புத்தக அறிமுக விழா – விருது வழங்கும் விழாவில், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் ஜெகத்ரட்சகன் சிறப்புரை

11 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெரியார் திடலில், நூற்றாண்டு விழாவை நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு நாம் நடத்த வேண்டும்!
இன்றைக்கு அய்ஏஎஸ், அய்பிஎஸ் எத்தனைப் பேர்?
இவை அனைத்தும் யாரால் வந்தன?
தந்தை பெரியார் மட்டும் இல்லை என்றால், நாம் எல்லாம் காணாமல் போயிருப்போம்!

சென்னை, அக்.2 பெரியார் திடலில், நூற்றாண்டு விழாவை நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு நாம் நடத்த வேண்டும்! இன்றைக்கு  அய்ஏஎஸ், அய்பிஎஸ் எத்தனைப் பேர்? இவை அனைத்தும் யாரால் வந்தன? தந்தை பெரியார் மட்டும் இல்லை என்றால், நாம் எல்லாம் காணாமல் போயிருப்போம் என்றார் மேனாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் அவர்கள்.

Contents

‘இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்’ புத்தக அறிமுக விழா –
விருது வழங்கும் விழா!

கடந்த 21.9.2026 அன்று மாலை 7 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிடர் கழகம் மற்றும் புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பும் இணைந்து நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய ‘இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்’ என்ற புத்தக அறிமுக விழா, திராவிட இயக்க ஆய்வாளரான அருமைத் தோழர்
க. திருநாவுக்கரசு அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – பாராட்டு விழாவில், நூலினை வெளியிட்டு,  மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கடந்த 30.9.2026 அன்று ‘விடுதலை’யில் வெளி வந்த அவரது சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:

பெரியார் திடலில், நூற்றாண்டு விழாவை நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு நாம் நடத்த வேண்டும்!

உங்களின் எளிமையின் உயரத்தை அளந்தால், நட்சத்திரங்கள் உங்கள் காலடியில் கொட்டிக் கிடக்கும். ஒரு சாதாரண கிராமத்தில்,  ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் நடந்து வருகிறேன். எழுந்து வந்து அழைத்து வருகிறார். உலகத்தில் இந்தப் பெருமை யாருக்குக் கிடைக்கிறது?  இந்த எளிமையை உலகத்தில் எங்கேயுமே பார்க்க முடியாது. அவர்கள் இங்கே பேச இருக்கிறார்கள், 93 வயதில் ஞானப்பழம். எனக்கு ஒரே ஒரு ஆசைதான்; இந்தப் பெரியார் திடலில், நூற்றாண்டு விழாவை நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு நாம் நடத்த வேண்டும்.

அந்த நூற்றாண்டு விழாவை, நம்முடைய தங்கத் தலைவர் தளபதி அவர்கள் தமிழ்நாட்டினுடைய முத லமைச்சராக இருந்து நடத்த வேண்டும். அவ்விழாவிலும் அடியேன் இருந்து பேச வேண்டும் என்கிற இந்த நேரத்திலே சொல்லி, இங்கே பெருமக்கள்  எல்லாம் பேச இருக்கிறார்கள், தந்தை பெரியாரைப் பற்றி நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கலாம், எவ்வளவோ செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.

புத்தகத்தின் தலைப்பே
ஒரு தத்துவமாக இருக்கிறது!

தலைவரோடு இருக்கிற நெருக்கத்தை மட்டும் ஓரிரு செய்திகளைச் சொல்லி, விடைபெறலாம் என்று நினைக்கிறேன். இந்த நூலை, இந்தத் தலைப்பே  ஒரு தத்துவமாக இருக்கிறது. தலைவர் கலைஞர் மாதிரி, இது போன்ற தலைப்புக் கொடுப்பதற்கு உலகத்தில் யாராலுமே முடியாது. இதுபோன்று கிட்டத்தட்ட 63, 73 தலைப்புகள் இப்புத்தகத்தினுள் இருக்கின்றன. அந்தத் தலைப்புகள் ஒவ்வொன்றும் நமக்கு மயக்கத்தைக் கொடுக்கும்.

ஏனென்றால்,

காசா படி அளந்தால், கை ரெண்டும் நோக முன்னு

நெல்லா படி அளந்தால் நெடுநேரம் ஆகும் முன்னு

அரிசியா படி அளந்தா ஆக்க நேரம் ஆகும்னு

சோறா படி அளக்கும் சோழ நாட்டுத் தங்கம் தலைவர் கலைஞர் அவர்கள்.

அவரை மாதிரி தலைப்புக் கொடுப்பதற்கு உலகத்தில் யாரால் முடியும்?

உமிழ்நீரும் தமிழ்நீராய்ச் சுரக்கும் என் வேர்களுக்கு தாய்ப்பால் ஊட்டிய பாட்டுடைத் தலைவன்.

அன்னைத் தமிழின் வடிவம்,

செங்கோல் தாங்கிய செந்தமிழ்,

வங்கக்கடல் மட்டும் தங்கத் தமிழத்தின்

தனிப்பெரும் தலைவராய் இருந்து கொண்டிருக்கிறார்

நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

மயங்க வைக்கிற மந்திரத் தமிழால்

ஆன்மாவை அந்தி வானத்தில்

ஆட வைக்கிற ஆடகத் தமிழ்,

அவர் தமிழ்நடை

தனிநடை, மதுநடை, மயக்கநடை

யாராலும் பார்க்க முடியாது!

தாலாட்டை உறங்க வைத்துவிட்டு

தாயை எழுப்பிய அதிசய இசை

கணக்குப் பார்க்காமல் நம் கழனிக்கு வந்த

கனமழை அல்லவா தலைவர் கலைஞர் அவர்கள்!

தலைமுறைக்கு ஒருமுறை பூக்கும்

மூங்கில் பூக்களை போல

கூடாரங்கள் வேராக இருந்தாலும்,

இதயங்களை ஒன்றாக்கியவர்

நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்!

அவர் விடுவது மூச்சு, பேச்சு அத்தனையும்

தந்தை பெரியார், பெரியாரே என்றேதானே இருக்கும்!

ஏனென்றால், ஒருமுறை அவரோடு பேசிக்கொண்டி ருக்கும்போது கேட்டேன், ‘‘வாழ்க்கையில் உங்களுக்கு மறக்க முடியாத இரண்டு நிகழ்ச்சி சொல்லுங்கள்  அண்ணே’’ என்று.

உடனே அவர், என்னைப் பார்த்துக் கேட்டார், ‘‘உனக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு நிகழ்ச்சி சொல்லு, பார்க்கலாம்!’’  என்றார்.

நான் சொன்னேன், ‘‘இரண்டு நிகழ்ச்சி எதுவென்று சொன்னால்,  ஒன்று, தவிர்க்க முடியாத கல்யாண நிகழ்ச்சி; இன்னொன்று பிறந்தநாள். இது இரண்டுதானே எனக்கு ஞாபகம் இருக்கிறது அண்ணே! உங்களுக்கும் அப்படித்தானே’’ என்று கேட்டேன்.

முதலில் தந்தை பெரியாரைச் சந்தித்தது; இரண்டாவது அறிஞர் அண்ணாவை சந்தித்தது!

அவர் சொன்னார், ‘‘எனக்கு அப்படித்தான்யா, இரண்டே இரண்டு நிகழ்ச்சிதான்’’ என்றார்.

‘‘அப்படியாண்ணே, அந்த இரண்டு நிகழ்ச்சி என்னவென்று’’ கேட்டேன்.

‘‘ஒன்று,  முதலில் தந்தை பெரியாரைச் சந்தித்தது; இரண்டாவது அறிஞர் அண்ணாவை சந்தித்தது’’ என்றார்.

தன்னுடைய திருமண நாளைக் காட்டிலும், பிறந்த நாளைக் காட்டிலும், அவர் அதிகமாக நேசித்தது தந்தை பெரியார் அவர்களைத்தான். நான்,  அசந்து போயிட்டேன்.

ராமானுஜருக்கு நூற்றாண்டு விழாவை சென்னையில் நடத்தினேன். ஆயிரமாவது நூற்றாண்டு விழா அது. அந்த விழா முடிந்து, நாள்தோறும்  மாலையில் 6, 7  மணிக்குத் தலைவரைப் பார்க்கச் செல்வேன்.

அப்பொழுது தலைவர் உட்கார்ந்திருப்பார், ‘‘வாய்யா,  என்னய்யா, இரண்டு, மூன்று நாள்களாக உன்னைக் காணோமே’’ என்றார்.

‘‘ராமானுஜருக்கு ஆயிரமாவது ஆண்டு விழா நடத்தினேன் அண்ணே’’ என்றேன்.

‘‘ஓ, அப்படியா! சொல்லுய்யா, என்ன நடந்தது?’ என்று கேட்டார்.

‘‘ஒன்னும் இல்லேண்ணே, ராமானுஜர் ஒரு பெரிய மகான் அண்ணே! அரையர் சேவைன்னு ஒரு சேவை சிறீரங்கத்தில், அந்தக் கோயிலை வந்து பார்த்தீங்கன்னா, அந்தக் கோயில் நிர்வாகம் முழுவதையும் அவர்தான் பார்க்கிறார் அண்ணா. அவருக்கு வீடு கட்டிக் கொடுத்தாருண்ணே ராமானுஜர். அந்த வீடு கட்டிக் கொடுத்தபோது, அந்த தெருவுக்கு. ‘செந்தமிழ் பாடுவார் வீதி’ என்று  பெயர்  வைத்தார் ராமானுஜர்,  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக’’ என்றேன்.

‘‘அப்படியா, அடுத்ததய்யா!’’ என்றார்.

‘‘தாழ்த்தப்பட்டவரைத் திருக்குலத்தார் என்று சொன்னாருண்ணே’’ என்றேன்.

‘‘ஓ! அப்படியா, பரவாயில்லை, பெரிய விஷயம் தானய்யா, என்று சொல்லிவிட்டு, நம்முடைய அய்யா சொன்னதை அன்னைக்கே அவரே யோசிச்சி ருக்காருய்யா’’ என்றார்.

‘‘அனைத்து ஜாதியினரையும் கோயிலுக்குப் போகலாம் என்று சொன்னவர் ராமானுஜர்’’ என்றேன்.

‘‘ஓ! அப்படியா, பரவாயில்லை’’ என்றார்.

‘‘காவிரியில் குளிக்கப் போகும்போது, முதலி யாண்டான் (தாசரதி) தோளில், ‘பிராமணர்கள்’ தோளில் கை போட்டுப் போவார்; திரும்பி வரும்போது தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகப் பின்னணியைக் கொண்டு ராமானுஜரின் சீடராக மாறிய உறங்காவில்லிதாசர் தோளில் கை போட்டு வருவார் ராமானுஜர். அப்படிப்பட்ட ஒரு பெரிய மகான் அண்ணே அவர்’’ என்றேன்.

‘‘ஓ, அப்படியா! அவரைப் பற்றி புத்தகங்களையெல்லாம் கொடுய்யா’’ என்றார்.

‘‘சரி’’ என்று சொல்லிட்டு, எல்லா நூல்களையும் கொண்டு வந்து கொடுத்தேன்.

ஒரு நாள் தலைவர் கலைஞர் அவர்கள், ‘‘யோவ், ஆழ்வாரே வா, பக்கத்தில் வந்து உட்கார் ’’ என்றார்.

‘‘என்ன அண்ணே’’ என்றேன்.

‘‘ராமானுஜரைப் பற்றி சொன்னாயே, நான் மிகவும் வியந்து போய்விட்டேன்’’என்றேன்.

‘‘அப்படியா அண்ணே,   ரொம்ப மகிழ்ச்சி அண்ணே!’’ என்றேன்.

‘‘பூமியில், நம்மை வாழ வைத்த, வளர வைத்த சாமி தன்னை முதலில் தொழுதிடுவோம்’’ என்று  சண்முகநாதனை அழைத்து, ஒரு பேப்பரில், சொல்வதை எழுதச் சொன்னார்.

‘‘சாமியை வணங்கிடுவோம்’’ என்று சொன்னார்.

அதைக் கேட்ட எனக்கு, ரொம்ப மகிழ்ச்சி. பக்கத்து வீட்டில் இருக்கிற நம்முடைய ஆசிரியரையே திருத்த முடியவில்லை; கலைஞரைத் திருத்திவிட்டோமே, பர வாயில்லை. ரொம்ப மகிழ்ச்சி. ‘‘சாமியைக் கும்பிடுவோம்’’ என்று சொல்லிவிட்டாரே.

இந்த நூலில் இருக்கிறது அது.

‘‘சாமியை கும்பிடுவோம்’’ என்று  சொல்லிட்டார்.  இது எங்களுக்குள்ளே நடந்த நிகழ்ச்சி.

‘‘ரொம்ப மகிழ்ச்சி அண்ணே, சாமியை கும்பிடுவோம்; ஆமாண்ணே, உங்களுக்கும் வயசு 90 தொட்டுவிட்டது அல்லவா!  இனிமே அப்படித்தான் இருக்கும், வயதா னால், அந்த இறை நம்பிக்கை எல்லாம் வரும்’’ என்றேன்.

அதைக் கேட்டு, அவர் சிரித்துக்கொண்டே, ‘‘ராமசாமி தன்னைக் கும்பிடுவோம்’’ என்றார்.

அதைக் கேட்ட எனக்கு ரொம்ப மகிழ்ச்சி; துள்ளிக்  குதித்துவிட்டேன். ஏனென்றால்,  கலைஞருடைய அப்பா பெரிய வைஷ்ணவர். ஆகவே, ராமசாமி என்றால், ராமன் தானே! ‘‘ராமசாமியைக் கும்பிடுவோம்’’ என்றார்.

அண்ணே, ரொம்ப மகிழ்ச்சி அண்ணே, உலகத்தில் எனக்கு இதைவிட மகிழ்ச்சி ஒன்றுமே இல்லை அண்ணே, ரொம்ப சந்தோஷம் அண்ணே! என்றேன்.

‘‘பெரியார் ராமசாமியைக் கும்பிடுவோம்!’’

‘‘இல்லைய்யா, அடுத்த ஒரு வரியைச் சொல்கிறேன்’’ என்றார்.

‘‘சொல்லுங்க அண்ணே’’ என்றேன்.

‘‘பெரியார் ராமசாமியைக் கும்பிடுவோம்’’ என்றார்.

எப்படி பாருங்கள்! இவ்வளவு செய்திகளையும் கேட்டு, அதற்குப் பிறகு அவர்  ‘‘மதத்தில் புரட்சி செய்த மகான்’’ என்ற தலைப்பில் நூல் எழுதினார். அப்படி எழுதினாலும்கூட, பெரியார் கொள்கையை அவரால் விட்டுவிட்டு வரவே முடியாது.

ஒரு நாள் என்னிடம் கேட்டார், ‘‘என்னயா, காதல் கடிதம் எழுதி இருக்கிறாயா?’’ என்று.

‘‘அதில்,  நான் மன்னாதி மன்னன் அண்ணே’’ என்றேன்.

‘‘எத்தனை வயதில் நீ எழுதினாய்?’’ என்று கேட்டார்.

‘‘நான்  14 வயதில் எழுதினேன்  காதல் கடிதம்’’ என்றேன்.

‘‘என்னய்யா முதலில் என்ன வரி எழுதினாய்’’ என்றார்.

அய்யோ, நான் அதைச் சொல்ல மாட்டேன்’’ அண்ணே என்றேன்.

‘‘யோவ், சொல்லுயா’’ என்றார்.

‘‘உமா, நீ இல்லையேல் என் வாழ்வே ஒரு கமா’’ என்று எழுதினேன் என்றேன்.

உடனே தலைவரைப் பார்த்து, நான் கேட்டேன்; தலைவரே, நீங்கள் காதல் கடிதம் எழுதி இருக்கீங்களா?’’ என்றேன்.

யோவ், நான் எழுதி இருக்கேன்யா லவ் லெட்டர்!

என்னுடைய லெட்டரை  இன்னைக்கும் கையில் வைத்திருக்கிறேன் என்றார்.

அண்ணே, அண்ணி இருக்காங்க, எல்லோரும் இருக்காங்க, தெரிந்துவிடப் போகுது அண்ணே’’ என்றேன்.

‘‘தெரிந்தால் என்னய்யா? அந்த லெட்டரை இன்றைக்கும் வைத்திருக்கிறேன்’’ என்றார்.

‘‘சரி, அந்த லெட்டரை எடுத்துவரச் சொல்லுங்கள் அண்ணே’’ என்றேன்.

சண்முகநாதனை அழைத்து, அந்த லெட்டரை எடுத்து வரச் சொன்னார்.  அவர், ஒரு 40 பக்கம் நோட்டை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார்.

 ‘‘ஒரு கிழவனின் காதல்!’’

அதில், தலைப்பு என்ன கொடுத்திருக்கிறார் என்றால், ‘‘ஒரு கிழவனின் காதல்’’ என்று கொடுத்திருக்கார். தந்தை பெரியாரைப் பற்றி 14 வயதில், எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள். எப்படிப்பட்ட தலைவன் அவர். இப்படி ஒவ்வொரு செய்திகளையும்  நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

நம்முடைய திரு.வி.க.வையும், மறைமலை அடிகளாரைப் பற்றி, ஓர் ஆங்கிலப் பேராசிரியர் தவறாகப் பேசிவிட்டார் என்ற உடனே, பாரதிதாசன் கொதித்து எழுந்து, ‘‘பேசிய மேடையில் நான் மட்டும் இருந்திருந்தால், அவருடைய தலையைச் சீவி இருப்பேன்’’ என்று சொன்னார்.

தந்தை பெரியாரிடத்தில் மட்டும்
புரட்சிக்கவிஞருக்கு மரியாதை உண்டு!

பாரதிதாசன்  ஜாம்பவான்;  எல்லோர் முன்னிலையிலும் சிகரெட் பிடிப்பார்; எல்லோர் எதிரிலும் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பார். ஆனால், தந்தை பெரியாரிடத்தில் மட்டும் அவருக்கு மரியாதை உண்டு.  அந்த அளவுக்குப் பெரியார் அவர்கள் மகா பெரிய தலைவர்.

இப்படிப் பல செய்திகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, திராவிட இயக்கம் என்பது, நம்முடைய குலம், நம்முடைய இனம், நம்முடைய மொழி, நம்முடைய பேச்சு, நம்முடைய மூச்சு, எல்லாம் திராவிட இயக்கம்தான். ஏனென்றால்,  நீங்களெல்லாம் இல்லை என்றால், எங்களை வந்து தூக்கிப்போட்டு மிதித்துவிடுவார்கள்.  முட்டிக்காலுக்கும் கீழே உங்களாலேதானே, நாங்கள் வேட்டி கட்டுகிறோம். அதற்குக் காரணம் யார்? இதெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும் அல்லவா! இந்தத் தகவல் பலருக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாத நிலை இருந்தது. கல்லூரியில், ஒரு சாரார் மட்டும்தானே போனார்கள்.

தந்தை பெரியார் மட்டும் இல்லை என்றால்,
நாம்
எல்லாம் காணாமல் போயிருப்போம்!

அதுதானே கிராமத்தில் இருக்கிற நாம் கூட கல்லூரியில், சரி சமமாக அமர்ந்தோமே! இன்றைக்கு எத்தனை அய்ஏஎஸ், எத்தனை அய்பிஎஸ், எத்தனை பேர்? இவை அனைத்தும் யாரால் வந்தது? தந்தை பெரியார் மட்டும் இல்லை என்றால், நாம் எல்லாம் காணாமல் போயிருப்போம். இன்றைக்கு வட இந்தி யாவில் என்ன கொடுமை நடக்கிறது பாருங்கள். ஜாதி வன்கொடுமைகள் எப்படி நடக்குது?  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும், உயர்ஜாதி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதால்,  அந்த ஊர் ஜனங்கள் முழுவதும் திரண்டு, இரண்டு பேரையும் நிர்வாணமாக்கி, நடுரோட்டில் நடக்க விட்டிருக்கிறார்கள், வடநாட்டில். இது தமிழ்நாட்டில் நடக்குமா?  என்ன கொடுமை!

ஆகவே, இந்த இயக்கம் என்பது, திராவிட இயக்கம் என்பது, தந்தை பெரியாருடைய கொள்கை என்பது, தமிழ்நாட்டில் மட்டும் நின்று விடவே கூடாது; உலகம் முழுவதும் பரவ வேண்டும், ஒருபக்கம். இந்தியாவிலேயே பல இடங்களுக்கு இன்னும் தந்தை பெரியார் தேவைப்படுகிறார்.  தந்தை பெரியாருடைய சிந்தனைகள் இன்னும் பல இடங்களுக்கு சென்று சேர வேண்டி இருக்கிறது. அவரைப் பற்றி நாள் முழுவதும் பேசிக்கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட ஓர் அற்புதத் தலைவரைப் பற்றி நம்முடைய தங்கத் தலைவர் கலைஞர் அவர்கள்,

‘‘யாப்பமைந்த பாடலெனும் யார்தரும் கவிதையெனும்

மாப்பலாப் போல் மடியில் வாங்கி

காப்பகமாய் தமிழன் நெஞ்சில் காலமெலாம் வீற்றிருக்கும்

மூப்பில்லா தமிழ் முத்தமிழறிஞர்’’ அவர்கள் இந்த நூலை வகுத்துத் தந்திருக்கிறார்கள்.

உங்களோடு சேர்ந்து, நாங்களும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டும்!

இந்த நேரத்திலே அவருக்கும் நம்முடைய வணக்கங்களைச் சொல்லி, அண்ணன் திருநாவுக்கரசு அவர்கள் விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள், அவரைப் பற்றி நாள் முழுதும் பேசலாம், ஒரு கலைக்களஞ்சியம், ஏற்ெகனவே நான் சொன்னதைப் போல ஒரு கலைக்களஞ்சியம். உங்களுக்கு விருதைத் தந்திருக்கிறார்கள்.  மலர்களை உங்கள் கைகளிலே தருகிற பொழுது, அந்த மலரின் வாசத்தை நாரும் பெறுவதைப் போல, பன்னீரை உங்கள் மீது தெளிக்கிற பொழுது, அந்தப் பன்னீரின் தூவலை நானும் பெறுவதைப் போல, உங்களோடு சேர்ந்து, நாங்களும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி 100 ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி பாராட்டி, விடைபெறுகிறேன்!

– இவ்வாறு மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *