சிறீநகர், செப். 29- ஜம்மு – காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய மாநிலத் தகுதி வழங்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் நேற்று (28.9.2026) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி (சட்டப்பிரிவு 370) நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு – காஷ்மீர், இரு யூனி யன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இதன்படி ஜம்மு –காஷ்மீர் சட்டப்பேரவையுடன்கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உதயமாகின. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
முதலமைச்சர் உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று (28.9.2026) சிறப்புத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதில் 1953 ஆம் ஆண்டுக்கு முந்தைய அரசியலமைப்புத் தகுதி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.
அதாவது பாதுகாப்பு, வெளியுறவு
கொள்கை, கரன்சி உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை தவிர்த்து இதர அனைத்துத் துறைகளிலும் காஷ்மீர் அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க அதிகாரம் வழங்க வேண்டும் என்று தீர்மானத்தில் கோரப்பட்டு உள்ளது. மேலும் சட்டப்பிரிவு 370 மற்றும் 35-அய் மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு பாஜக முழு ஆதரவு தெரிவித்து உள்ளது. ஆனால் தன்னாட்சி அதிகாரம் மற்றும் சிறப்புத் தகுதி மீண்டும் கோருவதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நேற்று (28.9.2026) சட்டப்பேரவையின் மய்யப் பகுதியில் கூடி தீர்மானத்துக்கு எதிராக குரல் எழுப்பினர். அமளியில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற பேரவைத் தலைவர் அப்துல் ரஹீம் ரத்தர் உத்தரவிட்டார்.
இதன்பேரில் 4 சட்டமன்ற உறுப்பி னர் களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர். இதன்பிறகு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா கூறியதாவது:
ஜம்மு – காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநிலத் தகுதி வழங்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். அவர் அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார். காஷ்மீருக்கு மாநிலத் தகுதி கிடைக்க பாஜக முழு ஆதரவு அளிக்கிறது.
ஆனால், இதைச் சீர்குலைக்கும் வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தன்னாட்சி அதிகாரம் கோரி கடந்த 2000 ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா காலத்தில் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது நாட்டு நலனுக்கு எதிரானது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறும்போது, “தீவிரவாதம் முழுமையாக ஓய்ந்த பிறகே காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு கூறு கிறது. இதை ஏற்க முடியாது. உடனடியாக மாநிலத் தகுதி வழங்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
