான் தங்களுடைய உரிமை என்று சொல்லிக்கொண்டு, சொந்த மொழி யையே மறந்துவிட்டு, இன்னொரு பண்பாட்டுப் படையெடுப்புக்கு ஆளாகி இருக்கும் நேரத்திலே, அந்தப் பண்பாட்டு படையெடுப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதுதான் திராவிட உணர்வு! ‘திராவிடம்’ என்றால்,  ஏதோ கசப்பு மருந்தல்ல; திராவிடம் என்றால், சமத்துவ மூச்சுக் காற்று. பெரியார்தான் அந்த மூச்சுக் காற்று!

சமூக நோய்கள் எல்லாம் விரட்டப்பட்டன!

எனவே, பெரியாரை சுவாசிப்பதன் மூலம், அம்பேத்கர் கருத்தைப் பரப்புவதன் மூலம், சமூகத்தில் ஏற்படக்கூடிய மாற்றம் – அதுதான் திராவிட இயக்கம். அந்தத் திராவிட இயக்கம், தமிழ்நாட்டிலே மட்டுமல்ல, அதனுடைய தாக்கங்கள் தந்தை பெரியார் 1929 ஆம் ஆண்டிலே மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் சென்று, அதற்குப் பிறகு பல ஊர்களுக்குச் சென்ற போதெல்லாம், அங்கிருந்த சமூக நோய்கள் எல்லாம் விரட்டப்பட்டன.

எனவே, நோக்கமும், நிறைவேறுகிறது. அதனுடைய ஆக்கமும் நமக்குப் புரிகிறது. நோக்கமும், ஆக்கமும் புரிகிற நேரத்தில், அதை மாற்றி, ஒரு  சிறப்பான வகையிலே, ஒரு சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கும், உங்களை ஊக்கப்படுத்துவதற்கும், எச்சரிக்கை செய்வதற்கும் – வருமுன்னர் காக்க வேண்டும்; கிருமிகள் நுழைந்த பிற்பாடு, சிகிச்சை கொடுப்பதை விட, அது மிகவும் முக்கியமானதாகும்.

சீரான சிந்தனை  – சுதந்திரச் சிந்தனை!

உடலில் எப்படி நோய் எதிர்ப்புச் சக்தி – இம்யூனிட்டி என்று செலுத்தப்படுகிறதோ, பிசிக்கல் இம்யூனிட்டி எப்படி முக்கியமோ, அதுபோல ‘மெண்டல் இம்யூனிட்டி’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு உருவாகுவதற்கு, பகுத்தறிவு தேவை! அந்தப் பகுத்தறிவை வழங்கு வதுதான், இந்த மாநாட்டினுடைய தத்துவம். சமத்து வத்தை தர வேண்டும். அதற்கு தேவையானது சீரான சிந்தனை – சுதந்திரச் சிந்தனை.

சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள் – மிக அழகாக, ‘‘என்னுடைய இயக்கத்துக்கு மறுபெயர் வைக்க வேண்டுமானால், ‘அறிவுச் சுதந்திர இயக்கம்’ என்று குறிப்பிட்டார்கள். எனவே, அந்த அறிவுச் சுதந்திரத்தைப் பரப்ப வேண்டும். எவையெல்லாம் இப்போது நோய்களாக வருகிறதோ, அதைப் பற்றித் தெரிந்துகொண்டு  எச்சரிக்கையோடு வாழவேண்டும்.

எனவே, இந்த இரண்டு நாள்கள், நீங்கள் அதைப் பற்றிச் சிறப்பாக ஆய்வு செய்யுங்கள். ஒன்றாகக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.  கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட பிற்பாடு, சிறப்பான செயல் வீரர்களாக நீங்கள் வாருங்கள். அறிவு என்பது ஆக்கத்திற்காக; அது வெறும் படிப்புக்காக அல்ல; அல்லது வெறும் ஆய்வுக்காக அல்ல; அல்லது நம்முடைய அறிவு விளக்கத்துக்காக அல்ல; நிச்சயமான ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு, புதியதோர் உலகு செய்வோம்! ‘பேசு சுயமரியாதை உலகு’ என்று பெயர் வைப்போம் என்று சொல்வதற்கான அந்த வாய்ப்பு.

சுயமரியாதை ஒரு நாட்டுக்குச் சொந்தமல்ல! ஒரு குறிப்பிட்ட மக்களுக்குச் சொந்தமில்லை! மானிடத்திற்கே உரிய மகத்தான சேர்க்கையாகும். அந்த மானிடப் பற்றை மய்யப்படுத்தி, ஆய்வு செய்யுங்கள்! ஆராய்ந்துப் பேசுங்கள்! இனிவரும் காலத்திலே என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்! நோய்க் கிருமிகளை அழிப்பதற்குத் தயாராக இருங்கள்! உள்ளே நோய்க் கிருமியை நுழைய விட்டுவிட்டு, ஆபத்து என்று பிறகு நினைப்பதை விட, அது உள்ளே நுழையும் போதே, தடுப்பூசி போடுங்கள். அந்தத் தடுப்பூசி முறைதான், அந்த மருத்துவ முறைதான், இந்த மாநாடு!

நல்ல வெற்றிகரமாக ஆகட்டும்!

வணக்கம்! நன்றி!!

அரிகத்தோ கோசாய்மாஸ்!

அதேபோல, முன்னெடுத்துச் செல்லுவோம். ஜப்பானிலே ஒரு மொழி உண்டு, அதுதான் ‘கன்பத்தே’ என்று சொல்லக்கூடியது. அந்த ‘கன்பத்தே’ போல, சுயமரியாதை இயக்கத்திற்கும் அதுதான் மிக முக்கியம். ஒருபோதும் நாங்கள் தோற்க மாட்டோம், வெற்றி பெறுவோம்!

அரிகத்தோ கோசாய்மாஸ்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டில் (காணொலிமூலம்) உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *