புதுடில்லி, அக். 08- தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற வேண்டும் என்ற தீர்ப்புக்கு மாறாக, தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சரை இடம்பெறச் செய்து 2023-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது, இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்சந்திர சர்மாவின் மகன் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையத்துக்காக ஆஜராகி வருவதால், இந்த வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி சதீஷ் சந்திர சர்மா விலகியிருக்க வேண்டும். ஆனால் அவர் விசாரணை நடத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வு பரிந்துரை செய்து தீர்ப்பளித்துள்ளார். எனவே, தீர்ப்பை திரும்பப்பெற மனு தாக்கலானது. இம்மனு மீது உரிய முடிவெடுப்போம் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு நேற்று உறுதியளித்தது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு
98% அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்குச் சென்றுள்ளனர்
திருச்சி, அக். 08- 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத மொத்தம் 8,27,475 மாணவர்கள் பதிவு செய்தனர். இதில் 7,91,654 பேர் தேர்வை எழுதினர். 7,53,694 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி விகிதம் 95.20%. அரசுப் பள்ளி தேர்ச்சி விகிதம் 92.16% ஆகும். திருச்சி மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று தேர்வெழுதிய மாணவர்களில் 98 சதவீதம் பேர் உயர் கல்வி பயின்று வருகின்றனர். இதனால், உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாட்டில் அளவில் திருச்சி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 108 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 10,875 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர். இதில், 10,552 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 323 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அரசுப் பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்த 10,552 மாணவர்களில் 10,357 பேர் (செப். 25-ஆம் தேதி வரை) கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
மேலும், தேர்ச்சி பெறாத 353 மாணவர்களில் 256 மாணவர்கள் பாலிடெக்னிக், அய்டிஅய் போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 10,613 மாணவர்கள், அதாவது 98 சதவீதம் பேர் உயர்கல்வி சேர்க்கை பெற்றுள்ளனர். அந்த வகையில் பிளஸ் 2 படித்த அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கையில் மாநில அளவில் திருச்சி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
