இந்நாள் – அந்நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுநாள் இன்று (08-10-1959)

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ஒரு சிறந்த பாடலாசிரியர், எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி பாடியது இவருடைய தனிச் சிறப்பாகும்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு (சங்கம்படைத்தான்காடு) என்ற கிராமத்தில் அருணாச்சலனார் – விசாலாட்சி இணையருக்கு இளைய மகனாக 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாளில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையும் கவிபாடும் திறன் பெற்ற நாட்டுப்புறக் கவிஞர். உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத் தில் ஆரம்பக் கல்வி மட்டுமே படித்தார்.

குடும்பத் தொழிலான விவசாயம் மட்டுமின்றி, உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், இட்லி கடை என 10 க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவந்தார்.

சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்கள்  பத்திரிகையிலும் வெளி வந்தன.

இளம் வயதிலேயே விவசாயச் சங்கத்திலும், பொதுவுடைமை இயக்கக் கட்சியில் ஈடுபாடு கொண்டி ருந்தார். 1952 இல் புதுச்சேரி சென்று  புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய “குயில்” இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். தனக்கு தமிழ் கற்பித்த குரு “பாரதிதாசன் வாழ்க!” என்று எழுதிவிட்டுதான் கடிதம் எழுதத் தொடங்குவார்.

29 ஆண்டுகளே வாழ்ந்த கவிஞர், தன் கவிதைகள் மூலம் நூற்றாண்டுகளைக் கடந்த பகுத்தறிவு,  பொதுவுடைமை சமத்துவக் கருத்துகளை விதைத்தவர்.

“தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது

ஆனாலும் மக்கள் வயிறு காயுது”

என்ற இரண்டே வரிகளில் உழைக் கும் மக்களின் பசியை, வறுமையை உலகுக்கு உணர்த்தியவர்.

‘தாலி கட்டிக்கிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து கட்டிக்கணும்’ என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பெண் ணுரிமைக் கருத்துகளை வலியுறுத்தி திரைப்படப் பாடலாகத்  தந்தவர் பட்டுக்கோட்டையார் ஆவார்.

பட்டுக்கோட்டையார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மீது அதீத பற்றுடையவர். கவுரவம்மாள் – பட்டுக் கோட்டையாரின் திருமணம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் தான் நடந்தது.

ஆறு ஆண்டு காலத்திற்குள் 209க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார்.

பொதுவுடைமை இயக்கக் கொள்கைகளைப் பரப்ப அயராது பாடுபட்டார். ஏராளமான தத்துவப் பாடல்களை எழுதியுள்ளார். ‘படித்த பெண்’ திரைப்படத்துக்காக 1955 இல் முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தார்.

1959 வரை எம்ஜிஆர் நடித்த 7 திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.  அவை அனைத்துமே காலத்தால் அழியாதவையாகத் திகழ்கின்றன. இயற்கை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, சோகம், நாடு, சமூகம், அரசியல், தத்துவம், பாட்டாளி வர்க்கம் ஆகியவை இவரது பாடல்களின் கருப்பொருளாக இருந்தன.

‘சின்னப் பயலே சின்னப் பயலே’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னரே’  ஆகியவை குறிப்பிடத்தக்க பாடல்கள் ஆகும். எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தியவர். பாடுவதிலும் வல்லவர்.

மக்கள் கவிஞர் என்ற பட்டம், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கி சிறப்பு செய்யப்பட்டன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 ஆம் வயதில் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாளில் மறைந்தார். குறுகிய காலமே வாழ்ந்த இவர், அதற்குள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நிகழ்த்தவேண்டிய சாதனைகளை நிகழ்த்திவிட்டார்.

இவரது மறைவு குறித்து தி.மு.க.  தலைவர் கலைஞர் அவர்கள் “கண்களை மூடுகிறேன்; கல்யாணம் தெரிகிறார் – ஒளி தெரிகிறது! கண்களைத் திறக்கிறேன்: கல்யாணம் இல்லை – கலையுலகு இருட்டாயிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இவரது பாடல்கள் தொகுப்பு 1965 இல் வெளிவந்தது. இவரது பாடல்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில்   மணிமண்டபம்  அமைத்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் மார்பளவு சிலையும் வைக்கப்பட் டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

தகவல் :  பாணாவரம் பெ. வீரமணி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *