புதுடில்லி, அக்.1 நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவ னங்களில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களின் வழிகாட்டி பேராசிரியர்கள் ஜாதிய மனப் பான்மையோடு நடந்துகொள்வதாக உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழுவின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தற்கொலை நிகழ்வுகள்
டில்லி, மும்பை அய்.அய்.டி உள்ளிட்ட புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த மாண வர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், தற்கொலைகளுக்கான காரணங்களைக் கண்டறியவும், மனநலப் பாதுகாப்பிற்கான வழி காட்டுதல்களை உருவாக்கவும் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் முன் னாள் நீதிபதி ரவீந்திர பட் தலைமையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேசிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு தனது விரிவான அறிக்கையை வரும் அக்டோபர் 31-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.
2.43 லட்சம்
மாணவர்களிடம் ஆய்வு
நாடு முழுவதும் 2.43 லட்சம் மாணவர்களிடம் மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வில், பங்கேற்ற வர்களில் 67 சதவீதம் பேர் பட்டி யலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அறிக்கையில் இடம்பெற்றுள்ள அதிர்ச்சித் தகவல்கள்
கடந்த ஆண்டில் 9 சதவீத மாணவர்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் அடிக்கடி தோன்றி யுள்ளன. மேலும், கடந்த ஆறு மாதங்களில் 15 சதவீதம் பேர் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆய்வில் பங்கேற்ற 34 சதவீத மாணவர்கள் கல்வி வளாகங்களில் தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும், புறக்கணிக் கப்படுவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
கடுமையான பிரச்சினைகள் ஏற்படும் போது கல்வி நிறுவன நிர்வாகம் நியாயமாகச் செயல்படும் என்று 56 சதவீத மாணவர்கள் மட்டுமே நம்புகின்றனர்.
தமிழ்நாடு, கருநாடகா, டில்லி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 19 கல்வி வளாகங்களில் 30-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்களை இக்குழு நடத்தியது. இதில் மாண வர்கள் முன்வைத்த முதன்மைப் புகார்கள்:
ஜாதிய ரீதியாக…
ஆராய்ச்சி மாணவர்களை வழிகாட்டி பேராசிரியர்கள் சிலர் அதீதக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்துவதோடு, ஜாதிய ரீதியாகவும் சுரண்டலுக்கு ஆளாக்கு கின்றனர்.
மாநிலப் பல்கலைக்கழகங்களில் போதிய அளவுக்கு பேராசிரியர்கள் நியமிக்கப்படாமல் காலியாக உள்ளனர்.
பல் மருத்துவம் மற்றும் செவிலியர் துறைகளில் மாண வர்களுக்கு முறையான நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. கல்வி நிறுவனங்களின் பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறி, மாண வர்கள் தங்களின் சமூக, கலாசார மற்றும் நிர்வாக ரீதியிலான சிக்கல்களை இக்குழுவிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இக்கடுமையான சூழலை மாற்ற உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிக்கை மிக முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
