சென்னை, அக்.11 இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
ஆனால் டில்லி ஜந்தர் மந்தரில் நேற்று (10.10.2026) போராட்டம் நடத்த சிஜேபி அமைப்பிற்கு டில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். டில்லி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் நேற்று காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயக்கப்பட வேண்டிய 254 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
போராட்டம் நடத்த குவிந்து வரும் இளைஞர்களை காவல்துறை உடனுக்குடன் கைது செய்தனர். சிஜேபிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் போராடிய இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாகப் பதிவிட்டிருக்கிறார்.
இதுகுறித்து நேற்று (10.10.2026) அவர் வெளியிட்டப் பதிவு வருமாறு: “இன்று டில்லியில் அரங்கேறி வரும் நிகழ்வுகளும், அமைதிவழியில் போராடுபவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளும், நான் அனுபவித்த நெருக்கடிநிலைக் காலத்தின் வலிமிகுந்த நினைவு களை மீண்டும் கண்முன் கொண்டு வருகின்றன.
டில்லியிலும் நாடு முழுவதிலும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், மாண வர்கள், போராடும் இளைஞர்கள் அனைவரும் உடனடியாக விடு விக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் போராடும் மாணவர்கள் மீது, பாஜகவின் கிளையாகச் செயல்பட்டுக்கொண்டு, காவல்துறை அடக்குமுறையை ஏவிவிடும் தவெக அரசையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
அமைதிவழியில் போராடு வதற்கான தங்களது ஜனநாயக உரிமையைப் பயன் படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதலை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். எதிர்ப்பை வெளிப்படுத்துவது குற்றமல்ல. ஜனநாயகத்தைக் காப்பதற்காக எழும் குரலை ஒடுக்குவது ஜனநாயகத்தையே அழித்துவிடும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை. அவர் பதவி விலகுவதோடு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து பாதிப்புகளும் சரிசெய்யப்பட்டு, அதன் சுதந்திரமும் நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.
