“குழந்தைத் திருமணம்” என்ற கொடூரம்! (6)

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்திற்கு “சாராதா சட்டம்” என்று ஆங்கிலேய அரசு பெயரிட்டது. 1929 ஆம் ஆண்டு அமலுக்கு இந்த சட்டம் வந்தது. இந்த சட்டம் உருவாகக் காரணமாக இருந்தவர் ஹர் பிலாஸ் சாரதா என்பவர். ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஒரு சீர்திருத்தவாதி இவர். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் 1867 இல் பிறந்தவர் ஹர் பிலாஸ் சாரதா. ஆக்ராவில் பி.ஏ. ஆனர்ஸ் படித்தவர். ஜெய்சல்மார் மகாராசாவிலும் ஒரு அதிகாரியாகப் பணியாற்றியவர். அதற்குப் பிறகு நீதித் துறைக்கு மாற்றப்பட்டு மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார். ராவ் பகதூர், திவான் பகதூர் போன்ற பட்டங்களைக் கொடுத்து ஆங்கிலேய அரசு இவரை கவுரவித்தது. குழந்தைத் திருமணம் தடைச் சட்டம் கொண்டு வருவதற்கு இவர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

1929இல் ஆங்கிலேய அரசு “சாரதா” சட்டம் என்ற பெயரில் சட்ட முன் வரைவு அறிமுகப் படுத்தப்பட்ட போதே அதற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. ஆனாலும் ஆங்கிலேய அரசுத் திட்டத்தில் பின் வாங்காமல் 1930 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆங்கிலேய ஆட்சியின் பகுதிகள் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. 1.4.1930 ஆம் ஆண்டு பெண்களின் திருமண வயது 14 ஆக நிர்ணயம் செய்து அரசு வெளியிட்டது. இந்த சட்டம் இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தினால் பிறந்த குழந்தை, பருவமடையும் முன் திருமணம் கட்டாயம் செய்ய வேண்டும் என்ற ஸநாதனக் கோட்பாடு தகர்க்கப்பட்டது. அதனால் ‘இளம் விதவைகள்’ என்ற நிலையும், சிறுமிகள் விதவையாவது தவிர்க்கும் நிலையும் ஏற்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே பி.எம். மலபாரி குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த செய்த முயற்சி ஸநாதனவாதிகளால் முறியடிக்கப்பட்டாலும் ஹர் பிலாஸ் சாரதாவால் அந்த முயற்சி வெற்றியடைந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே பி.எம். மலபாரியால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கு அப்பொழுதே பார்ப்பனக் கும்பல்களின் எதிர்ப்பால் ஆங்கிலேய அரசு தயங்கிக் கொண்டேயிருந்தது. கடைசியில் 1891 ஆங்கிலேய அரசு சட்ட முன் வரைவை வெளியிட்டது. அதில் பெண்களின் திருமண வயது 14 என்றும், ஆண்களின் திருமண வயது 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆண்கள், பெண்கள் பருவமடைந்த பின் தான் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த சட்டம் கூறியது. அந்த சட்ட முன் வரைவு வெளியானவுடனே அனைத்து பார்ப்பனக் கும்பலும் எதிர்க்கத் தொடங்கி விட்டனர். சீர்திருத்தார்கள் அதை ஆதரித்தனர். பாலகங்காதர திலகர், சங்கராச்சாரிகள், ஆச்சார்யா சுப்ரமணிய சிவா, வ.வே.சு. அய்யர் மற்றும் பல ஸநாதனவாதிகளும் எதிர்த்தனர். அதை ஆரம்பம் முதலே ஆதரித்து, அதற்காக கடுமையான முயற்சி மேற்கொண்ட ஆங்கிலேய நாடாளுமன்றம் வரை சென்று போராடிய பி.எம். மலபாரி, அவருக்குப் பின் வந்த முனைவர் பண்டார்கர், நீதிபதி மகாதேவ் கோவிந்த ரானடே (அவர் உருவாக்கிய ‘சர்வ ஜன சபா’ என்ற இயக்கமும் இதில் பெரும் பங்காற்றியது), வ.உ.சிதம்பரம் பிள்ளை, விவேகானந்தர் போன்றவர்கள் குழந்தைத் திருமண தடுப்புச் சட்ட முன் வரைவை ஆதரித்து கடுமையான கருத்துகளை முன் வைத்தனர்.

1891 ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட உடன் ஏற்பட்ட வாதப் பிரதி வாதங்களால் இழுபட்டுக் கொண்டே போய் கடைசியில் முப்பத்தி ஒன்பது ஆண்டுகள் கழித்து 28.9.1929 அன்று ஒரு வழியாக ஹர் பிலாஸ் சாரதாவின் கடும் முயற்சியால் “சாரதா” சட்டம் என்ற பெயரில் நிறை வேற்றப்பட்டது. அதை எதிர்த்த ஸநாதனவாதிகளுக்கு விவேகானந்தர் சரியான பதிலடி கொடுத்தார்.

இந்து மத வெறியர்கள் (பார்ப்பனர்கள்) குழந்தைத் திருமணத்தை எதிர்த்து பெருங் கூச்சல் எழுப்பினர். அவர்களின் வரவேற்புக்கும், வாழ்த்துக்கும் உரிய சுவாமி விவேகானந்தர் குழந்தைத் திருமணம் பற்றி என்ன கூறினார் தெரியுமா? “பெண்களுக்கு 9 வயதிலேயே திருமணம் செய்து வைக்கின்ற வெட்கக்கேட்டை நிறுத்த வேண்டும். எல்லா பாவங்களுக் கும் இதுதான் ஆணிவேர். இதை நிறுத்த அரசாங்கம் சட்டம் போட முனைந்தவுடன் நமது உதவாக்கரை மக்கள் எழுப்பிய கூச்சலை நினைத்துப் பார்ப்பின் எவ்வளவு கேவலம். நாமாக அதை நிறுத்தாவிட்டால் அரசாங்கம் அதில் தலையிடவே செய்யும். 10 வயது பெண்ணுக்குத் தொப்பைப் பெருத்த கணவனை அந்த பெண்ணின் பெற்றோரே பிடித்துக் கொடுத்து விடுகிறார்கள். என்ன கொடுமை! என்ன பயங்கரம்!” என்றார் அவர்.

விவேகானந்தர், “பெண்ணுக்கு 11 வயது ஆனதும் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் அவர்கள் கெட்டுப் போவார்களாம். நண்பா நாம் என்ன மனிதர்களா? ஆண்கள் எப்படி 30 வயது வரை பிரம்மச்சரியத்தை கடைப் பிடிக்கிறார்களோ, கல்வி பெறுகிறார்களோ அதே போல் பெண்களுக்கும் செய்ய வேண்டும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? உங்கள் பெண்கள் நிலையை உயர்த்த முடியுமா? அப்படியானால் நம்பிக்கை உண்டு. இல்லையானால் அப்படியே நாம் மிருக நிலையில்தான் இருப்போம்” என்கிறார். பெண்களை முன்னேற்ற வேண்டும் என்பதில் விவேகானந்தர் குறியாக இருக்கிறார். மேலும் குழந்தைத் திருமணம் பற்றி அவர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

“குழந்தைத் திருமணம் மீது எனக்கு கடுமையான வெறுப்பு உள்ளது. இந்த அசுரத்தனமான வழக்கத்தை அகற்ற சிறந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். ஓ, நம் விதவைகள் எவ்வளவு உதாரணங்கள்! குழந்தைத் திருமணம் எவ்வளவு இனிமையானது. இது போன்ற மற்றொரு வழக்கம் சாத்தியமா? இத்திருமணத்தில் கணவன், மனைவி அன்பைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியுமா? என்பதுதான் இப்பொழுதெல்லாம் மக்களிடையே சுற்றி வரும் புலம்பல்” என்று விவேகானந்தர் மேலும் இதைப்பற்றி என்ன கூறினார்?

23.12.1895ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத்தைப் பற்றி பேசிய விவேகானந்தர், “8 வயது சிறுமி முப்பது வயதான ஒருவருக்கு திருமணம் செய்யப்படுகிறாள். சிறுமியின் தாய், தந்தையர் ஆனந்தத்தில் மூழ்குகின்றனர். இதை எதிர்த்து யாராவது வாய் திறந்தால் போதும், ஆ, நமது மதம் போய்விட்டது என்று கூக்குரலிடுகின்றார்கள். எட்டு வயது சிறுமியைத் தாயாக்கி அதற்கு விஞ்ஞான விளக்கமும் கூற முற்படும் முட்டாள்களிடம் என்ன மதத்தை நாம் எதிர்பார்க்க முடியும்?” என்கிறார்.

“இளமை மணம் என்ற இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை என் வலிமை கொண்ட மட்டில் நான் நசுக்கி அழிப்பேன். குழந்தைகளுக்குக் கணவன் தேடித் தருவதாகிய இத்தகைய செயல்களில் நான் எவ்விதப் பங்கும் கொள்ள முடியாது, நிச்சயமாக முடியாது. இறையருளால் நான் அதைச் செய்ததுமில்லை, செய்யப் போவதும் இல்லை. தன் குழந்தைக்குக் கணவனைத் தேடித் தருகின்றவர்களை நான் கொல்லவும் செய்வேன்” என்று ஆத்திரத்தோடு விவேகானந்தர் குறிப்பிட்டார்.

“குழந்தைத் திருமணம் என்பது ஒரு பேய்த்தனமான வழக்கம் (devilish custom). இந்த வழக்கத்தால் மொத்த சமூகமே சிதைவடைந்து விடும். இந்த அசுரத்தனமான வழக்கத்தை ஒழிக்க சட்டம் மட்டும் போதாது. சமூகத்தின் கூட்டு முயற்சியும் தேவை. சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், சமூக அமைப்புகள், சமூகத் தலைவர்கள் கொண்ட ஒரு சமூக சக்தியை உருவாக்கி அதன் மூலம் ஒரு விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்க வேண்டும். மாணவர்களிடையே குழந்தைத் திருமணத்தின் தீமைகளை விளக்க வேண்டும்” என்று குழந்தைத் திருமணத்தை ஒழிப்பது பற்றி விவேகானந்தர் மேலும் கூறுகிறார்.

(இன்னும் நிறைவடையவில்லை)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *