5 கிலோ மீட்டருக்கான பெரியார் நடை / ஓட்டத்தினைக் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்!

3 கிலோ மீட்டருக்கான பெரியார் நடை /ஓட்டத்தினைக்
கழகப் பொருளாளர் வீ.குமரேசன்
கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்!
பெருந்திரளானோர் பங்கேற்பு
சென்னை, அக். 4 சென்னை பெசன்ட் நகரில் இன்று (4.10.2026) சமூகநீதிக்காக பெரியார் நடை / ஓட்டம் (5 கிலோ மீட்டர், 3 கிலோ மீட்டர்) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, உலகெங்கும் பெரியார் நடை / ஓட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் பல மாநிலங்களிலும், கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் நடைபெற்றுவரும் பெரியார் நடை /ஓட்டம் நிகழ்வுகளில் குடும்பத்துடன் பெரியார் பற்றாளர்கள், திராவிட இயக்க ஆதரவாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.
தலைமைச் செயற்குழுவில் முடிவு!
கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு வில், தந்தை பெரியார் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடெங்கும் அனைத்துக் கழக மாவட்டங்களிலும் சமூகநீதிக்காக ‘‘பெரியார் நடை/ ஓட்டம்’’ நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தஞ்சாவூரில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.
சென்னையில் இன்று (4.10.2026) காலை 6 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி எதிரே தொடங்கி, பல்வேறு சாலைகளின் வழியாகச் சென்று, 3 கி.மீ., 5 கி.மீ. என இருவேறு தொலைவுகளில் “பெரியார் நடை – ஓட்டம்” நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. குறுகிய கால அறிவிப்பு எனினும், நூற்றுக்கணக்கானோர் periyarwalk.org இணையத்தின் வாயிலாகத் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டனர். அக்டோபர் ஒன்றாம் தேதி மாலை வரை, பதிவு செய்யக் கால அளவு நிர்ணயிக்கப்பட்டிருப்பினும், தொடர்ந்து பதிவுக்கான வேண்டுகோள் வந்துகொண்டேயிருந்ததால், அக்டோபர் 2 ஆம் தேதி நண்பகல் 12 மணிவரை நீட்டிக்கப்பட்டது.
அதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாகத் தங்களுக்கான டி-சர்ட், பங்கேற்பு எண் அட்டை (Bib) உள்ளிட்டவற்றைப் பங்கேற்பாளர்கள் பெரியார் திடலுக்கு வந்து பெற்றுக் கொண்டனர்.
ஜூம்பா நடனப் பயிற்சி
இன்று (4.1.2026) காலை 5 மணி முதலே பெரியார் நடை / ஓட்டம் (மினி மாரத்தான்) நடைபெறும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே பங்கேற்பாளர்கள், கழகத் தோழர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பெருந்திரளாகக் குவியத் தொடங்கினர். தொடக்கத்தில் அனைவரின் உடலையும் இலகுவாக்குவதற்கான ஜூம்பா நடனப் பயிற்சி வழங்கப்பட்டது.
அதற்கடுத்து, பெரியார் நடை / ஓட்டம் குறித்து திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அறிமுகவுரையாற்றி, அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
5 கிலோ மீட்டருக்கான நடை / ஓட்டத்தை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்!
அதனைத் தொடர்ந்து, சரியாக 6.15 மணியளவில், 5 கிலோ மீட்டர் தொலைவு செல்லும் பங்கேற்பாளர்களுக்கான பெரியார் நடை / ஓட்டத்தைத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
3 கிலோ மீட்டருக்கான நடை / ஓட்டம்!
அய்ந்து நிமிடங்களுக்குப் பிறகு, 3 கிலோ மீட்டர் தொலைவு செல்லும் பங்கேற்பாளர்களுக்கான பெரியார் நடை/ ஓட்டத்தைக் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தொடங்கி வைத்தார். பெசண்ட் நகர் 5 ஆம் அவென்யூ, 6 ஆம் அவென்யூ, 2 ஆம் அவென்யூ வழியாக, பெசன்ட் அவென்யூ சாலை வழியாக ஆலன் பயிற்சி மய்யம் வரை சென்று, மீண்டும் அதே வழியாகத் திரும்பி தொடங்கிய இடத்தை வந்தடைந்தது. இடையிடையே பங்கேற்பாளர்களுக்குக் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.
கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், திராவிடர் கழக மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ் உள்ளிட்ட குழுவினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
பங்கேற்றோர்
இந்நிகழ்வில், திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை மற்றும் மகளிரணிப் பொறுப்பாளர்கள் பேராசிரியர் பெரியார் செல்வி உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகளும், வழக்குரைஞர் ஜீவா கிரிதரன், எழுத்தாளர் புதிய குரல் ஓவியா, இயக்குநர் கீதா இளங்கோவன், மருத்துவர் கணேஷ் வேலுச்சாமி, எழுத்தாளர் சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கழகத்தவர் அல்லாத மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்தோரும் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
சமூகநீதிக்கான பெரியார் நடை – ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் டி–சர்ட், காலை உணவு, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குறுகிய காலத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்த ஆண்டுகளில், இன்னும் ஏராளமான பங்கேற்பாளர்கள் இணைவார்கள் என்று வழக்கமாக இத்தகைய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தெரிவித்தனர்.
ஒருங்கிணைப்புப் பணியில் பசும்பொன் செந்தில்குமாரி, மகளிர் பாசறை த.மரகதமணி, மு.பவானி, அன்புச்செல்வி, காவியா தமிழ்ச்செல்வன், மாணவர் கழகத் தோழர்கள் தொண்டறம், நிலவன், பாரதிதாசன், சஞ்சய், ஆதித் தமிழச்சி, இளைஞரணித் தோழர்கள் நா.பார்த்திபன், சென்னகிருஷ்ணன், அ.அன்பரசன், தமிழமுதன், மாறன், தினகரன், பசுபதி, அட்டி அருண், ராசுபதி, சின்னா, அபிஷேக், தினகரன், சூர்யா, சரவணன், தம்பி மண்டேலா, வெங்கடேஷ், சின்னதுரை, கிஷோர், திருவண்ணாமலை ரெங்கநாதன், பெரியார் மாணாக்கன், இராமு, முரளிகிருஷ்ணன் சின்னதுரை, ரெங்கநாதன், வஜாகத், விஜய், கலைமணி, சக்திவேல், விஜயகுமார், புகழேந்தி, யுகேஷ், பிரசாந்த், அருள், பத்மநாபன், அரியலூர் விஜய், டைசன், வெங்கடேசு, வை.கலையரசன் உள்ளிட்ட பலரும் திறம்பட ஈடுபட்டு நிகழ்ச்சி சிறக்க உழைத்தனர்.
