புதுடில்லி, அக்.1 ஒன்றிய அரசின் என்.சி.இ. ஆர்.டி. அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள 9 ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், ரஷ்ய மற்றும் பிரெஞ்சுப் புரட்சிகள் குறித்த முக்கியப் பாடங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, இந்தியா மீதான அந்நியப் படையெடுப்புகளுக்கு முக்கி யத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய பாடப் புத்தகம்!
கடந்த 29.9.2026 அன்று வெளியிடப்பட்ட இந்தப் புதிய பாடப் புத்தகத்திற்கு, “சமூ கத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும் – பகுதி இரண்டு” எனப் பெயரிடப்பட்டுள்ளது. 7 ஆம் நூற்றாண்டு முதல் இந்தியத் துணைக் கண்டம் ‘‘நிலப்பரப்பு விரிவாக்கம் மற்றும் மத நோக்கங்களால்’’ தூண்டப்பட்ட தொடர்ச்சியான படையெடுப்புகளைச் சந்தித்தது என்று இந்தப் புதிய பாடப் புத்தகம் கூறுகிறது. சீக்கிய குருக்களுக்கு எதிராக முகலாய அரசுகள் கொடூரங்களைக் கட்டவிழ்த்து விட்டதாகவும் பிரச்சாரம் செய்கிறது. பிரெஞ்சு மற்றும் ரஷ்யப் புரட்சிகள் உள்ளிட்ட அய்ரோப்பியப் புரட்சிகள் குறித்த முந்தைய பதிப்பின் பாடங்களுக்குப் பதிலாக, இந்திய இறையாண்மை பற்றிய விரிவான விளக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
புரட்சிகள் குறித்த பாடங்களைத் திட்டமிட்டு நீக்கிவிட்டு…
வரலாற்றில் அடக்குமுறைகளுக்கும், அநீதி களுக்கும் எதிராக மக்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்கள் மற்றும் புரட்சிகள் குறித்த பாடங்களைத் திட்டமிட்டு நீக்கிவிட்டு, செல்வத்தைக் கொள்ளையடிக்கவும், நாடு பிடிப்பதற்காகவும் இந்தியா மீது நடந்த படையெடுப்புகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் புதிய பாடப் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், இந்த மாற்றங்களானது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சா ரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது. அதற்காகவே இப்பாடப் பகுதியில் எந்தவொரு ஆய்வும் இன்றி இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பைக் குறிவைத்து எதிர்மறையாக எழுதப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தவறு செய்யும் அரசுகளுக்கு எதிராகவும், சமூக நீதிக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் போராட்ட உணர்வை இளைய தலைமுறையினரிடமிருந்து மழுங்கடிக்கும் நோக்கத்திலேயே இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தியல் பிரச்சாரத்தை மாணவர்களுக்குள் திணிக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படு கிறது.
மேலும், இந்தியா மீது நடந்த படை யெடுப்புகளைச் சரியான வரலாற்று மற்றும் சமூக- பொருளாதார ஆய்வுக் கோணத்தில் மாணவர்களுக்குக் கற்பிக்காமல், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீதான ‘அந்நியர் வெறுப்பை’ விதைக்கும் வகையிலேயே இப்பாடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
கல்வியாளர்கள் கண்டனம்
பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மாநிலங்கள் அளவிலான தலைவர்களின் வர லாற்றுப் பங்களிப்புகள் புறக்க ணிக்கப்பட்டு, ஒருசார்பான கருத்துகள் பாடப்புத்தகங்களில் திணிக்கப்படுவதாகக் கல்வியாளர்கள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
