தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) 2005-ஆம் ஆண்டு ஜூன் 15-அன்று நாடாளுமன்றத்தில் அன்றைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நிறைவேற்றப்பட்டு, 2005-ஆம் ஆண்டு அக்டோபர் 12-அன்று இந்திய அளவில் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. அது திடீரென கொண்டுவரப்பட்டதல்ல. இதற்கும் தமிழ்நாடு தான் முன்னோடி. 1997-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு ‘தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ என்ற பெயரில் நிறைவேற்றிய சட்டமே, இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடி ஆகும். அதன் பின்னர் தான் – கோவா, கருநாடகா, மகாராட்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இச் சட்டத்தைக் கொண்டுவந்தன. அதனைத் தொடர்ந்து 2002-ஆம் ஆண்டு தகவல் சுதந்திரச் சட்டம் (Freedom of Information Act) என்ற ஒன்றை பா.ஜ.க. கொண்டு வந்தது. ஆனால், அது வலுவற்ற ஒன்றாகவே இருந்தது. வெறும் பெயரளவுக்கான இந்தச் சட்டத்தை வாஜ்பேயி அரசு நடைமுறைப்படுத்தவேயில்லை என்பதே குறிப்பிடத்தக்கது. இது அரசியல் சட்டம் வழங்கும் பேச்சுரிமை, கருத்துரிமைக்கு உட்பட்டதே என்று 1975-இல் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தனிச் சட்டமாகச் செயலாவதற்கு அதன் பின்னர் 30 ஆண்டுகள் தேவைப்பட்டது.
இந்தியக் குடிமக்களுக்குக் கிடைத்த மிக முக்கியமான உரிமையாகவும், ஜனநாயகத்தின் உண்மையான உரிமையாளர்கள் மக்களே என்பதை நடைமுறையில் கொண்டுவருவதாகவும் இச் சட்டம் இருந்தது வரலாற்று உண்மை. ஆனால், 2014-இல் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, சட்டத் திருத்தங்கள், நிர்வாக ரீதியான முடிவுகள் மூலம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) திட்டமிட்டுச் சிதைத்துவிட்டது.
ஆட்சிக்கு வந்தது முதலே, தங்களைக் கேள்வி கேட்க, தங்களின் நடவடிக்கைகளை, பின்னணிகளை ஆராய, தகவல் அறியும் உரிமைச் சட்டம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது என்பதை உணர்ந்த பாஜக, அதனை வலுவிழக்கச் செய்யும் வேலைகளைத் தொடங்கியது.
இந்தியப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்த, பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இம் முடிவுக்கு வரக் காரணமான கூட்டங்களின் அதிகாரப்பூர்வக் குறிப்புகளையும் இக்கொள்கையின் பொருளாதாரத் தாக்கம் குறித்த மதிப்பீடுகளையும் கேட்டு பல கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், அது நாட்டின் பொருளாதார நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி, ரிசர்வ் வங்கியும் நிதியமைச்சகமும் இக்கோரிக்கைகளை நிராகரித்துவிட்டன. பிரதமர் நரேந்திர மோடி, 1978இல் டில்லி பல்கலைக் கழகத்தில் பி.ஏ., படித்ததாகவும்,
1983-இல் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. -ஒட்டுமொத்த அரசியல் அறிவியல் படித்ததாகவும் (அப்படியொரு படிப்பே இல்லை) குறிப்பிட்டிருந்த தகவல்கள் குறித்த விவரங்களை வெளியிடமுடியாது என்று டில்லி பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது; பிரதமர் பதவிக்குக் கல்வித் தகுதி கிடையாது என்பதால், அதை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றமும் தீர்ப்பளித்துவிட்டது. இப்படித்தான் பி.எம்.கேர்ஸ் நிதி, ரஃபேல் விமான ஒப்பந்தம், பெரு நிறுவனங்களின் கடன் பாக்கி விவரங்கள், கோவிட் லாக் டவுன் காலத்து விவரங்கள், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் என்று பல முக்கியமான பிரச்சினைகள் குறித்த தரவுகளை வழங்க மறுத்தது.
இதனிடையே 2019-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்து, தலைமைத் தகவல் ஆணையரையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஆட்பட்டவராக மாற்றியது. அய்ந்தாண்டு கால நிலையானதாக இருந்த தகவல் ஆணையர்களின் பதவிக்காலத்தை நீக்கி, அவர்களின் பதவிக்காலத்தை ஒன்றிய அரசு நிர்ணயிக்க வழிவகுத்தது. தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இணையாக இருந்த தலைமைத் தகவல் ஆணையரின் ஊதியத்தையும் அதிகாரத்தையும் தீர்மானிக்க ஒன்றிய அரசுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கியதன் மூலம், சுதந்திரமாக இருந்த இந்தக் கண்காணிப்பு அமைப்பை அரசுக்கு அடிபணிய வேண்டியவர்களாக மாற்றினர். பல்வேறு திருத்தங்கள் மூலம் சட்டத்தைச் சிதைத்தது பா.ஜ.க.
பின்னர், 2023-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், ஆர்.டி.அய் சட்டத்தை மறைமுகமாகப் பாதித்தது. தனிநபர் விவரங்களைத் தருவதைத் தடை செய்தது.
பா.ஜ.க.வின் இந்தச் செயல்பாடுகளை மாதிரியாக (Model) எடுத்துக் கொண்டுதான் தமிழ்நாட்டின் த.வெ.க. அரசு கடந்த இரு நாட்களுக்கு முன்னர் (செப்டம்பர் 27), தமிழ்நாட்டின் பொது சட்டம் – ஒழுங்கு விவரங்களைக் கூட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிய முடியாது என்று அரசாணை விடுத்தது. ஏனெனில், கடந்த நான்கு மாதங்களுக்குள் பல சுற்றறிக்கைகளும், அரசாணைகளும் வெளியிடப்பட்டு, சில காலம் கழித்து ஊடகங்களில் வெளிவந்து, அவை அனைத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாணியிலேயே, பாசிச நோக்குடன் இருப்பதால், கடும் எதிர்ப்பைச் சந்திப்பதும், அதன் காரணமாகத் திரும்பப் பெறப்படுவதுமாக இருக்கும் சூழலில், இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். அதைத் தடுக்கவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்பது வெள்ளிடை மலை! கடும் எதிர்ப்பின் காரணமாக ஆறு மணி நேரத்திற்குள் அந்த அரசாணை திரும்பப் பெறப் பட்டாலும், வெளிப்படையான நிர்வாகம் என்பது இவர்களைப் பொறுத்தவரை வெற்று முழக்கமே என்பதற்கு அந்த அரசாணையே சான்றாகும். கையில் கறை இல்லையென்றால், விரித்துக்காட்ட அஞ்ச வேண்டியதில்லை!
