உதகை, அக்.2 நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியில் சுகாதாரத்துறை சார்பில் குருதிக் கொடை முகாம் நேற்று (1.10.2026) நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவ, மாணவி்கள் பங்கேற்று குருதிக் கொடை செய்துள்ளனர். இந்த குருதிக் கொடை முகாமில் பங்கெடுத்த ஒன்றியஅரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கட்டுபாட்டில் இயங்கும் ‘மேரா யுவ பாரத்’ அமைப்பை சேர்ந்த ஒருவர், குருதிக் கொடை முகாமில் பங்கேற்ற மாணவர்களிடம் தனியாக படிவம் வழங்கி அதில் பெயர், வயது, பயிலும் பட்டப்படிப்பு, ஜாதி, தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை எழுதி வாங்கியுள்ளார்.
ரத்தம் வழங்கியவர்களிடம் ஜாதி குறித்த விவரங்களை கேட்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சில மாணவர்கள் ஜாதி குறித்த விவரங்களை தர மறுத்ததுடன் குருதிக் கொடை வழங்குவதை தவிர்த்து வெளியேறியுள்ளனர். இந்த அதிர்ச்சி நிகழ்வு குறித்து ஆதாரங்களுடன் காட்சிப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இது குறித்து மாணவர்கள், “குருதிக் கொடை செய்வதற்கு எதற்கு ஜாதி விவரங்கள் எல்லாம் கேட்கிறார்கள்? ஜாதி பார்த்து தான் குருதிக் கொடை பெறுவார்களா? ஜாதியை தெரிவித்து தான் குருதிக் கொடை செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சில மாணவர்கள் ஜாதி விவரங்களை வழங்கி குருதிக் கொடை செய்தார்கள். நாங்கள் வெளியேறி விட்டோம்” என்றனர்.
இந்த சர்ச்சை குறித்து ஊட்டி அரசுக் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது, “கல்லூரித் தரப்பில் எந்த படிவத்தையும் வழங்கி ஜாதி குறித்த விவரங்கள் கேட்கவில்லை. இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நீலகிரி மாவட்ட மேரா யுவபாரத் அமைப்பை சேர்ந்த ஒருங்கிணைப்பாளரான ரஞ்சித்குமார் முகாமில் கலந்து கொண்டு மாணவர்களின் ஜாதி விவரங்கள் உட்பட தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய படிவங்களை விநியோகித்து தகவல்களை பெற்றுள்ளார். கல்லூரி முதல்வர் எபனேசர் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
