சுயமரியாதைத் திருமண சட்டம் நிறைவேற்றம் – அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், மாதவன் அவர்கள் சட்ட அமைச்சராக இருந்தபோது நடந்தது!தமிழ்நாட்டில், உச்சநீதிமன்றம் வரை சென்று
அதைத் தடுத்துப் பார்த்தார்கள், அவர்களால் முடியவில்லை!
பெரியார் வெற்றி பெற்றார், எதிர்நீச்சலில் வெற்றி பெற்றார்!
சிவகங்கை, அக்.9 சுயமரியாதைத் திருமண சட்டத்தை நிறைவேற்றிய பெருமை – அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், மாதவன் அவர்கள் சட்ட அமைச்சராக இருந்தபோது நடந்தது. உலக முழுவதும் இன்றைக்குச் சுயமரியாதைத் திருமணம் நடைபெறுகின்ற நிலை வந்திருக்கிறது. தமிழ்நாட்டில், உச்சநீதிமன்றம் வரை சென்று அதைத் தடுத்துப் பார்த்தார்கள். அவர்களால் முடியவில்லை. பெரியார் வெற்றி பெற்றார்! எதிர்நீச்சலில் வெற்றி பெற்றார்! ஆகவேதான், பெரியார் கொள்கை உலக மயம்; உலகம் பெரியார் மயம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சிவகங்கை: ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
்சிவகங்கை மாவட்டக் கழகம் சார்பில், கடந்த 22.08.2026 அன்று மாலை 6 மணிக்கு, சண்முகராஜா கலையரங்கத்தில் சுயமரியாதைச் சுடரொளிகளான சிவகங்கை இரா.சண்முகநாதன், காரைக்குடி என்.ஆர்.சாமி ஆகியோர் நினைவாக அமைக்கப்பட்டிருந்த திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற, ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு
‘பெரியார்’ திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள்!
எனக்கு 11 வயது. கடலூரில், பெரியாரை அழைத்துக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்து திரும்புகிற வழியில், மழை பொழிகிறது. கெடிலம் நதிப் பாலத்தில் வரும்பொழுது, மின்சாரம் இல்லை. ரிக்ஷாவில் பெரியாரை அழைத்து வருகிறோம். ‘பெரியார்’ திரைப்படத்தில் அந்தக் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அப்பொழுதெல்லாம் கை ரிக்ஷாதான். அதே நேரத்தில், ‘பாம்பு, பாம்பு!’ என்று திடீரென்று சத்தம் கேட்டது. தண்ணீர்ப் பாம்பைத் தூக்கி, ரிக்ஷாவின் மேல் யாரோ போட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில், ரிக்ஷாவை பெரியார் திருப்பச் சொல்கிறார். இருட்டு என்பதால், எங்களுக்கு எதுவும் புரியவில்லை. சின்ன பையன்களாக இருந்த நானும், சில இளைஞர்களும் ரிக்ஷாவைச் சுற்றிலும் வந்து கொண்டிருந்தோம். ரிக்ஷாக்காரரும், திரும்பிக் கொஞ்ச தூரம் சென்றுவிட்டு, மீண்டும் ரிக்ஷாவை திருப்பிக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனை நோக்கிப் போகிறார்.
தந்தை பெரியார் அவர்கள் எப்பொழுதும் கையில் ஒரு பெட்டி வைத்திருப்பார். சிறிது நேரம் கழித்து மின்சாரம் வந்தது. திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே நிலையத்தில், இரவு 9.30 மணிக்கு சென்னைக்குச் செல்ல வேண்டிய ரயில் வரும். அய்யா அவர்களை வழியனுப்புவதற்காக என்னுடைய ஆசிரியர் திராவிட மணி மற்ற தோழர்கள் எல்லாம் நின்றிருந்தார்கள். அய்யாவும் ரயில் நிலையத்தை வந்தடைந்தார். ரயில் வருவதற்கு இன்னும் 15, 20 நிமிடங்கள் இருந்தன. மாணவர்கள், இளைஞர்களாகிய நாங்கள் அய்யாவை பார்த்து, ஆச்சரியப்பட்டு அப்படியே சுற்றி நின்று கொண்டிருந்தோம். தோழர்களிடம் அய்யா பேசிக் கொண்டிருந்தார்.
தந்தை பெரியாரின் கேள்வியும் –
தோழர்களின் பதிலும்!
அப்பொழுது அய்யா, ‘‘என் கூட வந்தீங்களே, நான் ஏன், ரிக்ஷாவைத் திருப்பச் சொன்னேன் என்று தெரியுமா?’’ என்று கேட்டார்.
‘‘அய்யா, நீங்கள் ரிக்ஷாவைத் திருப்பச் சொன்னீங்க; மறுபடியும், திரும்பி வந்தீங்க. அது எதனால் என்று எங்களுக்குத் தெரியாது. ஏதாவது காரணம் இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஏனென்றால், உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கவலையாக இருந்தது’’ என்று தோழர்கள் கூறினார்கள்.
அப்பொழுது அய்யா அவர்கள் சிரித்துக் கொண்டே, கையில் வைத்திருந்த பெட்டியைத் திறக்கிறார். அந்தப் பெட்டியில், இரண்டு செருப்புகள் இருந்தன; அதை எடுத்துக் எங்களிடம் காட்டினார்.
ஒரு செருப்பால் அவர்களுக்கும் பயனில்லை; எனக்கும் பயனில்லை!
நாம் பாலத்தில் வரும்போது, என்மீது ஒரு செருப்பு வந்து விழுந்தது. சரி, என்னைப் பார்த்துத்தான் வீசியிருக்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆனால், ஒரே ஒரு செருப்புதானே வீசியிருக்கிறார்கள்; ஒரு செருப்பை வைத்துக்கொண்டு அவர்களுக்கும் பயனில்லை; எனக்கும் பயனில்லை என்று நினைத்துத்தான், ரிக்ஷாவை திருப்பச் சொன்னேன். நான் நினைத்தது மாதிரி, இன்னொரு செருப்பும் என் மேல் வந்து விழுந்தது; அதை எடுத்துக்கொண்டு வந்தேன். அந்த செருப்புகள்தான் இவை’’ என்றார்.
இந்த நிகழ்வு நடந்தது 1944 ஆம் ஆண்டு, ஜூலை 29 ஆம் நாள் நடந்தது. பெரியார் மீது பாம்பு வீசப்பட்ட இடத்தில், செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், 1972 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்தார், பெரியார் முன்னிலையிலேயே – ஒரு பெரிய விழாவாக அச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.
‘‘செருப்பு ஒன்று போட்டால்,
சிலை ஒன்று முளைக்கும்!’’
கவிஞர் கருணானந்தம் அவர்கள் ஒரு பாட்டு எழுதினார், ‘‘செருப்பு ஒன்று போட்டால், சிலை ஒன்று முளைக்கும்’’ என்று. இதுதான் வரலாறு. ஆகவே, செருப்புகள் வீசப்பட்டாலும், சிறப்புகள் செய்யப்பட்டாலும் எங்களுக்கெல்லாம் ஒன்றுதான்!
தளபதி பட்டுக்கோட்டை அழகிரி உரை யாற்றும்போது, கற்களை வீசினார்கள். அழகிரி சொல்லு வார், ‘‘கற்களை வீசுறீங்களா, வீசுங்க வீசுங்க, அது எங்களை மேலும் மேலும் உரத்திப் பேசச் சொல்லும்’’ என்று.
சட்ட அமைச்சராக இருந்த
வழக்குரைஞர் மாதவன்!
அப்படி எதிர்ப்பையெல்லாம் சமாளித்து, அன்றைக்கு ஒரு பெரிய சிறப்பு, மிகப்பெரிய அளவுக்கு தி.மு.க. ஆட்சி, அதன்மூலம் சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக செய்யக்கூடிய வாய்ப்பு வந்தது. அந்த வெற்றி எப்படி கிடைத்தது? அண்ணா காலத்திலே சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தைச் செய்கிற வாய்ப்பு யாருக்கு வந்தது என்றால், இந்த மாவட்டத்துக்குத்தான் அந்தப் பெருமை. சிங்கம்புணரியைச் சார்ந்த நம்முடைய வழக்குரைஞர் மாதவன் அவர்கள்.
பெரியார் கொள்கை உலக மயம்;
உலகம் பெரியார் மயம்!
மாதவன் என்ற பெயர் இருக்கிறதே, அந்தப் பெயருக்கு, கேரளாவிலேயும் மிகச் சிறப்பு; அங்கே இருந்தவர் டி.கே.மாதவன். இங்கே தமிழ்நாட்டில் இருந்தவர் செ.மாதவன். சிங்கம்புணரியைச் சேர்ந்த சட்ட அமைச்சர். அய்யாவிடம் சொல்லிவிட்டு, அவர் இரண்டு முறை, தனித் தீர்மானம் கொடுத்தார். அப்பொழுது அது நிறைவேற்றப்படவில்லை. அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், சுயமரியாதைத் திருமண சட்டத்தை நிறைவேற்றிய பெருமை, மாதவன் அவர்கள் சட்ட அமைச்சராக இருந்தபோது நடந்தது. உலகம் முழுவதும் இன்றைக்குச் சுயமரியாதைத் திருமணம் நடைபெறுகின்ற நிலை வந்திருக்கிறது. தமிழ்நாட்டில், உச்சநீதிமன்றம் வரை சென்று அதைத் தடுத்துப் பார்த்தார்கள். அவர்களால் முடியவில்லை.
ஆகவேதான், பெரியார் கொள்கை உலக மயம்; உலகம் பெரியார் மயம் என்று சொல்லக்கூடிய ஒரு சிறப்பு வந்தது.
(தொடரும்)
