மக்களாட்சியை ஒழிக்க தேர்தல் மோசடிகள்; ஜனநாயக உரிமைகளை நசுக்க ஒடுக்குமுறையா?

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

எதேச்சதிகாரத் தன்மையோடு செயல்பட்டு எஸ்.அய்.ஆர் (SIR) என்னும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முன்னெடுத்து, 13 கோடி வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்குக் காரணமான தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும், அவரது பதவியையும், அதிகாரத்தையும் ஒன்றிய அரசு பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டியும் இந்தியா முழுமையும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டில்லி, மும்பை, அய்தராபாத் போன்ற முக்கிய நகரங்களில் பல்வேறு கட்சியினரும், இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், மகாராட்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் இணைந்து நேற்று (4.10.2026) மும்பையில் ஒரு போராட்டப் பேரணியை நடத்தினர். மகாராஷ்டிராவில் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிர மறுஆய்வு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்; மின்னணு வாக்குப்பதிவுக்குப்  பதிலாக, வாக்குச்சீட்டு முறை வரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சட்டவிரோதமாகக் குடியேறிய வங்காளதேசத்தவரை அடையாளம் காணுவதற்குத் தான் எஸ்.அய்.ஆர். நடத்தப்பட்டது என்றால், இதுவரை எத்தனை வங்காளதேசத்தவரைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் உத்தவ் தாக்கரே.

டில்லியில் போராட்டம் நடைபெறுவதற்கென்று வழக்கமாக ஒதுக்கப்படும் ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்வதற்கே இளைஞர் காங்கிரசுக்கு அனுமதி மறுத்து அவர்களைத் தடுத்து வைத்துள்ளது பா.ஜ.க. அரசின் காவல்துறை. “நாங்கள் ஜந்தர் மந்தருக்குச் செல்கிறோம் என்பதுதான் விஷயம். அமைதியான முறையில் போராட்டம் நடத்த விரும்பினால் ஜந்தர் மந்தருக்குச் செல்ல வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. ஆனால், மோடியும் ஷாவும் ஞானேஷைக் காப்பாற்ற வேண்டியிருப்பதால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நாட்டின் துரோகியான ஞானேஷைக் காப்பாற்ற முடியாது. நாங்கள் ஜந்தர் மந்தரை நோக்கிச் செல்வோம். ஜந்தர் மந்தர் யாருடைய அப்பன் வீட்டுச் சொத்தும் அல்ல. எங்களை இங்கே தடுக்க முயன்றால், நாங்கள் அங்கேயே அமர்ந்து போராடுவோம்” என்கிறார் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய்பானு சிப்.

700க்கும் மேற்பட்ட இளைஞர்களும், மாணவர்களும், போராட்டக்காரர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ராஜீவ் சவுக், சென்ட்ரல் செக்ரடேரியட், ஜன்பத், படேல் சவுக், சேவா தீர்த்த், மண்டி ஹவுஸ், லோக் கல்யாண் மார்க், அய்என்ஏ, சாவ்ரி பஜார், ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க் மற்றும் புதுடில்லி உள்ளிட்ட அப்பகுதியிலுள்ள பல நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் மூடப்படுவதாக டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்தது.

நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி ஜந்தர் மந்தரை நோக்கி மாணவர்கள் பேரணியாகச் செல்ல முயன்றபோது, அகோகா சாலைக்கு அருகில் உள்ள காவல் துறை தடுப்பு வேலியை அனைத்திந்திய மாணவர் சங்கத் (AISA) தேசியத் தலைவர் நேஹா போரா ஏறிக் கடக்க முயன்றார். அவரைக் கைதுசெய்து, பெண் காவலர்கள் இல்லாத, வாகன எண் பலகையும் இல்லாத காவல்துறை வாகனத்தில் இழுத்துச் சென்றது காவல்துறை/ கடுமையான எதிர்ப்பு ‘இண்டியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமிருந்து எழுந்ததும் ஊடகங்களில் செய்தியானதும், அவரை நரேலா தொழிற்பேட்டை காவல்நிலையத்திலிருந்து விடுதலை செய்தனர்.

முன்னதாக, சனிக்கிழமை (3.10.2026) டில்லியில் நடந்த போராட்டங்களின் போது, காவல்துறை அதிகாரிகள் தங்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக மூன்று பெண் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சில காவலர்கள் தகாத முறையில் தொட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பெண் பத்திரிகையாளர்கள் முன்வைத்துள்ளனர். “காவல்துறையினர் என் முடியைப் பிடித்து இழுத்தனர்” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியும் சமூக ஆர்வலருமான ஆஹ்னா சிங் குற்றம் சாட்டியுள்ளார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும் ஒரு புறம் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்

அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோரை நசுக்குவதன்மூலம், போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று கருதுகின்றன ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க. ஒன்றிய அரசும், மாநில அரசுகளும்!

கடந்த இரு மாதங்களுக்கு முன்னால், ‘நீட்’டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது, காவல்துறையும், அரசும் நடந்துகொண்ட விதம் குறித்து அதிருப்தி வெளியிட்ட உச்சநீதிமன்றம், “அமைதியான மற்றும் சட்டபூர்வமான முறையில் போராடுவதற்கான உரிமை அரசியலமைப்பின் கீழ் முழுமையாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அது அமைதியான போராட்டமாக இருக்கும் வரை… வெறும் போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காக மட்டும் காவல்துறையினர் வரம்பு மீறிச் செயல்பட முடியாது” என்று கண்டனம் தெரிவித்தது. காவல்துறையையும், துணை ராணுவப் படைகளையும் கையில் வைத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு, தனது தகிடுதத்தங்கள் தவிடுபொடியாவதைத் தடுக்க, தடிகளை ஓங்கி வெல்லலாம் என்று கருதுகிறது. மக்களாட்சியை நசுக்கத் தேர்தல் தில்லுமுல்லுகளையும்,  ஜனநாயகக் குரல்களை நசுக்க ஆயுதங்களை நம்பிய அராஜக அரசாங்கங்கள் அடிச்சுவடே இல்லாமல் அழிந்து போயிருக்கின்றன என்பதை வரலாறு மீண்டும் ஒருமுறை பதிவு செய்துகொள்ளும் காலம் தொலைவில் இல்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *