‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஜாதி ஒழிப்புத் தீர்மானம்!
மாநாட்டிலேயே ஜாதிப் பட்டங்களைத் தூக்கியெறிந்த தலைவர்கள்!

இந்தியாவிலேயே அமைதிப் புரட்சியை உருவாக்கிய முதல் இயக்கம்தான், தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கம்!

சிவகங்கை, அக்.7  1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஜாதி ஒழிப்புத் தீர்மானம்! மாநாட்டிலேயே ஜாதிப் பட்டங்களைத் தூக்கியெறிந்த தலைவர்கள்! இந்தியாவிலேயே அமைதிப் புரட்சியை உருவாக்கிய முதல் இயக்கம்தான், தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

Contents

சிவகங்கை: ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சிவகங்கை மாவட்டக் கழகம் சார்பில், கடந்த 22.08.2026 அன்று மாலை 6 மணிக்கு, சண்முகராஜா கலையரங்கத்தில் சுயமரியாதைச் சுடரொளிகளான சிவகங்கை இரா.சண்முகநாதன், காரைக்குடி
என்.ஆர்.சாமி ஆகியோர் நினைவாக அமைக்கப்பட்டிருந்த திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற, ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாட்டில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

இந்த சிறப்பு மிகுந்த சிவகங்கையில் மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடைபெறக்கூடிய எதிர்நீச்சலில் வென்ற பெரியார்  80 ஆம் ஆண்டு விழா என்ற தலைப்பிலே, திறந்தவெளி மாநாடாக இந்த மாநாட்டை குறுகிய காலத்தில் அறிவித்தாலும், மிகச் சிறப்பாக திராவிடர் கழகம் மற்றும் நம்முடைய தோழமைக் கட்சிகளிலே குறிப்பாக தாய்க் கழகத்தினுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவை  சிறப்பாக இணைந்து இந்த அருமையான ஒரு திறந்தவெளி மாநாடு. இந்த மாநாட்டில் கலந்து கொள்கிற அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே, பல்வேறு பகுதிகளிலே இருந்து வந்திருக்கக்கூடிய தாய்மார்களே, சகோதரிகளே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவிலேயே அமைதிப் புரட்சியை உருவாக்கிய முதல் இயக்கம்தான், தந்தை பெரியாருடைய
சுயமரியாதை இயக்கம்!

இந்த மாநாட்டினுடைய தனிச் சிறப்பைப் பற்றி, ஏன் இது திறந்தவெளி மாநாடாக இருக்கிறது என்பதற்கு ஒரு தனித்த அடையாளம் – இங்கே சுயமரியாதைச் சுடரொளிகள் அத்துணைத் தோழர்களும், அன்று இந்த மேடையைக் கட்டுவதற்கு, எதிர்ப்புகளை எல்லாம் துச்சமாகக் கருதி, எப்படி அரும்பாடுபட்டிருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டானவர்தான், அருமை அய்யா இந்தச் சிவகங்கை சீமைக்கே ஒரு பெருமையை உண்டாக்கிய, ஆரம்ப காலப் போராட்ட வீரர் அய்யா இராமச்சந்திரனார் அவர்கள். இராமச்சந்திரன் சேர்வை என்றால்தான், ஜாதிப் பட்டத்தோடு சொன்னால்தான் அந்தக் காலத்தில் மரியாதை என்று நினைத்தார்கள். ஆனால், அவரும் தந்தை பெரியார் அவர்களும் கொண்டு வந்த 1929 ஆம் ஆண்டிலேயே ஜாதி ஒழிப்புத்  தீர்மானம்,  இந்தியாவுக்கே வழிகாட்டிய ஒரு பெருமை உண்டென்றால், செங்கல்பட்டு மாநாட்டிற்குத்தான். அந்தச் செங்கல்பட்டு மாநாட்டைப்பற்றி ‘நமது குறிக்கோள்’ என்கிற புத்தகத்தில் தெளிவாக இருக்கிறது. தந்தை பெரியார் தலைமையில்  97 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த மாநாடு அது. சுயமரியாதை இயக்கம் தொடங்கிய முதல் மாநாடு அது. அந்த மாநாட்டில், ஜாதிப் ஒழிப்புக்குத் திட்டம் தீட்டுகிறார். ஜாதி பட்டத்தைப் பெயருக்குப் பின்னால் போட்டால்தான் மரியாதை என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. அதனால்தான், அன்றைக்குப்  ‘பெரியார்’ என்ற பட்டம் இல்லை, அய்யாவுக்கு. அவரைக் கவுரவமாகக் கூப்பிட வேண்டும் என்றால்,  ‘நாயக்கர்’ என்றும்,  ‘ராமசாமி நாயக்கர்’ என்றும் கூப்பிடுவார்கள். அதே மாதிரி இராமச்சந்திரன் சேர்வை, சவுந்தரபாண்டிய நாடார்,  திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராசுலு நாயுடு, காமராஜ் நாடார் என்று அழைத்தார்கள்.  இப்படி எல்லாம் சொன்ன காலம் ஒரு காலத்தில் இருந்தது. அதையெல்லாம் மாற்றுவதற்கு, அமைதிப் புரட்சியை உருவாக்கிய இந்தியாவிலேயே முதல் இயக்கம்தான், தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கம்.

 ‘நமது குறிக்கோள்’ புத்தகம்!

அந்த சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய போது, முதல் தீர்மானம். ‘நமது குறிக்கோள்’ என்ற புத்தகத்தில் தெளிவாக எடுத்து விளக்கப்பட்டுள்ளது. டாக்குமென்டேஷன் – ஆவணப்படுத்தப்படக்கூடியதில், ஒரு வகுப்பில் சொல்வதுபோன்று சொல்ல வேண்டும். அது என்னவென்று இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. அதுமட்டுமல்ல, இந்த நோய் மீண்டும் வந்திருக்கிறது. உங்களுக்கெல்லாம் தெரியும், கோவிட் தொற்று, ஒழிந்துவிட்டது என்று நினைக்க முடியாது. அதனால், மருந்து தேவையில்லை என்று நினைக்க முடியாது. மருத்துவர்கள் தேவையில்லை என்று  நினைக்க முடியாது. மருத்துவமனை தேவையில்லை என்று நினைக்க முடியாது. மீண்டும் வரும், திரும்ப வரும். ஆகவேதான், எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். என்றைக்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு!

1926 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது. அவ்வியக்கம் தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் மாநாடு செங்கல்பட்டில் நடந்தது. அதனுடைய நூற்றாண்டு நிறைவு மாநாடு – கடந்த ஆண்டு, நம்முடைய முதலமைச்சர், ‘திரா விட மாடல்’ ஆட்சியினுடைய முதலமைச்சரை அழைத்துத்தான் நிறைவு விழா நடத்தினோம். அதில் சிறப்பாக ஜாதி ஒழிப்புக்கு அடுத்த கட்டத்துக்கு அவர் போனார். மிகப்பெரிய அளவுக்கு ஆணவக் கொலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன, ஜாதி வெறி காரணமாக. அதையெல்லாம் தடுப்பதற்காக, அந்த மாநாட்டில் நாங்கள் தீர்மானம் போட்டோம். முதலமைச்சரிடம் அதைக் கொடுத்தோம்.

‘‘ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு, இந்த அரசு சட்டம் கொண்டு வரும். அதற்கு ஏற்ப ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பாஷா அவர்களை நியமிக்கும். அந்தக் குழு,  ஆணவக் கொலையைத் தடுப்பது எப்படி? ஜாதிவெறி காரணமாக நடக்கக்கூடிய கொலைகளைத் தடுப்பது எப்படி? என்று மிகத் தெளி வாக எடுத்துக்காட்டும்’’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கேயே அறிவிக்கின்ற வாய்ப்பைப் பெற்றார்.

புத்தகங்களை வாங்க வேண்டும், படிக்க வேண்டும், மற்றவர்களுக்கும் பரப்ப வேண்டும்!

இதற்கு விதை எங்கே இருக்கிறது? அதுதான் செங்கல்பட்டு மாநாட்டினுடைய சிறப்பு. நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். தோழர்களே, நாங்கள் ‘நமது குறிக்கோள்’ போன்ற புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். எதற்காக? வியாபாரத்திற்காக அல்ல. நாங்கள் ஒரு 45 நிமிடம் அல்லது  ஒரு மணி நேரம் பேசலாம். அதற்குள் எல்லா செய்திகளையும் சொல்லிவிட முடியாது. அதற்காகத்தான், நாங்கள் பேசுவது ஆதாரங்களின்படிதான். ஒரு செய்தி கூட, கற்பனை கிடையாது. ஒரு செய்தி கூட யாரையும் அவதூறுக்கு உள்ளாக்குவதற்காக அல்ல. அப்படிப்பட்ட ஆதாரங்கள்தான் இந்தப் புத்தகங்கள். அதனை தோழர்கள் உங்களிடம் கொண்டு வருவார்கள். அவற்றை நீங்கள் வாங்க வேண்டும், படிக்க வேண்டும், மற்றவர்களுக்கும் பரப்ப வேண்டும்.

யாருக்காக? எங்களுக்காக அல்ல; உங்கள் சந்ததிக்காக. நம்முடைய உரிமை வாழ்வுக்காக. நம்முடைய மான வாழ்வுக்காக. அப்படிப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது,  ‘நமது குறிக்கோள்’ புத்தகம் ஒன்று. அப்பொழுது நம்மில் பலர் பேர் பிறக்கவில்லை. என்னை மாதிரி மட்டுமல்ல, உங்களில் பலபேர் பிறக்காத காலத்திலே, அந்த மாநாடு நடைபெற்றது. அதிலே முக்கிய பங்கு வகித்தது யார்? இந்த நகரத்தைச் சார்ந்து, பிறகு ஜில்லா போர்டு பிரசிடெண்டாக இருந்த  இராமச்சந்திரனார் அவர்கள்தான். இராமச்சந்திரன் சேர்வை என்ற அடையாளத்தோடு இருந்தார். அப்படிப்பட்டவரிலிருந்து தொடங்குகிறது. அதுதான் மிக முக்கியம்.  சாதாரணமானவர் அல்ல, பிரபலமான வழக்குரைஞர் அவர்.

அந்த மாநாட்டில், ‘ஜாதியை ஒழிக்கிறோம்’ என்ற தீர்மானத்தை அவர் முதலில் முன்மொழிந்தவுடன், பெரியார் வழிமொழிகிறார். ஒவ்வொருவரும் ஜாதிப் பட்டத்தை விடுகிறார்கள். அந்தப் புரட்சிக்கு இந்த மண்ணிலிருந்து பெரிய ஆதரவு கிடைத்தது, அந்த காலத்தில்.

செங்கல்பட்டு மாநாட்டில்
ஜாதி ஒழிப்புத் தீர்மானம்!

1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஜாதி ஒழிப்புத் தீர்மானம்.

‘‘மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டுவிட வேண்டும் என்றும் இந்த மாநாடு ஜனங்களைக் கேட்டு கொள்கிறது.’’

தீர்மானத்தைப் படித்து முடித்தவுடன், இராமச்சந்தி ரன் முதலில் எழுந்து, ‘‘இராமச்சந்திரன் சேர்வை என்று அழைக்கப்படுகின்ற நான், இனிமேல் இராமச்சந்தி ரன் என்று அழைக்கப்படுவேன்’’ என்று அறிவித்தார். பெரியார், எழுந்து, ‘‘ராமசாமி நாயக்கர் என்று அழைக்கப்படுகின்ற நான், இனிமேல் வெறும் ஈ.வெ.ராமசாமிதான்’’ என்று சொன்னார்.

சவுந்தரபாண்டியன் எழுந்து, ‘‘சவுந்தரபாண்டிய நாடார் என்று அழைக்கப்படுகின்ற நான், இனிமேல் சவுந்தரபாண்டியன் என்று அழைக்கப்படுவேன்’’ என்றார்.

இன்றைக்கும் ஜாதிவெறி குறையவில்லை!

அந்தக் காலத்தில், வைதீகத்தின் மீது, ஸநாதனக் கோட்டையின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு அது. அது சாதாரணமானதல்ல. ஏன்? அந்த அளவிற்கு ஜாதி வெறித்தனம் இருந்தது. இன்றைக்கும் ஜாதிவெறி குறையவில்லை. இன்றைக்கு வேறு விதத்தில் வருகிறது.

கோவிட்–19 முடிந்தாலும், வேறு ரூபத்தில் மறுபடியும், மறுபடியும் அந்தக் கிருமிகள் எப்படித் தாக்குகின்றனவோ, அதேபோலத்தான் இன்றைக்கும் ஜாதி, வெவ்வேறு ரூபத்தில் வந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார். இன்னமும் திராவிடர் கழகம் தேவைப்படுகிறது. இன்னமும் பிரச்சாரமும், கிளர்ச்சியும் தேவைப்படுகிறது. அதைத் தோழர்கள் நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். எங்களைத் தவிர, இந்தச் செய்திகளை யாரும் துணிச்சலாக உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள். காரணம், மற்றவர்களுக்குப் பல தொல்லைகள் இருக்கிறது; பல ஆசைகள் இருக்கிறது. நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. விடாப்பிடியாக செய்வோம். அதிலும் தந்தை பெரியார் அவர்கள், தனி மனிதராக இந்த இயக்கத்தைத் தொடங்கினார். எவ்வளவு எதிர்ப்பு? அது சாதாரணமானதா? அந்த எதிர்ப்பிலே வளர்ந்தவர் பெரியார். ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆண்டுகள்’’ என்ற தலைப்பில், எங்கெங்கே பெரிய கலவரமோ, மோசமோ நடந்ததோ, அந்த ஊர்களில் எல்லாம் வரிசையாக மாநாடு போட்டுக் கொண்டிருக்கின்றோம். ஏனென்றால், ஓர் இயக்கத்தை நடத்த வேண்டும். ஒரு கொள்கையைப் பரப்ப வேண்டும். ஒரு லட்சியப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று சொன்னால் தோழர்களே, அது நல்ல துணிச்சலோடு இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்க்கக் கூடாது. நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. அதற்காகவே இருக்கிறவர்கள். அதனால்தான் மக்கள் மத்தியில் இந்த ஆபத்து வரக்கூடாது என்று பாடுபட்டுக் கொண்டி ருப்பவர்கள்.

பிளேக் நோய் என்பது காலரா நோயைவிட, அம்மை நோயை விட மிகக் கொடுமையானதாகும்!

ஈரோட்டில், பெரியார் அவர்கள் முனிசிபாலிட்டி தலைவராக இருந்தார் – நகராட்சித் தலைவர்.  1917 ஆம் ஆண்டு காலகட்டம்.  அப்பொழுது ‘பிளேக் நோய்’ என்று வந்தது. எலிகள் எல்லாம் பொத்து பொத்தென்று செத்து விழும். அந்த நோய் வந்தால், பிழைக்க மாட்டார்கள். பிளேக் நோய் என்பது காலரா நோயைவிட, அம்மை நோயை விட மிகக் கொடுமையானதாகும்.

எங்களுக்கு, எங்களுடைய உயிர் வெல்லம் அல்ல!

அந்த பிளேக் நோய் வந்த காலகட்டத்தில், யாரும் போகத் துணியவில்லை. அப்போது சேர்மேனாக இருந்த பெரியார்,  உடனே போனார். அந்த துணிச்சல் எங்களுக்கு உண்டு. அதே மாதிரிதான் நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், கரோனா தொற்று வந்த காலத்தில், எந்த முதலமைச்சரும், மருத்துவமனையில் கரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவப் பகுதிக்குப் போய் நோயாளியைப் பார்க்கவில்லை. இவர்தான் வேகமாக உள்ளே போனார். நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால், அது, பாரம்பரியம். தொண்டு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், ராணுவத்துக்கு வருவார்கள். ஒரு டாக்டர், ‘‘அய்யயோ, என்னை நோய்த் தொற்றிக் கொள்ளும்’’ என்று சொல்லுவாரா? செவிலியர் சொல்லுவார்களா? பறவைக் காய்ச்சல் வந்தவர்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்ததினால், அவர்கள் இறந்து போனார்கள். அதேபோல, புற்றுநோயை எதிர்த்து சிகிச்சை கொடுக்கிற டாக்டர்கள், அடிக்கடி ரேடியேஷன் கொடுக்கின்ற பணியைச் செய்வதினால், அவர்களுடைய ஆயுள் குறையும். ஆனால், அதற்காக அவர்கள் பயப்பட மாட்டார்கள். அது மாதிரி, தற்கொலை பட்டாளம் போல இருப்பதுதான் இந்தக் கருஞ்சட்டைப் பட்டாளம். எங்களுக்கு, எங்களுடைய உயிர் வெல்லம் அல்ல; மக்கள் திருந்த வேண்டும், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த பணிகளைச் செய்கிறோம்.

ஜாதி போதை, மத போதை; இவற்றை அவ்வளவு சீக்கிரத்தில் ஒழிக்க முடியாது!

ஆனால், மக்களுக்குப் புரியாது, உணர்ச்சி வசப்படுவார்கள். ஆரியத்துக்கு அந்தச் சக்தி உண்டு. ஆரியம், எப்போதுமே நேரடியாக வந்து எதிர்த்ததாக வரலாறே கிடையாது. நம்முடைய ஆட்களுக்கு  போதையை ஊட்டிடுவான். அதனால், போதையில் ஆடுவார்கள் நம்மாட்கள். இங்கே சொன்னார் பாருங்கள், அய்ந்து, ஆறு போதைகளைப்பற்றி. அதில், இந்தப் போதையால்  மாணவர்கள் கெட்டு போகக் கூடாது என்று கவலைப்படுகிறோம். அந்தப் போதை வஸ்துக்கள் பரவக்கூடாது. அந்தப் போதையெல்லாம் விட மிக ஆபத்தான போதை எதுவென்றால்,  ஜாதி போதை, மத போதை. இவற்றை அவ்வளவு சீக்கிரத்தில் ஒழிக்க முடியாது. அதிலும் இப்போது அதிகமாகச் சேர்ந்தது, இங்கே சுட்டிக் காட்டியதுபோன்று சினிமா போதை. இன்னொரு போதை என்னவென்றால், கைத்தொலைப்பேசி போதைததான். யாரைப் பார்த்தாலும் தங்களுடைய நேரத்தை அதிலயே வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில், சாப்பிடும் போது கூட ஒன்றாகக் கலந்து பேசி, மகிழ்ச்சியாக சாப்பிடுவது இல்லை. ஒரே குடும்பத்தில், அய்ந்து பேர், அய்ந்து பக்கம் திரும்பிக் கொண்டிருப்பார்கள். சாப்பாடு சூடு ஆறுகிறது என்று கவலைப்படுவதில்லை. அய்ந்து பேர் அமர்ந்துகொண்டு, அய்ந்து பக்கம் திரும்பிக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாலையில் போகும்போது, தன்னாலேயே ஒருவர் பேசிக் கொண்டு போகிறார். என்னடா, அவருடன் யாரும் போகவில்லையே, ஆனால், பேசிக் கொண்டே போகிறாரே என்று பார்த்தால், காதில் வெள்ளையாக ஒன்றை மாட்டிக் கொண்டு, ‘‘ஆ, சரியாக இருக்கு, ஆமா, அப்படியா?’’ என்று  மகிழ்ச்சியாக சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்.  நல்லாதானே இருக்கார், இவருக்கு என்னாயிற்று? என்று நினைக்கிற அளவிற்கு இருக்கிறது. அதிலேதான், அவர்களுக்கு மகிழ்ச்சி என்ற நிலை

ஜாதி, 3 ஆயிரம், 4 ஆயிரம்  ஆண்டுகளாக ஆன சூழ்நிலையிலே, இதை எதிர்த்துச் சொன்னால், அவர்களை வெட்டுகிறார்கள்.  மது போதை, கஞ்சா போன்ற போதையை யார் கண்டிக்கிறார்களோ, அவர்களை வெட்டிக் கொல்கிறார்கள். பன்னாட்டு மாபியா குரூப் இருக்கிறது. அதே மாதிரி, பள்ளிக்கூடத்தில் போய், ஒரு மாணவன் தட்டிக் கேட்டார் என்பதற்காக, கோயம்புத்தூரில், அந்த மாணவனின் நிலை என்னானது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், திசை திருப்புகின்ற மாதிரி காரணங்களைச் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு போதை மாதிரி, அதைவிட ஆபத்தானது ஜாதி போதை, மத போதை. மதக்கலவரம், ஜாதிக் கலவரம் இதெல்லாம் வருவதற்கு அடிப்படையாக இருக்கக் கூடாது.

100 ஆண்டுகளுக்கு முன்னால்….

என் ஜாதி, பெரிது, உன் ஜாதி பெரிது, என் ஜாதிப் பெருமை, உன் ஜாதிப் பெருமை என்பதையெல்லாம் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் தடுத்து நிறுத்துவதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள்  100 ஆண்டுகளுக்கு முன்னால், தீர்மானம் நிறைவேற்றினார், 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த மாகாண முதல் மாநாட்டில்.

இராமச்சந்திரன் சேர்வை, வரதராசுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், நாயக்கர் பெரியார் ஆகியோர் தங்களுடைய ஜாதிப் பட்டத்தை அன்றைக்குத் தூக்கி எறிந்தனர் என்பது வரலாறு.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *