சா ஆலாம், அக்.1 மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் ஏற்பாட்டில், தந்தை பெரியார் 148ஆம் அகவை விழா கடந்த ஞாயிறு (27.9.2026) மாலை 5.00 மணிக்கு, சா ஆலாம் (Shah Alam), பிரிவு 17இல் உள்ள மெர்பாவ் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் தலைமைச் செயலாளர் கி.மு. விந்தைக்குமரன் அவர்களின் வரவேற்புரையுடன் விழா தொடங்கியது. விழாவிற்கு தலைமையேற்ற மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் துணைத் தலைவர் “தன்மானப் பெருஞ்சுடர்”
த. பரமசிவம் பேசுகையில், ‘‘மூடநம்பிக்கைகளும் சடங்குகளும் நமது மூளையில் பதிந்துகிடப்பதால், நாமே நினைத்தாலும் அதிலிருந்து விடுபடுவதற்கு முடியாமல் இருக்கிறோம். தந்தை பெரியாரின் புத்தகங்களைப் படிப்பதாலும், அவற்றைச் சிந்திப்பதாலும் மூடப் பழக்கங்களிலிருந்து விடுபடலாம்’’ என்றார்.
மலேசியாவில் இயங்கும் பெரியாரிய இயக்கங்களான, மலேசியத் திராவிடர் கழகம், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம், பேராக் பெரியார் பாசறை மற்றும் கருஞ்சட்டை இளைஞர் படையின் தலைவர்களும், தோழர்களும், பொதுமக்களும் நிறைவாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் சா. பாரதி, மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத் தலைவர் நாக். பஞ்சு.AMN, பேராக் பெரியார் பாசறைத் தலைவர் மு. மணிமாறன், கருஞ்சட்டை இளைஞர் படையின் ஒருங்கிணைப்பாளர் ச. நாகேந்திரன் ஆகியோர் பெரியாரின் ஜாதி ஒழிப்பு, தன்மான இன மானக் கொள்கைகள், பெண்கள் கல்வி, மூட நம்பிக்கை ஒழிப்பு மட்டுமின்றி, மலேசிய மக்களுக்கு பெரியார் இன்னும் தேவைப்படுகிறார் போன்ற கருத்துகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.
மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் தேசியத் தலைவர் “எழுத்தாண்மை ஏந்தல்” முனைவர் பெரு.அ. தமிழ்மணி நிறைவுரையாற்றினார். நாம் வாழ்வது மலேசிய திருநாடு. இங்கு நாம் மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் பிற இனத்தவர்களுடன் வாழ்ந்து வருகிறோம். இங்கு கோயில்கள் இருக்கின்றன. வழிபாடுகள் நடக்கின்றன. மூடநம்பிக்கைகளும் ஜாதியப் பாகுபாடுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்றார். இவற்றை மாற்றிட நாம் உழைத்தாலும், ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கு ஏற்பச் சிந்தித்து மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இங்கே எல்லா திராவிட இயக்கங்களும் இணக்கமாகவும் ஒத்துழைப்புடனும் செயல்பட்டுக் கொண்டிருப்பது மகிழ்ச்சி யளிப் பதாக இருக்கிறது. பெரியாரியக் கருத்துகளை மக் களிடையே எடுத்துச் சொல்வது நமது கடமையாகும். சிந் தனைகளை தூண்டுவதும் நமது வேலையாகும் என்று உரையாற்றினார்.
இவ்விழாவில், திராவிட பாரம்பரியத்தில் இன்றளவும் வாழ்ந்துவரும் அம்மையார் மருதம்மாள் முனியாண்டி அவர்களுக்கு, செழுந்தே பெரியார் தொண்டர் சு. மூர்த்தி- செயலட்சுமி இணையர்கள் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள். மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் துணைச் செயலாளர் பெ. கோவிந்தசாமி நன்றியுரையுடன் மாலை 7.00 மணியளவில் விழா நிறைவுற்றது.
