ஜப்பான் அழைக்கிறது

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

‘மண்டைச் சுரப்பை உலகுதொழும்’ என்று தந்தை பெரியாரைப் பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னது வெறும் புகழ்ச்சி இல்லை; உண்மைதான் என்பதை உலகம் இன்று கண்டுகொண்டிருக்கிறது. தந்தை பெரியாரின் சிந்தனைகள் ஒரு மொழிக்கோ, ஒரு நாட்டுக்கோ, ஒரு இனத்துக்கோ மட்டும் உரியவை அல்ல! மனித குலம் அனைத்துக்குமான சுயமரியாதைக்காக, சமத்துவத்துக்காக சமூக நீதிக்காக, பாலின உரிமைக்காக, பகுத்தறிவுக்காக சிந்தித்தவர் – செயல்பட்டவர் – இயக்கம் கண்டவர் தந்தை பெரியார்.

‘அவரை ஒரு சின்னச் சிமிழுக்குள் அடைத்து விடலாம்’ என்று ஆரியம் கருதத் தொடங்கும் போதே, பேருருவாய் எழுந்து நின்றவர் அவர்! தமது இலக்கு என்ன, தம் இயக்கத்தின் வீச்சு எத்தகையது என்பதையும் தீர்க்கமாய் உணர்ந்தவர் தந்தை பெரியார். இயல்பாகவே, அவரது சிந்தனை எந்த சட்டகங்களுக்குள்ளும் அடங்காதது. சுரங்கம் எங்கிருந்தாலும் தேடி வந்து அள்ளிச் செல்வதைப் போல, தந்தை பெரியார் என்னும் அறிவுச் சுரங்கத்தின் சிந்தனைகளை உலகெங்கும் இருந்து வந்து கற்றுச் செல்கிறார்கள் அறிஞர் பெருமக்கள்!

இன்று இந்தியாவைக் கடந்து, ஆசியாவைக் கடந்து அய்ரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என மக்கள் வாழும் கண்டங்களிலெல்லாம் தந்தை பெரியாரின் கொள்கைகள் பேசப்படுகின்றன; பின்பற்றப்படுகின்றன; ஆராயப்படுகின்றன. தாமே ஓர் இயக்கமாக இயங்கியதோடு மட்டுமல்லாமல், தமக்கான இயக்கத்தையும் உருவாக்கி, நெறிப்படுத்தி, அதை காலாகாலத்துக்கும் தொடர்வதற்கான வழிவகைகளை பகுத்தறிவுப் பார்வையில் சிந்தித்து, எவரது எதிர்ப்புக்கும் ஏளனத்திற்கும் அஞ்சாமல் நிலைநிறுத்தியவர் அவர்!

அதனால்தான் பெரியாரைச் சுமந்து கொண்டு நாெடங்கும் பயணிக்கிறார் பெரியாரால் கண்டறியப்பட்ட அருந்தலைவர் ஆசிரியர் வீரமணி. அவருடைய வழிகாட்டுதலோடு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட பெரியார் பன்னாட்டு அமைப்பு முதல்,  தந்தை பெரியாரின் லட்சியங்களை நிறைவேற்றும் அமைப்புகள் உலக நாடுகளிலெல்லாம் தோன்றியிருக்கின்றன.

பெரியார் பன்னாட்டு மாநாடுகள் ஜெர்மனி (2017), அமெரிக்க அய்க்கிய நாடுகள் (2019), கனடா (2022), ஆஸ்திரேலியா (2025) என நான்கு முறை வெவ்வேறு நாடுகளில் நடைபெற்று, அதன் அய்ந்தாம் மாநாடு ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் இந்த அக்டோபர் மாதம் 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தான்சானியா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகள், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து ஆய்வாளர்களும் கருத்துரையாளர்களும் பங்கேற்கிறார்கள்.

மேலும் பற்பல நாடுகளில் இருந்து பேராளர்கள் பங்கேற்கிறார்கள். தந்தை பெரியாரின் கொள்கைகள் இன்று உலகை எப்படி வழிநடத்துகின்றன, உலகின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தந்தை பெரியாரின் சிந்தனைகளும், திராவிட இயக்கமும் காட்டும் தீர்வுகள் என்ன?, உலக மனிதநேய இயக்கங்களில் பெரியாரியலின் தனித்துவம் என்ன? கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்த்து புதியதோர் சுயமரியாதை உலகத்தைப் படைக்க ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன? என்பனவற்றையெல்லாம் இந்த மாநாடு விவாதிக்க இருக்கிறது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவார்ந்த உரை தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் அமைய இருக்கிறது. தந்தை பெரியாரால் – திராவிட இயக்கத்தால் சுயமரியாதை உணர்வும், சமூக நீதியும் பெற்ற தமிழர்கள் உலகெங்கும் பல்வேறு நாடுகளிலும் உயர் பொறுப்புகளுடன் சிறப்பான வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் பெற்ற வாய்ப்பை தமிழர்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதிலும், உலகம் முழுவதிலும் தந்தை பெரியாரின் சிந்தனைகள் போய்ச் சேர வேண்டும் என்பதிலும் பெரு முனைப்புக் காட்டி பேரூக்கத்தோடும்; உவகையோடும் பணியாற்றும் திராவிட இயக்கப் பற்றாளர்கள் இம்மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். ஜப்பானில் இயங்கும் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம், பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்கா), பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் (ஆஸ்திரேலியா), பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் (கனடா) ஆகிய அமைப்புகள் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன. ஜப்பான் நாட்டின் மனித உரிமை சிந்தனையாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கிறார்கள். இன்று – நேற்று அல்ல, 40 ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பான் மனித உரிமை அமைப்பினருடன் சந்தித்து கருத்துகளைப் பரிமாறியவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

உலக நாத்திகச் சங்கத்தில் திராவிடர் கழகத்தை ஒரு மக்கள் இயக்கமாக அடையாளப்படுத்தியவரும் அவரே! இதோ இன்னும் இரு நாட்களில் ஜப்பானில் பெரியார் பன்னாட்டு மாநாடு தொடங்க இருக்கிறது. பூகம்பத்துக்குப் பெயர் போன ஜப்பானில்  ‘ஈரோட்டுப் பூகம்பம்’! ஆனால் இது முற்றிலும் மனித குல மேன்மைக்கானது – நன்மைக்கானது!

பெரியாரை ஜப்பான் அழைக்கிறது! பெரியார் மாநாடு கூட்டி உலகோரை ஜப்பான் அழைக்கிறது! பாஸ்போர்ட் விசா இல்லாவிட்டால் என்ன? நேரலையில் பேரலையாகப் பெரியார் பாய்வார்! ஜப்பான் அழைக்கிறது – வாருங்கள் இணைவோம்!

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *