நம்பிக்கை இழக்கும் தேர்தல் ஆணையம்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

‘‘நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் ‘சிறப்புத் தீவிரத் திருத்த’ (SIR) நடவடிக்கை என்பது, அரசியல் சமூகத்திலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களையும், பிற மதத்தாரையும் நீக்குவதன் மூலம், இந்தியாவை ஒரு மேல்ஜாதி (சவர்ணா) இந்து ராஷ்டிரமாக மாற்றுவதே இதன் நோக்கம். சிறப்புத் தீவிரத் திருத்தம் என்பது வெறும் தேர்தல் தொடர்பான விவகாரம் மட்டுமல்ல” என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார் பொருளாதார வல்லுநரும், எழுத்தாளருமான பரகாலா பிரபாகர். ‘‘பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் விளிம்புநிலை மற்றும் குரலற்ற மக்களாகவே இருக்கின்றனர்’’ என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கருநாடகா, கேரளம், இமாச்சலப்பிரதேசம் போன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுகிறதே என்று கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், “நீங்கள் கேசினோ சூதாட்டம் விளையாடியிருக்கிறீர்களா? முதலில் நீங்கள் வெற்றி பெறுவது போல் இருக்கும். பின்னர் தோற்பீர்கள். இடையிடையில் வெற்றி பெற வைக்கப்படுவீர்கள். தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருந்தால், நீங்கள் சூதாட்டத்திலிருந்து வெளியேறி விட மாட்டீர்களா? அதற்காகத்தான், அவ்வப்போது வெற்றி பெறும் சூழலை உருவாக்குவார்கள். இதுதான் சில மாநிலத் தேர்தல்களிலும் நடக்கிறது. அந்த ஆசையை, நம்பிக்கையைத் தகர்த்துவிடக் கூடாது என்று சூதாட்டத்தை நடத்துவோருக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு, “மகாபாரதத்தில் தருமன், கடைசி வரை தன்னுடைய மனைவியை வைத்தாவது வெற்றி பெற்று, இழந்ததை மீட்டுவிடலாம் என்று கருதினானே, அதுதான் சூதாட்ட மனநிலை” என்று  சொன்ன எடுத்துக்காட்டு தான் பிரச்சினையை எளிதில் புரியச் செய்வதாகும்.

நேற்று பெரியார் திடலில் நடைபெற்ற இந்திய மக்கள் வாக்குரிமை மீட்பு இயக்கத்தின் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதும் அவர் எடுத்துரைத்த கருத்துகள், அவருடையவை மட்டுமல்ல, இந்தியாவின் நடப்பு நிலையைக் கவலையோடு உற்று கவனித்துவரும் அனைத்து ஜனநாயகவாதிகளின் கவலையும் ஆகும்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு மட்டங்களிலும் குரல்கள் எழுந்து வருகின்றன. அன்றாடம், புதுப் புதுக் கேள்விகளும் பிரச்சினை களும் தேர்தல் ஆணையம் தொடர்பாக எழுந்துகொண்டே இருக்கின்றன. தலைமைத் தேர்தல் ஆணையரின் மீது குற்றச்சாட்டு வெளிப்பட்டதும், அதைச் சரிக்கட்டும் வகையில், ஒரு பத்திரிகைச் செய்தியை வெளியிட்டு, பெரும்பாலான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? ஆனால், மேற்கு வங்கத்தில் நீதித்துறை அதிகாரிகளால் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களை நீக்குவதற்கான 16.1 லட்சம் மேல்முறையீடுகளுக்கு யார் அனுமதி அளித்தது என்ற திரு சாந்துவின் கேள்விக்கு எந்தப் பதிலும் இல்லை.

தேர்தல் ஆணையத்தின் வாதப்படி, எஸ்.அய்.ஆரால் நீக்கப்பட்ட 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் ஆதாரமற்றவை அல்லது போலி வாக்குகள். அப்படியெனில், சரியாக எஸ்.அய்.ஆருக்கு ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இத்தனைக் கோடி போலி வாக்குகளுடன் நடைபெற்ற தேர்தலும், அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களும் ஏற்புடையவையா? அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக பிரதமர் உள்ளிட்டவர்கள் எல்லாம் போலி வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆக மாட்டார்களா? அவர்களெல்லாம் பதவியில் நீடிக்கலாமா? என்ற கேள்வியைத் தொடர்ந்து பல செயல்பாட்டாளர்கள் கேட்கிறார்கள்.

அல்லது… நீக்கப்பட்டது சரிதான் என்று தேர்தல் ஆணையம் வாதிடுமானால், எஸ்.அய்.ஆரால் நீக்கப்பட்ட பலர், தேர்தலுக்குப் பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் ஏறத்தாழ 90% வாக்காளர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு தகவல். அவர்களை நீக்கிவிட்டு அதன் பிறகு நடந்த தேர்தல்கள் செல்லுபடியாகக் கூடியவையா?

எல்லா பட்டியலையும் இறுதி செய்யும் ‘பூட்டை’ டில்லியில் கொண்டுபோய் வைத்துக் கொண்டு கட்டுப்படுத்திய, தேர்தல் ஆணையத் தகவல் தொழில்நுட்பத்துறையின் சட்ட விரோதச் செயல்பாட்டுக்குப் பரிகாரம் என்ன – மீண்டும் புதிய வாக்காளர்களைப் போல விண்ணப்பிக்கச் செய்வதா?

தேர்தல் ஆணையம் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 2023-ஆம் ஆண்டு சட்டப்படி அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையமே ஒட்டு மொத்தமாகக் கலைக்கப்பட்டு, புதிய சுதந்திரமான, சார்பற்ற தேர்தல் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் பரகாலா பிரபாகர்.

மேற்கு வங்கம் தொடர்பான வழக்கில் ‘இடைத்தேர்தல் தானே… எஸ்.அய்.ஆர். பிரச்சினையை இதில் ஏன் எழுப்புகிறீர்கள்? இதெல்லாம் அவசர வழக்கு இல்லை’ என்கிறது உச்சநீதிமன்றம். அக்டோபர் 6-ஆம் தேதி நடக்கும் தேர்தலில் வாக்களிக்க உரிமை கோரும் வழக்கை அக்டோபர் 5-ஆம் தேதி விசாரிப்பதாக ஒத்தி வைத்துள்ளார் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி. நீதித் துறையின் தாமதமும், அலட்சியமும் வாக்காளர்களின் மீதும், தேர்தல்களின் மீதும் இவ்வளவு தான் மரியாதையா…! என்னும் கேள்வியை எழுப்பவில்லையா? இடைத்தேர்தல்கள் என்றால் இளக்காரமா? என்னும் கேள்விகள் எங்கும் எழுகின்றனவே! ஒரு எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.யால் ஆட்சிகள் மாறுவதில்லையா? ஒரே ஒரு ஓட்டு ஒருவரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில்லையா? ‘இந்தியா இன்னும் ஒரு ஜனநாயக நாடு தானா?’ என்னும் சந்தேகம் மக்கள் மத்தியில் வலுவாக எழுந்திருக்கிறது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *