அமர்நாத்தில் கரைந்தது; ஆக்ராவில் முளைத்தது

4 Min Read

அமர்நாத் யாத்திரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ‘பாபா பர்ஃபானி’ என்றும் அழைக்கப்படும் பனி லிங்கத்தின் ‘அருளைப்’ பெற கூட்டம் கூட்டமாகப் பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்கின்றனர். ஆனால், 57 நாட்கள் கொண்ட இந்த யாத்திரை தொடங்கிய சில நாட்களிலேயே, பனி லிங்கம் 90%-க்கும் அதிகமாக உருகி கிட்டத்தட்ட மறைந்தேவிட்டதாம்.

அமர்நாத் பனி சிவலிங்கம் என்பது இயற்கையாக உருவாகும் ஒரு ‘ஸ்டாலக்மைட்’ (stalagmite – குகையின் தரையில் இருந்து மேல்நோக்கி வளரும் பனி வடிவம்) ஆகும். இமயமலையில் அமைந்துள்ள இந்த குகைக்கு மேலே உள்ள பனிப்பாறைகள் உருகும் போது, அந்த தண்ணீர் பாறைகளின் நுண்ணிய துளைகள் மற்றும் விரிசல்கள் வழியாக குகைக்குள் நுழைகிறது. இது குகையின் மேல் உள்ள விரிசல்கள் வழியே கசியும் தண்ணீர், உறைபனி காலநிலையில் சொட்டுச் சொட்டாக விழுந்து உறைவதால் ஏற்படுகிறது. இதே போல சுண்ணாம்புக் கல்லில் மேலிருந்து கீழாக வடியும் நீரிலுள்ள உப்புப் படிமங்கள் சேர்ந்து தலைகீழாகவும் இப்படி வடிவம் தோன்றும். இதை ‘ஸ்டாலக்டைட்’ என்பார்கள்.  இது இங்கு மட்டுமல்ல… உலகின் பல நாடுகளில் ஏற்படுவதுண்டு. அப்படியே அமர்நாத்தை ஒத்த இதே பனியிலேயே நீளமாக உருவாகும் அமைப்புகள் ஆஸ்திரியாவில் உள்ளன; ஸ்லோவாக்கியாவில் உள்ளன; நியூசிலாந்தில் உள்ளன. அங்கெல்லாம் சிவலிங்கம் தான் தோன்றுகிறதா? பனிலிங்கம், சுண்ணாம்புக் கல் லிங்கம், தலைகீழாகத் தொங்கும் லிங்கம் என்றெல்லாம் இருக்கிறதா என்று பகுத்தறிவு மேடைகளில் கேட்கப்படுவதுண்டு.

இந்த அமர்நாத் பனி லிங்கத்தைத் தரிசிக்கச் செல்கிறோம் என்று பலர் மாண்ட சோக நிகழ்வுகள் உண்டு; இன்றும் கூட கூட்டத்தில், அந்த உயரத்தில் செல்லக் கூடாதோர் சென்று உயிரிழப்பதும் உண்டு.

ஆனால், இந்த ஆண்டு ‘சிவலிங்கம்’ மிக வேகமாக உருகிக் காணாமல் போய்விட்டது. சிவனின் சக்தி அவ்வளவு தானா?  உண்மையான காரணம் என்ன? வெப்பநிலை அதிகரித்திருக்கிறது. பனி லிங்கம் உருகுவது இமயமலைக்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையிலான சிக்கலான தொடர்பை வெளிப்படுத்தி எச்சரிக்கை மணி அடிக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

அமர்நாத் குகை கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் (12,756 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. குகையிலும், அதன் அருகிலுள்ள பனிப்பாறைகளைச் சுற்றியும்   பனியைத் தக்கவைக்கத் தேவையான வெப்பநிலையை விட அப்பகுதியின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

“எங்கள் அண்மை ஆய்வில், 2000 – 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இமயமலையின் பனியும் பனிப்பாறைப் பரப்பும் 23%-க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதும், 2010-க்குப் பிறகு இந்த இழப்பு விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.  அமர்நாத் குகை அமைந்துள்ள மேற்கு இமயமலைப் பகுதி, குறிப்பாக வேகமாக வெப்பமடைந்து வரும் பகுதிகளில் ஒன்றாகும். பனிப்பாறைகள் பின்வாங்குதல், பருவகால பனிப்போர்வை சுருங்குதல் அல்லது தனித்துவமான இயற்கை பனி அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் என எதன் அடிப்படையில் பார்த்தாலும், ஒரே செய்திதான் கிடைக்கிறது: இமயமலையின் காலநிலை முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் மாறி வருகிறது” என்று இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளவரும், சுற்றுச்சூழல் அறிவியலில் ஆற்றிய பணிக்காகப் பத்மசிறீ விருது பெற்றவருமான டாக்டர் ஏக்லவ்யா சர்மா எச்சரிக்கிறார்.

உலகளாவிய காலநிலையை ஆராயும்போது, இமயமலையில் ஏற்படும் பாதிப்புகள் தனித்து நிகழும் நிகழ்வுகள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவை வளிமண்டலத்தில் ஏற்படும் பரந்த அளவிலான மாற்றங்களுடனும் தொடர்புடையவை.

அமர்நாத்துக்கு இந்தியா முழுவதிலும் இருந்து செல்லும் பயணிகளின் வெப்பமும் கூட முன்பு, வேகமாக உருகுவதற்கான காரணங்களாகச் சொல்லப்பட்டதுண்டு.

நிலைமை இவ்வாறு இருக்க, சிவனின் கோபம் என்றும், சிவனின் சக்தி என்றும் இதனைப் பேசிக் கொண்டிருப்பது அறிவுப் பூர்வமானதா?

பார்த்தார் ஆக்ராவில் ஒருவர்!  ‘‘அமர்நாத்தில் இல்லாவிட்டால் என்ன, எங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் சிவன் லிங்க வடிவில் தோன்றியிருக்கிறார்’’ என்று அதி குளிர் பெட்டியைத் (ஃபிரிட்ஜின் ஃப்ரீசரை) திறந்து காட்டினார். கன்னத்தில் அடித்துக் கொண்ட பக்தர்கள், இப்போது ஆக்ரா ஃபிரிட்ஜ் பனி லிங்கத்துக்கு காணிக்கை போட்டுக் கொண்டுள்ளனர். கிண்டலுக்காகச் சொல்லப்பட்ட செய்தி அல்ல இது.

ஆக்ராவின் கெரியா மோட்-நாக்லா புஜா (Kheria Mod-Nagla Bhuja) பகுதியில், ஒரு குளிர்சாதனப் பெட்டிக்குள் சிவலிங்கத்தைப் போன்ற பனி வடிவம் தோன்றியது. ஆரம்பத்தில் அந்தக் குடும்பத்தினர் அதை வழிபடத் தொடங்கினர்; ஆனால், மற்றவர்களுக்கு இச்சம்பவம் தெரிந்ததும், அவர்களும் அங்கு வந்து வழிபாட்டில் இணைந்தனர். சிறிது நேரத்திலேயே பெரும் கூட்டம் கூடியது; அப்பகுதி முழுவதும் “ஹர்-ஹர் மகாதேவ்” என்ற முழக்கங்களால் எதிரொலித்தது.

வடநாட்டுச் செய்தி ஊடகங்கள் இதனைச் செய்தியாக்கி யுள்ளனர். பாவம் அந்தச் சிவன், இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலே சக்தியிழந்துவிடுவார். அமர்நாத்தில் ஏற்படும் இயற்கையான நிகழ்வு ஒன்றை, அற்புத சக்தி நிறைந்தது என்று கொண்டாடினால், அதை வைத்து கல்லா கட்டினால், ஓர் அரசு, அதன் உண்மையை மக்களுக்குச் சொல்லாமல், அதை வைத்து மக்களை ஏமாற்றினால், அடுத்தடுத்து ஆக்ரா பனி லிங்கங்கள் தோன்றத் தான் செய்யும். அவரவர் வசதிக்கேற்ப, பனி லிங்கங்களை உருவாக்கி அடுத்தடுத்த ‘ஃபிரிட்ஜு’களுக்கும், ‘ஏசி’களுக்கும் ‘ஆர்டர்’ கொடுக்கத் தான் செய்வார்கள்.  விநாயகர் சிலை பால் குடித்த கதைபோல இதுவும் ஒன்று!

மசூதிக்குள் கொண்டு போய் வைக்கப்பட்ட ராமன் சிலைக்கு, பெரிய கோயில் கட்டி கும்பிடும் நாடு அல்லவா இது!

இனி ஆக்ராவில் மட்டுமல்ல… ஆங்காங்கு அமர்நாத் பனிலிங்கத்தின் ‘ஹோம் மேட்’ வடிவங்கள் தோன்றக் கூடும்! ’ஹர்ஹர் மகா தேவ்’, ‘ஜெய் சிறீ ராம்’ முழக்கங்கள் எழுப்பி வழிபட மக்கள் தயாராக இருக்கும் நாட்டில் இதுபோன்ற பெரும் மூடத்தனங்களுக்கு முடிவா இருக்கப் போகிறது?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *