ஜிஎஸ்டி வரி வசூல் சரிவை மறைக்க த.வெ.க. அரசு முயற்சி முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 7 தமிழ்நாட்டில் மூன்று மாதங்களாகத் தொடர்ந்து ஜிஎஸ்டி வரி வசூல் சரிவடைந்து வருகிறது. இதை மறைக்க தவெக அரசு எண்களை வைத்துக் கணக்குக் காட்டி மக்களை ஏமாற்ற முயல்கிறது’ என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று மாதங்களாகத் தொடர்ந்து சரியும் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய், செப்டம்பரில் மட்டும் 5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு மாநிலத்தில் வசூலிக்கப்படும் மொத்த ஜிஎஸ்டி என்பது, அதன் மொத்த பொருளாதார நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாகும்.

எனவே, மாநிலத்துக்குள் நடைபெறும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிவர்த்தனைகள் தொடர்ந்து குறைவது குறித்தும், உள்நாட்டு பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்தும் இதனால் முக்கியமான கேள்விகள் எழுகின்றன.

வரி விகிதக் குறைப்புக்குப் பிறகும் இந்தச் சரிவு தொடர்கிறது. ஆனால், உண்மையான பொருளாதார நிலையைப் பேசாமல் ‘போஸ்ட் செட்டில்மென்ட்டுக்குப் பிறகு 17 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது என்ற கணக்கை மட்டும் முன்வைத்து சமூக வலைதளங்களில் பல காணொலிகளைக் கொண்டு சிலர் இதை நியாயப்படுத்தி வருகின்றனர். 17 சதவீதம் பிந்தைய வருவாய் உயர்வைக் காட்டிக் குழப்புவது உண்மையை மறைக்காது.

மாநிலத்துக்குள் வரி வசூல் ஏன் தொடர்ந்து குறைகிறது என்பதற்கு பதில் சொல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் இறக்குமதி மூலமாகவும் பெறப்படும் பொருட்கள் மீதான அய்ஜிஎஸ்டி வருவாய் எண்ணிக்கையைக் காட்டுவது எந்த வகையிலும் நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி நிலைக்கான முழுமையான விளக்கம் அல்ல.

வருவாய் எண்ணிக்கைகளில் விளையாடுவதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது என்பதற்கு தவெக அரசு பதில் சொல்ல வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திமுக எம்.பி கனிமொழி வெளியிட்ட பதிவில், “கடந்த 3 மாதங்களாக தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து சரிந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் அன்றாடத் தேவைகளுக்குக்கூட செலவழிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வாங்கும் சக்தி குறைந்து, மக்களின் நுகர்வு குறைவதன் தாக்கம்தான் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் சரிவிலும் வெளிப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *