போதுமான நிதியின்றித் தவிக்கும் தமிழ்நாடு கால்பந்து சங்கம்! வீரர்களை போட்டிகளுக்கு அனுப்பமுடியாத அவல நிலை!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தமிழ்நாடு விளையாட்டுத் துறையின் பாரா முகம் ஏன்?

சென்னை, அக். 06- தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டிற்கான அதிகாரப் பூர்வ அமைப்பான தமிழ்நாடு கால்பந்து சங்கம்(TFA) வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லாமல் தவித்து வருகிறது. இதனால் தங்களால் இந்திய அளவிலான போட்டிகளுக்கு அணிகளை அனுப்ப முடியாத நிலை இருப்பதாக தெரிவித்துள்ளது.

‘‘முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான இச்சங்கம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 2023இல் தமிழ்நாடு கால்பந்து சங்கத்திற்கு தேர்தல் நடத்தவும் இடைக்காலத்தில் சங்கத்தை நிர்வகிக்கவும் ஒரு குழுவை அமைத்தது. சில தனிப்பட்ட காரணங்களால் இச்சங்கம் பல வழக்குகளை எதிர்கொண்டது.

சங்கத்திற்கான தேர்தல் மே 2025 மாதம் நடைபெற்று நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உயர் நீதிமன்றம் இந்த தேர்தலை ரத்து செய்து, மறுதேர்தல் அறிவித்ததால் தலைவரும் மற்றொரு உறுப்பினரும் பதவி விலகினர். பிறகு ஜூலை 2025 இல் உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்தி வைத்து, நீதிமன்றம் அமைத்த குழுவே தொடர்ந்து இயங்க ஆணையிட்டது.

இக்குழு தன் பணிக் காலத்தில் 15 அணிகளை தேர்வு செய்து ஒவ்வொரு அணிகளுக்கும் 7 முதல் 10 லட்சம் வரை செலவிட்டு அனைத்திந்திய போட்டிகளுக்கு அனுப்பியது. இதில் ஆண்கள் இளையோர் அணி கோப்பையை வென்றது. மற்ற அணிகள் சிறப்பாக விளையாடி மூன்றாம் இடம் வரை பெற்றனர். இந்தக் காலத்தில் ஓர் இளையோர் அணி அசாமிற்கு  விமானம் மூலமாக  அனுப்பப்பட்டது. இதற்கான கட்டணத்தை திண்டுக்கல் மற்றும் தமிழ்நாடு கால்பந்து சங்கங்கள் ஏற்றுகொண்டன.

நிதிப் பற்றாக்குறை  

நிதிப் பற்றாக்குறை காரணமாக வீரர்களுக்கு புதிய விளையாட்டுக் காலணிகளைக்கூட வழங்க முடியவில்லை.

அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் (AIFF) விதிகளின் படி, தமிழ்நாடு கால்பந்து   சங்கத்திற்கு ஆண்டிற்கு 25 லட்சம் என மூன்றாண்டுக்கு 75 லட்சம் நிதியளிக்கப்பட்டிருக்க வேண்டும். இக்குழு, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு இல்லை என காரணம் கூறி நிதி அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) மீது தொடரப்பட்ட நீதிப் பேராணைகளுக்கும் பயனில்லாமல் போனது.

சில மாதங்களுக்கு முன் நிதி இல்லாததால் அணிகளைப் போட்டிகளுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது என தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பின் ஏற்பட்ட சிறிய முன்னேற்றத்தால் பெண்கள் இளையோர் அணி போட்டிக்கு அனுப்பப்பட்டது. அந்த அணி 23.09.2026 நடைபெற்ற போட்டியில் மூன்றாம் இடம் பெற்றுற்றது.

தற்போது 4 லட்சத்திற்குக் குறைவாகவே நிதி இருப்பதால் இதற்கு மேல் அணிகளை அனைத்திந்தியப் போட்டிகளுக்கு அனுப்ப முடியாத நிலை உருவாகி உள்ளது. இது தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கால்பந்து வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.’’ என அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *