மதுராந்தகம்: தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் பரந்தாமனை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்பதில்லை த.வெ.க.வினர்!
முதலமைச்சர், இதுவரை செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறாரா?
‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்களின் பெயரை மாற்றுவது மட்டும்தான் இவர்களுடைய மாற்றம்!
மாற்றம், தடுமாற்றம், உருமாற்றம் – பிறகு ஏமாற்றம்!

மதுராந்தகம், அக்.3  சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்பதில்லை த.வெ.க.வினர்! முதலமைச்சர், இதுவரை செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறாரா? ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்களின் பெயரை மாற்றுவது மட்டும்தான் இவர்களுடைய மாற்றம்! மாற்றம், தடுமாற்றம், உருமாற்றம் – பிறகு ஏமாற்றம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

Contents

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் பரந்தாமன் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை

கடந்த 1.10.2026 அன்று மாலை 7 மணியளவில், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வழக்குரைஞர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து,  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக்கா, வையாவூர் ஊராட்சி, மூசிவாக்கம் பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

அவரது தேர்தல் பரப்புரை வருமாறு:

உதயசூரியன் சின்னத்தில்
வாக்களிக்க வேண்டும், ஏன்?

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய சிறப்பான மதுராந்தகம் தொகுதியின் வாக்காளர்ப் பெருமக்களே! இந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய திராவிடர் கழகப் பொறுப்பாளர்களே, இந்தப் பிரச்சாரக் கூட்டத்திற்கு சிறப்பான வகையிலே ஏற்பாட்டைச் சிறப்பாகச் செய்துள்ளார்கள். இந்த மதுராந்தகம் தொகு தியின் சார்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவரால், தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாள ராகவும் இருக்கக்கூடிய நம்முடைய அருமை வேட்பாளர் ஆற்றல்மிகு பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், ஏன்? என்பதை விளக்குவதற்காகத்தான் உங்களிடம் வந்திருக்கிறோம்.

அப்படிப்பட்ட சிறப்பான இந்த நிகழ்ச்சியிலே,  சிறப்பாக உரையாற்றிய  எனது அருமைச் சகோதரர் ஆற்றல் வாய்ந்த திரு.எ.வ.வேலு அவர்களே, எப்போதும் எங்களுக்குரிய அமைச்சர், பெரியார் திடல் அமைச்சர் என்று நாங்கள் பெருமையோடு சொல்லிக்கொள்வதற்கு ஒப்பான அருமை பி.கே.சேகர் பாபு அவர்களே, அதுபோலவே சிறப்பாக எங்களுக்குச் சேலத்திலும் ஒருவர் உண்டு என்றால், அவர்தான் அருமை முன்னாள் அமைச்சரும், எந்நாளும் கொள்கை வீரருமான திரு.ராஜேந்திரன் அவர்களே மற்றும் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு சிறப்பாகச் சிறப்பிக்கின்ற மருத்துவர் கொள்கை வீரர் நா.எழிலன் அவர்களே

அதுபோலவே கே.எஸ்.ரவிச்சந்திரன் அவர்களே, ஜோசப் சாமுவேல் அவர்களே, சென்னை மாநகரின் மேயர் பிரியாராஜன் அவர்களே, வழக்குரைஞர் கொள்கை வீரர் தமிழன் பிரசன்னா அவர்களே, திராவி டர் கழக மாவட்டத் தலைவர் செம்பியன் அவர்களே,  காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் முரளி அவர்களே, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பொன்னேரி பன்னீர் செல்வம் அவர்களே, ஒரத்தநாடு குணசேகரன் அவர்களே மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்துடைய முக்கிய செயல்வீரர்களே, திராவிடர் கழகத்தினுடைய செயல்வீரர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த, அருமைத் தோழர்களே, அருமைத் தாய்மார்களே,  உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சிக்குச் சென்று பேசுவதுதான் வழக்கம்!

முதற்கண் தாய்மார்களிடமும், மற்றவர்களிடமும் ஒரு மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்; அது எதற்கென்று சொன்னால், நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்கிறீர்கள்; பொதுவாக நாங்கள் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சிக்குச் சென்று பேசுவதுதான் வழக்கம்.  நாங்கள் புறப்பட்ட உடனே, வரிசையாகப் போக்குவரத்து நெருக்கடி, நெருக்கடி, நெருக்கடி என்று இங்கே இவ்வளவு சீக்கிரம் வந்து சேருவோமா என்ற சந்தேகம் இருந்தது. ஆகவேதான், எதையும் குறித்த நேரத்திலே, குறித்தபடி செய்து பழக்கப்பட்டிருக்கிற நாங்கள், இன்றைக்குக் கொஞ்சம் தாமதமாக வந்ததற்காக, உங்களைக் காக்க வைத்ததற்காக முதற்கண்  என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்காளர்கள் மீது திணிக்கப்பட்டத் தேர்தல்தான் மதுராந்தகத்திற்கான இடைத்தேர்தல்!

அருமைத் தோழர்களே, இந்த மதுராந்தகத்திற்கு சட்டமன்றத் தேர்தல்  எவ்வளவு நாள்களுக்கு முன்னால் நடந்தது? அய்ந்து மாதத்திற்கு முன்னால் நடந்தது. இந்த அய்ந்து மாதத்திற்குள்ளாக ஏன் ஓர் இடைத்தேர்தல் வரவேண்டும்? அப்படி ஓர் இடைத்தேர்தல் என்றால், அதற்குத் தவிர்க்க முடியாத காரணம் இருக்கும். இது இயல்பான தேர்தலா? அல்லது தவிர்க்க முடியாமல் ஏற்பட்டிருக்கிற தேர்தலா? என்றால், இல்லை, இது  திணிக்கப்பட்டத் தேர்தல்தான் – மக்கள் மீது, வாக்காளர்கள் மீது திணிக்கப்பட்டத் தேர்தல்தான் மதுராந்தகத்திற்கான இடைத்தேர்தல்.

நன்றாக நினைத்துப் பாருங்கள், எத்தனை கோடி ரூபாய் செலவு? ஏன் இந்த இடைத்தேர்தல் வருகிறது? அதுவும் யாருக்கு ஓட்டுப் போட்டார்களோ, அவர் ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, அந்தக் கட்சியிலிருந்து வெளியேறினார்.  எதற்காக அவர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறினார்? கொள்கைப் பிடிக்கவில்லை என்பதற்காக அல்ல; அல்லது புதி தாக வந்திருக்கிற கட்சி இருக்கிறதே,  அதாவது முத லமைச்சருடைய – ஜோசப் விஜய் அவர்களுடைய கட்சியான த.வெ.க.வின் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, ‘‘இந்தக் கொள்கையை விட்டால், நாட்டில் வேறு கொள்கையே கிடையாது’’ என்று,  சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தாரா? அவர் எதற்கு ராஜினாமா செய்தார் என்பது, நன்றாகத் தெளிவாக உங்களுக்குத் தெரியும்.

த.வெ.க. வேட்பாளர், தொகுதிக்குள் செல்லுமிடமெல்லாம் மிகப்பெரிய எதிர்ப்பு!

ஆனால், அதை நன்றாக நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.  எனக்கு ரொம்ப மகிழ்ச்சி என்னவென்றால், ஜனநாயகத்துக்கு ஒரு நல்ல பண்பு உள்ளது என்பதை நீங்கள் நன்கு உணர்ந்துள்ளீர்கள். எங்கெங்கே நம்முடைய வாக்காளர் போகிறாரோ, அங்கே அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. ஆனால், த.வெ.க. வேட்பாளர், தொகுதிக்குள் செல்லும்போதெல்லாம் மிகப்பெரிய அள விற்கு எதிர்ப்பு. அதேபோலத்தான் தாராபுரம் தொகுதியிலும்.  தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டுத்தான் வந்தேன்.

இரண்டு தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு, மக்களுடைய ஆதரவு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. மக்கள் தங்களுடைய தவறுக்கு யோசித்து கொண்டிருக்கிறார்கள். நாம் எதையோ நினைத்து, ‘‘மாற்றம் மாற்றம்’’ என்று எதிர்பார்த்து வாக்களித்துவிட்டோமே என்று நினைக்கிறார்கள்.

தாய்மார்களுக்கு இன்றைக்குத்
தெளிவு வந்திருக்கிறது!

இன்றைக்கு நடந்தது மாற்றமா? அது மட்டுமல்ல, எதற்காக அந்த வேட்பாளர்? அய்ந்து நாள்களில் ராஜினாமா செய்து, இன்னொரு கட்சியில் இணைந்து, அதே தொகுதியில் போட்டியிடவேண்டுமா? அதைவிடக் கொடுமை என்னவென்றால், திணிக்கப்பட்ட தேர்த லுக்குக் காரணம் அந்த வேட்பாளர்தான். அவர் கட்சி மாறியதால்தான். ஆனால், அவரே மறுபடியும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார், வேறு கட்சியின் சார்பில் என்றால், அதற்குப் பெயர்தான்  குதிரை பேரம் என்பதாகும். அது மட்டுமல்ல,  மக்கள் அவர்க ளிடம் கேட்கிறார்கள், ‘‘ஏங்க, உங்களுக்குத்தான் அய்ந்து மாதத்திற்கு முன்பு வாக்களித்தோமே, பிறகு ஏன், நீங்களே வேறு கட்சியின் சார்பாகப் போட்டியிடுகிறீர்கள்? மீண்டும் அய்ந்து மாதத்தில் இடைத்தேர்தல் வருவதற்கு நீங்கள்தானே காரணம்’’ என்று கேட்கக்கூடிய அளவுக்குத் தாய்மார்களுக்கு இன்றைக்குத் தெளிவு வந்திருக்கிறது.

கலைஞருடைய பெயரை ஒருபோதும் தமிழ்நாட்டிலிருந்தோ, இந்தியாவிலிருந்தோ அகற்றிவிட முடியாது!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலமாக மாதம் மாதம் தாய்மார்களுக்கு 1000 ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வந்து கொண்டிருந்தது. புதிதாக த.வெ.க.வினர் என்ன வாக்குறுதிக் கொடுத்தார்கள்? மாதாமாதம் மகளிருக்கு 2,500 ரூபாய் கொடுப்போம் என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார்கள். அதன்படிச் செய்தார்களா? மாற்றம், மாற்றம் என்று சொன்னார்களே அதன்படி மாற்றம் வந்ததா? கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்கிற பெயரை, ‘மகளிர் உரிமைத் திட்டம்’ என்று மாற்றியதுதான் இவர்களுடைய மாற்றமா? அந்தத் திட்டத்திலிருந்து கலைஞர் பெயரை எடுத்துவிட்டார்கள்; ஆனால், கலைஞருடைய பெயரை ஒருபோதும் தமிழ்நாட்டு அரசியலிலோ, இந்திய அரசியலிலோ அல்லது தமிழ் இருக்கிற வரையிலோ யாராவது அகற்ற முடியுமா? எம்மொழி, செம்மொழி என்று அந்த மொழிக்குப் பெருமை உண்டாக்கிய ஒருவர் என்றால், அது நம்முடைய முத்தமிழ அறிஞர் கலைஞர் அவர்கள்தான்.

மகளிருக்கு உரிமை கொடுக்கக்கூடிய இயக்கம்தான், திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்!

‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’’ என்று ஏன் பெயர் வைத்தார்கள் தெரியுமா? ‘மகளிர் உரிமைத் திட்டம்’ என்று சொன்னால், அன்பர்களே, யாரும் தானமாகக் கொடுக்கவில்லை; நன்கொடையாகக் கொடுக்கவில்லை. உங்களுடைய உரிமை, உங்கள் உழைப்புக்கு மதிப்பு இருக்கிறது; இதன்படி மகளிருக்கு உரிமை கொடுக்கக்கூடிய ஓர் இயக்கம்தான், இந்தத் திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம் – தந்தை பெரியாருடைய இயக்கம்.

தாய்மார்களே, பெரியோர்களே நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே ‘இந்து சட்டம்’ என்று வருகிற போது, சொத்துரிமை என்று வருகிற போது, அந்தச் சொத்துரிமையிலே ஆண்களுக்கு மட்டும்தான் என்ற நிலை இருந்தது. ஆனால், அதை மாற்ற வேண்டும் என்பதற்காக, டாக்டர் அம்பேத்கர் அவர்கள்  சட்ட அமைச்சராக ஒன்றிய அரசில் இருந்தபோது, அரிய முயற்சி செய்தார், பெண்களுக்குச் சொத்துரிமை மசோதாவைக் கொண்டு வந்தார். ஆனால், அந்த மசோதாவை நிறைவேற்றவிடவில்லை உயர்ஜாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையிலே, இந்தியாவிலே, தமிழ்நாட்டில்தான் முதன்முதலில்  பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்பதை நிலை நாட்டியவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.  பெண்களுக்கு  உரிமை உண்டு;  வீட்டிலே உழைக்கி றார்கள், ஆகவேதான் அவர்களுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். அதனால்தான் தைரியமாக இப்பொழுது கேள்வி கேட்கிறார்கள். பழைய வேட்பாளர், புதிய கட்சியின் சார்பாக வாக்குக் கேட்டு வரும்போது, தைரியமாகக் கேள்வி கேட்கிறார்கள் பெண்கள். அந்தத் தைரியம் பெண்களுக்கு எப்படி வந்தது? என்பதை நினைத்துப் பாருங்கள் தோழர்களே!

தி.மு.க. ஆட்சியில், தொலைக்காட்சிப் பெட்டியைக் கொடுத்ததினால்தான், அரசியல் அறிவே வருகிறது. முன்பெல்லாம் என்ன சொல்வார்கள், ‘‘என்ன தைரியம் இருந்தால், என்னை எதிர்த்துப் பொம்பளை கேள்வி கேட்பாள்’’ என்று. ஆனால், இன்றைக்கு அந்த நிலை இல்லை.

புதிய வேட்பாளர் வந்தாலும் வேகமாக உரிமையோடு கேள்வி கேட்கிறார்கள். இந்தத் துணிச்சல், அது எப்படி வந்தது என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்களின் பெயரை மாற்றுவது மட்டும்தான் இவர்களுடைய மாற்றம்!

அதுமட்டுமல்ல நண்பர்களே, ஒவ்வொரு திட்டத்திற்கும் இன்றைய ஆட்சியினர் பெயர் மாற்றுகிறார்கள். மாணவர்கள் படிப்பதற்கு மடிக்கணினி கொடுத்து, ‘‘நான் முதல்வன் திட்ட’’த்தை உருவாக்கியவர், நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சராக இருந்த நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆவார். இப்போது அந்தத் திட்டத்தின் பெயரையும் மாற்றியாயிற்று. எனவே, மாற்றம் என்பது மாறாததுதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், மாற்றம், ஏமாற்றமாகவோ, தடுமாற்றமாகவோ பிறகு ஏமாற்றமாகவோ போய்விடக்கூடாது என்பது தான் மிக முக்கியம்.

சாதனைகளைச் சொல்லி
ஓட்டு கேட்பதில்லை!

அதுபோலவே மற்ற மற்ற திட்டங்கள்; அதைவிடப் பெரிய மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார்கள். சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்பதில்லை. எனக்கு முன்பு பேசிய நம்முடைய எ.வ.வேலு அவர்கள், சட்டமன்றக் கொறடாவாக இருக்கிறார்; சட்டமன்றத்தில் நாங்கள் கேள்விகளைக் கேட்டால், அதற்கு முதலமைச்சர் அவர்கள் உடனடியாகப் பதில் சொல்லுகின்ற பழக்கமே கிடையாது என்கின்ற குற்றச்சாட்டை எ.வ.வேலு உங்கள் முன் வைத்துள்ளார். ஆட்சிக்கு வந்து அய்ந்து மாதம் ஆகியிருக்கிறது – பத்திரிகையாளர்கள் எல்லாம் இங்கே இருக்கிறீர்கள், முதலமைச்சர், இது வரை செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறாரா? தனியாக ஏதாவது பேட்டி அளித்திருக்கிறாரா? பத்திரி கையாளர்கள் எங்களிடம் வந்து மைக்கை நீட்டுவார்கள்;  எதைபற்றி கேள்வி கேட்டாலும், அதற்குப் பதில் பதில் சொல்லக்கூடியவர்கள் நாங்கள். அதற்குரிய பதில் கிடைக்கும் அவர்களுக்கு. ஆனால், அங்கே இதுவரையில் பத்திரிகைக்காரர்களுக்கு மட்டுமல்ல; சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்வி களுக்கும் பதில் இல்லை.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *