கோபி, அக். 1- கோபி கடைவீதி முழுவதும் 3 கிலோ மீட்டர் திரும்பிய இடமெல்லாம் கழக இலட்சியக் கொடிகள் பரந்த வண்ணம். விளம்பரப் பதாகைகளும் வைக்கப் பட்டிருந்தன.
27.09.2026 அன்று கோபிசெட்டிபாளையம் இராமாயம்மாள் திருமண அரங்கத்தில் காலை 08.00 மணிக்கு ரூ 100 நுழைவு கட்டணம் செலுத்தி படிவத்தில் பதிவு செய்தனர் கொள்கை உறவுகள்.
9.15 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், நிகழ்வினை நெறிப்படுத்தியும் நோக்கங்களை எடுத்துரைத்தும் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி, 1 மணி நேரம் 15 நிமிடங்கள் அனைவரையும் சிந்திக்க வைத்தது. ஆறாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சையன், அன்புமலர், கல்லூரி மாணவர்கள் தமிழ்த் தென்றல், பொன்முகில், ஆகியோரை மேடைக்கு அழைத்து நல்ல நேரம், கெட்ட நேரம், பேய் பிசாசு, பில்லி சூனியம் சாமியார்கள் ஏமாற்று வேலை, மோசடிகள் பற்றி செயல்முறையுடன் நிகழ்வினை நடத்தினார்.
மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், “சமூக நீதி காக்கும் படை வருதண்ணே!” என்ற பாடலை முழுமையாகப் பாடித் தொடங்கினார்.
அடுத்தடுத்து நம் கொள்கை உறவுகள், “ஆடு மயிலே பாடு குயிலே அறிவு திறந்தது ஈரோடு” என்ற பாடலை மாவட்டச் செயலாளர் குணசேகரன் அவர்களின் பேத்தி, மகிழினி (4ஆம் வகுப்பு) பாடினார்.

தொடர்ந்து. 6 ஆம் வகுப்பு மாணவி அன்புமலர், ‘கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லை!’ என்று தொடர்ச்சியாக கடவுள் மறுப்பு வாசகத்தை நெத்தியடி அடித்தது போல் சொல்லி, பெரியாரைப் பற்றி ஒரு கவிதையும் வாசித்தார். வழக்குரைஞர் மு.சென்னியப்பன்-திலகவதி மகன் அன்பு வீரமணி, “தோழா… வா தோழா….. நாம் கோவில் மணி கூட்டம் அல்ல வீரமணி கூட்டமடா…..” பாடலை உற்சாகமாகப் பாடினார். தொடர்ந்து யோகானந்தம், ஆசிரியர் பாலு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் “தமிழுக்கு அமுதென்று பெயர் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நிகர்..”
அன்பு எழில், தந்தை பெரியார் புகழை போற்றிக் கவிதை வாசித்தார். காப்பாளர் சிவலிங்கம், “அய்யாவின் வழியிலே தலைவர் வீரமணி அவர் ஆற்றி வரும் தொண்டெல்லாம் அரிய பெரும் பணி…” ஆசிரியர் சண்முகசுந்தரம், “வாராது வந்த மணி எந்த மணி…

இன வரலாறு நமக்கீன்ற வீரமணி….” தொடர்ந்து ஆசிரியர் அருள், பொன்முகில், நதியா-பெரியார் செல்வன், தமிழ்த்தென்றல், ஆகியோர் இன்றைய அரசியல் சூழல் பற்றியும். பெரியார் கடந்து வந்த பாதைகளைப் பற்றியும் பேசினார்கள்.
தொடர்ந்து, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, அவிநாசி சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட மருத்துவர் வி.கோகிலாமணி. ஈரோடு அனிச்சம் கனிமொழி, கழக பொதுச் செயலாளர் வி.அன்புராஜ், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கொள்கைக் குடும்பங்களுக்கு ‘தந்தை பெரியார் 148’ ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும்,நன்றியையும் தெரிவித்தனர்.
1.45 மணிக்கு முற்பகுதி நிகழ்வுகள் முடிந்து மதியம் தோழர்கள் இறைச்சி உணவு அருந்தினர்.

2.10 மணிக்கு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. இளம் மாணவர்களும், மகளிரும், தோழர்களும் வயது பாராமல் விளையாடினர். அதில், வாயில் ஸ்பூன் மீது எழுமிச்சை பழத்தை வைத்து மெல்ல நடத்தல்; இசையை ரசித்தப்படி வட்டமடித்து இலக்கு எண்களில் அடைந்து விளையாடுதல்;
(1 முதல் 6 வரை துண்டுச் சீட்டை எடுத்து எந்த எண்களை வாசிக்கின்றோமோ அந்த எண்ணில் உள்ள தோழர்கள் விளையாட்டை விட்டு வெளியேருவார்கள்)
அதனைத் தொடர்ந்து, பலூனை ஊதி அனைத்து மாணவச் செல்வங்கள், மகளிர் அணியினர் அனைவருமே மேடைக்கு அழைத்து அனைவரிடமும் பலூனை கொடுத்து ஒரே நேரத்தில் ஊதி உடைக்க வைக்கும் விளையாட்டில் அரங்கமே படார் படார் என திடீரென சத்தத்துடன் தோழர்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.
உடற்கல்வி இயக்குநர்கள் நாத்திக.பொன்முடி, விஜயசங்கர், குப்புசாமி, பழனிச்சாமி, ஆகியோர் நடத்தினர்.
போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்த வெற்றி யாளர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ், பரிசுகள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
3.15 மணிக்கு புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சி தொடங்கியது.
அனைவருக்கும் வணக்கம்!
கருஞ்சட்டை தோழர்களுக்கு வணக்கம்!
கடவுள் மறுப்பாளர்களுக்கு வணக்கம்!
பெரியார் படை, பட்டாளங்களுக்கு வணக்கம்!
ஆசிரியர் வீரமணி, கொள்கை உறவுகளுக்கு வணக்கம்! வணக்கம்!! என்ற பாடலுடன் தொடங்கியது. சிந்தனைகளைத் தூண்டுகின்ற அளவிற்கு தந்தை பெரியார், எம்.ஆர்.ராதா, என்.எஸ். கிருஷ்ணன், இவர்களின் குரலிலும், இன்றைய ஆட்சியின் அவலங்களைச் சுட்டிக்காட்டியும், திராவிடர் இயக்கக் கொள்கைகளையும் பாடல்கள் மூலம் பாடி, நையாண்டி மேளத்துடன், 5.45 மணிக்கு முடித்தனர்.
காலை முதல் மாலை வரை சுவையான தேநீர் நிலையம் உள் அரங்கிலேயே ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நிகழ்வானது அனைவருக்குமே இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.
அரங்கத்தில் நடைபெறாத
நான்கு நிகழ்வுகள்
- அனாவசியமாக யாரும் கைப்பேசி பயன்படுத்தவில்லை.
- பொதுவாகவே 45 நிமிடம் வகுப்பு நடக்கும் போது கூட குறைந்தது 5 முறையாவது கையில் கட்டிருக்கும் கடிகாரத்தில் மணி பார்ப்போம். இங்கு யாரும் அது போல் பார்க்கவில்லை.
- அக்கம் பக்கம் கூட ஒருவருக்கொருவர் தேவையில்லாமல் யாரும் பேசவில்லை. நிகழ்ச்சியில் கவனமாக அடுத்தடுத்து என்ன நிகழ்வு என்பதில் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
- விசிலடிக்கும் ஓசையே நிகழ்ச்சியில் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதான் கொள்கைப் பிடிப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் அடிக்கடி ஒன்றை சொல்வார்
ரத்த உறவை விட கொள்கை உறவு கெட்டியானது – உறுதியானது.
அந்த நம்பிக்கையை தான் அரங்கத்தில் உள்ள நம் இளைஞர்கள் மாணவர்கள், மகளிர் அணியினர், திராவிடர் கழகத் தோழர்கள் வருகை புரிந்த ஆதர வாளர்கள் அனைவருமே ஒவ்வொரு நிகழ்விற்கும் கையொலி எழுப்பி ஆர்வத்துடன் ரசித்ததை உணர முடிந்தது.
இன்றைய சூழ்நிலையில் காசு கொடுத்து, வேட்டியும் புடவையும் கொடுத்து கூட்டத்திற்கு ஆள் சேர்க்கின்ற நிலையில், நுழைவுக் கட்டணம் செலுத்தி விட்டு பெரியார் கொள்கைக் குடும்பங்கள் வந்து நாள் முழுவதும் இருந்து கொள்கைக் கோட்பாடுகளை செவிமடுத்தனர் என்பது, நாளைய சமுகத்தின் மீது நம்பிக்கையைப் பிறக்கச் செய்தது.
நிகழ்விற்கு ஒத்துழைத்த திராவிடர் கழக அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், அனைவரின் நேரம் பாராமல் உழைப்பு; ஆகையால் தான் மாபெரும் வெற்றி.
கொள்கை உறவுகளே பெரியாரை வாசிப்போம்! பெரியாரை சுவாசிப்போம்!! தமிழர் தலைவர் ஆசிரியர் காட்டும் திசையில் பயணிப்போம்!
மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர் செ.திலகவதி, அனைவருக்கும் நன்றி கூறினார்.
