‘பஜன் கிளப்பிங்!’
தேசத்தின் தொன்மையான பஜனை மற்றும் பக்திப் பாரம்பரியத்தை காங்கிரஸ் மீண்டும் அவமதித்துவிட்டதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
‘பஜன் கிளப்பிங்’ என்ற பக்தி இசை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றதை காங்கிரஸ் விமர்சித்த நிலையில், பா.ஜ.க. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பக்தி இசை நிகழ்ச்சியை மிகுந்த ஆர்வத்துடன் ரசித்துக் கேட்டாராம்.
இதுகுறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும், கருநாடக மாநில அமைச்சருமான பிரியங் கார்கே விமர்சித்துள்ளார்.
‘பிரதமர் மோடிக்குப் ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரமிருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் மூலம் ஜனநாயகத்தை நசுக்குவது போன்ற தீவிரமான கேள்விக்குப் பதில் அளிக்க நேரமில்லை’ என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவ்வளவுதான், ‘அத்திரிபாட்சா கொழுக்கட்டை!’ என்று பா.ஜ.க. தரப்பில், அதன் செய்தித் தொடர்பாளர் கேசவன் என்பவர் எகிறிக் குதித்துள்ளார்.
‘நாட்டின் தொன்மையான கலாச்சாரத்தை காங்கிரஸ் மீண்டும் அவமதித்துவிட்டது’ என்கிறார்.
ஒரு மதச்சார்பற்ற (அரசமைப்புச் சட்டப்படி) ஆட்சியின் பிரதமர் குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உருகி உருகி இரசிப்பது எல்லாம் எந்த வகையைச் சார்ந்தது?
இவர்களின் பின்புலத்தை உணர்ந்தவர்களுக்கு ‘ஹிந்துராஷ்டிரா’வை அமைப்போம் என்று கூறக் கூடியவர்கள், அந்தத் திசையில் பயணிக்கின்றவர்கள் என்பது வெளிப்படை.
இது, அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு விரோதம் என்பதைச் சுட்டிக்காட்டினால், மூக்கு மீது கோபம் கொப்பளித்து வெடிக்கிறது.
யார் ஆட்சியில்
இருந்தாலும், அரசமைப்புச் சட்டப்படி மதச்சார்பின்மையின் அடிப்படையில் பொதுவெளியில் நடக்கக் கடமைப்பட்டவர்களே! (தனிப்பட்ட பக்திப் பரவசத்தை எல்லாம் மூட்டைக் கட்டி, வீட்டின் பூஜை அறைக்குள் வைத்துக் கொள்ளவேண்டும்.)
ஆனால், பிஜே.பி.யின் மதச்சார்பின்மை என்பது – அடுத்த மதக்காரர்களைச் சீண்டுவது, மற்றொரு மதக்காரர்களின் வழிபாட்டுத் தலங்களை அடித்து நொறுக்குவதுதான்!
அதுவும் இன்றைய இந்தியப் பிரதமர் மோடி இருக்கிறாரே – ஒரு சிலர் வளமாக இருப்பதற்கும், பெரும்பாலோர் சிறுமைப்பட்டு, அன்றாட வாழ்வுக்கே அல்லல்படுவதற்கும், அவரவர்களின் கர்மப் பலன் என்று பச்சையாகக் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, ‘கர்ம யோக்’ என்று நூல் எழுதி, அரசு சார்பில் வெளியிட்டவர் ஆயிற்றே!
– மயிலாடன்
