திருவனந்தபுரம், அக்.5 தற்போதைய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமார், கேரளம் மாநில பொதுப்பணித் துறையின் செயலாளராகப் பணியாற்றியபோது அவர் மீது சுமத்தப்பட்ட 20 ஆண்டுகள் பழைமையான ஊழல் குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க, காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணி அரசு நேற்று (4.10.2026) நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதற்காக ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பிரிவு மூலம் முதற்கட்ட விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியி லிருந்து ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் போராட்டம் நடத்தி வரும் சூழலில், கேரள அரசின் இந்த நட வடிக்கை அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
கேரள மாநிலப் போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் ‘முக்கிய மய்யச் சாலையை’ (மெயின் சென்ட்ரல் ரோடு) மேம்படுத்தும் ஒப்பந்தத்தைப் பெற்றிருந்த இந்திய-மலேசியக் கூட்டு நிறுவனமான பேட்-பெல் (‘PAT-BEL’) கூட்டமைப்பிடம் தொடர்ந்து லஞ்சம் கோரப்பட்டதால், திட்டப் பணிகளில் கடும் தாமதமும், செலவு அதிகரிப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க, ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பிரிவு இயக்குநர் மனோஜ் ஆபிரகாமுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கேரளம் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலாவின் அலு வலகம் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளால் அரசுக்குக் கணிசமான நிதி இழப்பு ஏற்பட்டதாகவும், நவம்பர் 2006 இல் கோலாலம்பூரில் இத்திட்டத்தின் தலைமைப் பொறியாளராக இருந்த லீ சீ பின் தற்கொலை செய்துகொண்டதற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. கேரளத்தை முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணி அரசுதான் இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2006 இல் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றப்பிரிவு கண்டறிந்த விவரங்களை, சட்ட ஆலோசனைக்காக உள்துறைத் துறை கோரியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் மலயன்கீழு வேணு கோபால் அளித்த புகாரின் அடிப்படையில் ரமேஷ் சென்னிதலா இந்த விசாரணைக்கு உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
மாநில பொதுப்பணித்துறைச் செயலாளராக இருந்த ஞானேஷ் குமார் அப் பதவியிலிருந்து நீக்கப்படக் காரணமான ‘லீ சீ பின்’ விவகாரத்தைத் தொடர்ந்து, அப்போதைய முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் உத்தரவிட்ட விசாரணையின் முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறும் சென்னிதலா உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞானேஷ் குமாருக்கு எதிரான 2006 ஆம் ஆண்டு விசாரணைகளில் முறையான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும், ‘பின்’ (Been) என்பவரின் குறிப்பில் இருந்த ‘‘குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் அம்சங்களை’’ அவை புறக்கணித்துவிட்டன என்றும் சென்னிதலாவிடம் அளித்த மனுவில் மலயன் கீழு வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்
ஞானேஷ் குமாருக்கு எதிரான விசாரணையை அப்போதைய இடதுசாரி முன்னணி அரசு ரகசியமாக முடக்கியதாகவும், அதன் மூலம் அவர் ஒன்றிய அரசுப் பணிக்குச் செல்ல வழி வகுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடும்போது, முக்கிய மய்யச் சாலை மேம்பாட்டுப் பணிகளின் முதற்கட்டத்தை ஆய்வு செய்த தலைமைத் தணிக்கையாளர் வெளியிட்ட ‘‘கடுமையான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் முடிவுகளையும்’’ கேரளம் உள்துறைத் துறை கருத்தில் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘‘சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முறையான கள ஆய்வு செய்யாமலேயே’’ பேட்-பெல் நிறுவனத்திற்குப் பெருமளவிலான வட்டியற்ற முன்பணத்தை வழங்கியதற்காகப் பொதுப்பணித்துறையை சி.ஏ.ஜி. குறை கூறியதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
நிர்வாகத் திறமையின்மை, சில செலவு களுக்கு ஒப்புதல் அளிப்பதில் அதிகத் தாமதம், சாலை மறுவடிவமைப்பு முன்மொழிவுகளைத் தடுத்து நிறுத்துதல், கட்டுமான நிறுவனத்திற்குச் சாதகமாக ஒப்பந்த விதிமுறைகளை மாற்றியமைக்கச் செலவு அதிகரிப்பைக் காரணம் காட்டுதல் ஆகியவற்றிற்காகவும் பொதுப்பணித்துறையை சி.ஏ.ஜி. சாடியதாக அவர்கள் தெரிவித்தனர்.
மாநிலக் கருவூலத்திற்கு ஏற்பட்ட இழப்பை சுமார் 92 கோடி ரூபாய் என்று சி.ஏ.ஜி. மதிப்பிட் டுள்ளதாகவும், இது ஊழலுக்கு எதிரான புதிய விசாரணைக்கான சட்டரீதியான அடித்தளத்தை அமைத்துள்ளதாகவும் உள்துறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
