தாம்பரம், அக். 7- தாம்பரம் அருகே சோமங்கலம் புதுப்பேடில் அய்சிஅய்சிஅய் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் மேவாட் கொள்ளைக் கும்பலின் செயல்பாடுகள் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 25ஆம் தேதி அதிகாலை சோமங்கலம் புதுப்பேடில் உள்ள ஏடிஎம் மய்யத்துக்குள் புகுந்த கும்பல், காஸ் கட்டர் மூலம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. இது தொடர்பாக தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், ராஜஸ்தானில் மற்றொரு ஏடிஎம் கொள்ளை வழக்கில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பவன்குமார் (28) கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை யில், புதுப்பேடு கொள்ளையில் 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அரியானாவைச் சேர்ந்த முகமது முஸ்தபா (32) என்பவரையும் அண்மையில் தாம்பரம் மாநகர காவல் துறையினர் கைது செய்தனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
விசாரணையில், அரியானா– ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள மேவாட் பகுதியைச் சேர்ந்த கும்பல், வடமாநிலங்களில் கன்டெய்னர் லாரிகளை திருடி, அதற்குள் காரை மறைத்து தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து கொள்ளையில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. கொள்ளை முடிந்ததும் காரில் தப்பிச் சென்று சொந்த ஊரில் பதுங்குவதாக கூறப்படுகிறது.
மேலும் மேவாட் பகுதியில் ஏடிஎம் இயந்திரங்களை உடைப்பது, கருவிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றில் தனித்தனி குழுக்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும், சில குழுக்களில் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களை அவர்கள் பயன்படுத்துவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
