‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நேர் எதிரானதுதான் மனுதர்மம்!
மனுதர்மத்தை எதிர்த்துத்தான் சுயமரியாதை இயக்கம் வந்தது!

சமூக நீதி என்பது, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பதுதான்!
மக்களுக்குத் தொண்டு செய்கின்ற இயக்கம், பெரியாருடைய இயக்கம்!

சிவகங்கை, அக்.10 இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நேர் எதிரானதுதான் மனுதர்மம்! மனுதர்மத்தை எதிர்த்துத்தான் சுயமரியாதை இயக்கம் வந்தது! சமூக நீதி என்பது, எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான்! மக்களுக்குத் தொண்டு செய்கின்ற இயக்கம், பெரியாருடைய இயக்கம் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

Contents

சிவகங்கை: ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

்சிவகங்கை மாவட்டக் கழகம் சார்பில், கடந்த 22.8.2026 அன்று மாலை 6 மணிக்கு, சண்முகராஜா கலையரங்கத்தில் சுயமரியாதைச் சுடரொளிகளான சிவகங்கை இரா.சண்முகநாதன், காரைக்குடி என்.ஆர்.சாமி ஆகியோர் நினைவாக அமைக்கப்பட்டிருந்த திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற, ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாட்டில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஜாதி ஒழிய வேண்டும் என்று
நாங்கள் ஏன் சொல்கிறோம்?

இன்றைக்கு நாங்கள் எதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்? குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து, நம்முடைய பிள்ளைகள் படிக்கக் கூடாது என்று சொன்னார்கள். காரணம் என்ன? ஜாதி ஒழிய வேண்டும் என்று நாங்கள் ஏன் சொல்கிறோம்? எங்களுக்கு என்ன ஜாதி உணர்வாளர்கள் மீது தனிக் கோபம்? ஏன் அந்தத் தீர்மானம்? என்பதை நினைத்துப் பாருங்கள்.

இன்றைக்குக் காலையில் கூட எல்லா இடங்களி லேயும் ‘நீட் தேர்வு எதிர்ப்பு’ப் பிரச்சாரத்தை, ஆறு குழுக்களாகத் தமிழ்நாடு முழுக்க இளைஞர்கள் பிரச்சாரம் செய்துகொண்டு போகிறார்கள். ஏன்? உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும், நம்மு டைய பிள்ளைகள் டாக்டர்களாக நிறைய பேர் வந்து விட்டார்கள். எதனால்? திராவிட இயக்கத்தினால். ஆனால், அதைத் தடுப்பதற்காக இந்த மனுதர்மத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய அளவிற்கு வந்ததுதான் நீட் தேர்வு.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு
நேர் எதிரானதுதான் மனுதர்மம்!

அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அம்பேத்கர் வரையறுத்த அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக, ‘‘எல்லாருக்கும் எல்லாம்’’ – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அரசியலமைப்புச் சட்டத்தில் முதலில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதற்கு நேர் எதிரானதுதான் மனுதர்மம்.

அந்த மனுதர்மத்தில் என்ன எழுதி இருக்கிறார்கள் பாருங்கள்; இந்த மனுதர்மத்தினுடைய புதிய சுரங்கம், புதிய கண்ணிவெடிதான் இந்த நீட் தேர்வு என்பது. ஜாதியைக் காப்பாற்றுவதற்காக, உயர்ஜாதியினுடைய தத்துவத்தை அவர்கள் காப்பாற்றுவதற்காகதான் தோழர்களே இந்த மனு தர்மம். உதாரணமாகப் பாருங்கள், ஜாதியை உண்டாக்கியது கடவுள் என்று சொன்னது மட்டு மல்ல, ‘‘அந்த பிரம்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளிலிருந்து உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு, இம்மைக்கும் மறுமைக்கும் கருமங்களைத் தனித்த னியே பகுத்தார்.

பிராமணனுக்கு, ஓதல், ஓதுவித்தல் எக்கியம் செய்தல், தானம் வாங்கு தல்.

சத்திரியனுக்கு இந்த வேலை!

வைசியனுக்கு இந்த வேலை’’ என்றெல்லாம் கொடுத்துவிட்டு,

சூத்திரன், நம்ம ஆட்க ளுக்கு, பெரும்பாலும் உழைக்கிற மக்களுக்கு இந்த மூன்று வருணத்தா ருக்கும் பொறாமை இன்றிப் பணி செய்வதை முக்கிய தர்மமாக பிரம்மா ஏற்படுத்தினார் என்று சொல்கிறார்கள்.

மனுதர்மத்தை எதிர்த்துத்தான்
சுயமரியாதை இயக்கம் வந்தது!

ஆகவே, அடிமைகள்; படிக்க உரிமை இல்லை என்று தர்மம் வகுத்தார்கள். அதை எதிர்த்துதான், இந்த மனுதர்மத்தை எதிர்த்துத்தான் சுயமரியாதை இயக்கம் வந்தது. அதனால்தான், ஜாதியே ஒழிய வேண்டும் என்கிறோம். அந்த ஜாதி இருக்கிற வரையில், ஜாதி தர்மம் இருக்கும்; வர்ண தர்மம் இருக்கும். அந்த வர்ண தர்மத்துக்குப் புது பெயர் வைத்திருக்கிறார்கள், ‘ஸநாதனம்’ என்று.

மனுதர்மத்தைப் பற்றி நாம் எடுத்துச் சொல்லும்போது, திராவிடர் கழகத்துக்காரர்கள் இந்து மதத்தைத் தான் தாக்குவார்கள் என்று ஒரே வரியில் சொல்லிவிடுவார்கள். உண்மையல்ல அது.  எங்களுக்கு என்ன தனிப்பட்ட முறையில் கோபம் – யார் மீதும் கோபம் கிடையாது.

அக்னி கோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய
‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’

உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், எதையும் ஆதாரத்தோடுச் சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் நாங்கள். ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ இந்தப் புத்தகத்தை எழுதியது யார்? அக்னி கோத்திரம் இராமானுஜ  தாத்தாச்சாரியார் அவர்கள்.  இந்தப் புத்தகத்தை பெரியார் எழுதவில்லை, வீரமணி எழுதவில்லை. அந்தப் புத்தகத்தை எழுதியவர், சங்கராச்சாரியாருக்கு வேண்டியவர். மிகப்பெரிய அளவுக்கு மதவாதி. நெற்றியில் பெரிய நாமம் போட்டிருப்பார்.  100 வயது வரை வாழ்ந்தவர் அவர்.  99 வயதில் இந்தப் புத்தகத்தை எழுதினார். ‘நக்கீரன்’ இதழில் தொடர்ந்து அவர் எழுதி, அதனைப் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஏன்  மனுதர்மத்தைப் பெரியார் எரித்தார்? ஏன் அம்பேத்கர் எரித்தார்? இன்றைக்கு ஏன், இந்த மனுதர்மம் தான் அரசியலமைப்புச்  சட்டத்திற்குப் பதிலாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்? என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டுமானால், ‘இந்து மதம் எங்கே போகிறது?’ புத்தகத்தில் உள்ள  ஒரு பகுதியைக் கவனியுங்கள்.

மனுஸ்மிருதியை
கையோடு கொண்டு வந்தார்கள்!

‘‘ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். நம்மூர் மழைச்சாலையைவிட மலைச்சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்குத்   தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது. ‘‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்…’’

ஆப்கானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது கூடவந்த பெண்கள் கம்மி.

வரலாற்று கண்ணோட்டத்தில் இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு பெண்கள் எண்ணிக்கை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கப்பட்டதுதான்.

ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்; ஆனால், மனுஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தார்கள்.’’

எப்பொழுது ஜாதி வந்தது? எப்படி ஜாதி வந்தது? யாரால் வந்தது? இதுதான் வரலாறு.

அதற்கு முன்னால், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ – எல்லாரும் சமம்.  ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’’ – எல்லாரும் சொந்தக்காரர்கள், நமக்குள்ளே வேறுபாடு இல்லை. அப்படியிருந்த ஒரு சமுதாயத்தில ஜாதி வருகிறது.

அதைச் சொல்லும்போது, இராமானுஜ தாத்தாச்சாரி யார் சொல்லுகிறார்,

‘‘பிராமணன், சத்திரியன், வேதம். அந்த வேதத்தைப் பிளந்தார்கள். எளிமையாகப் புரிய வேண்டும் என்பதற்காக மனுதர்மத்தை எழுதினார்கள்.

‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினை உருவாக்கி அவர்களை வேலைக்காரரர்கள் ஆக்கியது மனு!

பிராமணன், சத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை, மனு பிளவாக்கியது. கூடவே இவர்களைத் தாண்டி, ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினை உருவாக்கி, அவர்களை வெறும் வேலைக்காரரர்கள் ஆக்கியது.

அது மட்டுமல்ல, மனு பிராமணனுக்கு வேதம், தவம், அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 12 குணங்களை ஆரியர்களுக்கு வைத்தது – பிராமணனுக்கு வைத்தது.’’

(முதன் முதலில் இட ஒதுக்கீட்டை உண்டாக்கி யவர்களே அவர்கள்தான். நாம் கேட்கவில்லை இட ஒதுக்கீடு).

மேலும் அவர் தொடர்கிறார்,

‘‘அடுத்ததாக சூத்திரனைப் பற்றி இப்படி எழுதியது,

சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்ம உபதேசம் பண்ணாதே, சண்டை வந்தால், சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ, அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு, அவனை உதை.’’

(இப்பொழுது அந்தத் தண்டனைதான் ‘நீட்’ தேர்வு; அந்தத் தண்டனைதான்  இன்றைக்கு EWS.  புதுப் புதுக் காலத்தில், புதுப் புது டெக்னிக். தத்துவம் அதேதான், ஆனால், உருமாற்றம் மிகப்பெரிய அளவுக்கு மாறுகிறது).

சமூக நீதி என்பது, எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான்!

மனுதர்மத்தில் எழுதியிருக்கிறார்கள், தர்மத்தை நிலைநாட்ட,  சாம, பேத, தான, தண்டம்  எல்லா வகைகளையும் நீங்கள் பயன்படுத்துங்கள் என்று  சொல்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்? வன்முறையைக் கையாளலாம்; இன்றைக்கு அதைத்தான் செய்கிறார்கள். அதுதான் ஆர்எஸ்எஸ்; அதனுடைய விளைவுதான்  கோட்சே, காந்தியார், காமராஜர் வரையில் பதம் பார்த்த நிலைகள். இதை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் தோழர்களே!

எனவே, நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. சில பேர், எங்களை எதிரிகள் என்று நினைக்கலாம். இந்த சமுதாயத்தில் எல்லோரும் ஓர் நிலையில் இருக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் – சமூக நீதி என்பது, எல்லோருக்கும் எல்லாம் என்று வரவேண்டும். அதற்காகத்தான் நாங்கள் பாடுபடுகிறோம்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு
நம்மவர்கள் டாக்டராக முடியுமா?

இந்த இயக்கம் வந்ததினால் என்ன லாபம் என்று சொன்னால், இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம்மவர்கள் டாக்டராக முடியுமா? அந்த நிலையை மாற்றியதுதான் திராவிட இயக்கம்.

மக்களுக்குத் தொண்டு செய்கின்ற இயக்கம், பெரியாருடைய இயக்கம்!

ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறார்கள்;  இன்சுலின் ஊசி போடுகிறோம்; ஊசிப் போட்டுக் கொள்கிறவர்கள் யாராவது,  இந்த மருந்தை யார் கண்டுபிடித்தது? நம்மைக் காப்பாற்றியவர் யார்? அவரைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று யாராவது நினைக்கிறார்களா? இல்லையே! அவருடைய பெயரைத் தெரிந்துகொள்வதற்குக் கூடத் தயாராக இல்லையே!  ஏதோ, தானே வந்ததுபோலவும், மேலே இருந்து பொத்தென்று கீழே வந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அது மாதிரி,  நாங்கள் நன்றி பாராட்டாதவர்கள்; நன்றி எதிர்பார்க்காதவர்கள். எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள்; மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற இயக்கம், பெரியாருடைய இயக்கம்.

தந்தை பெரியாரும்,
நீதிக்கட்சியும்தான் காரணம்!

டாக்டர் படிப்பிற்கு மனு போட வேண்டுமானால், சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும். எப்பொழுது? 100 ஆண்டுகளுக்கு முன்பு. நீதிக்கட்சி ஆட்சி வருவதற்கு முன்பு. தந்தை பெரியாரும், நீதிக்கட்சியும்தான் இந்த முறையை ஒழித்தவர்கள்.

இன்னொரு சூது அதில், என்னவென்றால், எல்லோருக்கும் சமஸ்கிருதம் படிக்கின்ற உரிமை இல்லை. மனுதர்மத்தையே எல்லோரும் படிக்கக் கூடாது என்று எழுதி இருக்கிறார்கள். ஒரு புத்தகம் எழுதினால், இன்றைக்கு அது புத்தக வடிவமாகின்றது; அச்சு  வந்ததினால், இது நமக்குக் கிடைத்தது.

நான் சொல்வது கற்பனை அல்ல; ஆதாரத்தோடு சொல்கிறேன். இதே மனுதர்மத்தில், முதல் அத்தி யாயத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது, தெரியுமா?

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *