தமிழ்நாட்டைத் தனியார் மயத்தை நோக்கி நகர்த்துகிறதா த.வெ.க. அரசு?
போக்குவரத்து, மின்சாரம், விமான நிலையம், பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றையும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கா ஓர் அரசு வேண்டும்?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
போக்குவரத்து, மின்சாரம், விமான நிலையம், பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றையும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கா ஓர் அரசு வேண்டும்?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
தமிழ்நாட்டைத் தனியார் மயத்தை நோக்கி நகர்த்துகிறதா த.வெ.க. அரசு? போக்குவரத்து, மின்சாரம், விமான நிலையம், பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றையும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கா ஓர் அரசு வேண்டும்? இது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல – இட ஒதுக்கீடுப் பிரச்சினையும் இருக்கிறது என்பதை மறக்கவேண்டாம்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
- தமிழ்நாட்டைத் தனியார் மயத்தை நோக்கி நகர்த்துகிறதா த.வெ.க. அரசு? போக்குவரத்து, மின்சாரம், விமான நிலையம், பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றையும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கா ஓர் அரசு வேண்டும்? திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
- போக்குவரத்து ஊழியர்களை நிரப்ப வடநாட்டு நிறுவனத்துக்கு அனுமதி!
- மின்சாரத் துறையில் தனியார் மயமாக்கலா?
- விமான நிலையத்தைத் தனியார் மயமாக்க வேண்டுமா?
- தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் இடஒதுக்கீடு பறிப்பு!
- சமூகநீதியை மறைமுகமாக மறுக்கும் நடவடிக்கையே!
தமிழ்நாட்டில் புதிய த.வெ.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து, பல துறைகளையும் தனியார் மயமாக்குவதில் மும்முரம் காட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல!
போக்குவரத்து ஊழியர்களை நிரப்ப
வடநாட்டு நிறுவனத்துக்கு அனுமதி!
வடநாட்டு நிறுவனத்துக்கு அனுமதி!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்குத் தற்காலிகமாக ஆள் தேர்வு செய்து தரும் ஒப்பந்தம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அவந்திகா என்ற ஒரு நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு, வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மறைமுகமாகப் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆபத்து ஏற்படுத்தப்பட்டிருப்பது – ஏற்கெனவே கண்ட னத்திற்குள்ளாகியுள்ளது. தனியார் மயம், அத்துடன் வடநாட்டவர் திணிப்பு என்னும் இரட்டை ஆபத்து!
மின்சாரத் துறையில் தனியார் மயமாக்கலா?
இப்போது, தூத்துக்குடி, எண்ணூர் அனல் மின் நிலையங்களில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு – மின்சாரத் துறையைத் தனியார் மயத்தை நோக்கி நகர்த்துவதற்கான மறைமுகத் திட்டமாகும்.
அத்துடன், தமிழ்நாட்டில் வருகிற 6 மாதத்துக்குள் மின் கட்டணக் கணக்கீட்டு பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதற்காக தனியாருக்கு டெண்டர் வெளியிடப் போவதாகவும், இந்தப் பணிகள் அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மின்வாரியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. போதிய பயிற்சி இல்லாத பணியாளர்களால் ஏற்படும் தவறுகளுக்கு கூடுதல் மின் கட்டணம் விதிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை இருப்பதை மின் துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் இந்த ஆட்சி வந்தது முதலே அறி விக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து அமலாகிவருகிறது. அமைச்சரும், உயர்நீதிமன்ற நீதிபதியும் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு ஏற்பட்டிருப்பது நடப்பு நிலையை எடுத்துக் காட்டுவதாகும். இதில் பயிற்சி பெறாதவர்களையும், தற்காலிகப் பணியாளர்களையும், தனியார்களையும் கொண்டு வருவது என்பது மேலும் இப் பிரச்சினையைச் சிக்கலுக்கு உள்ளாக்குவது ஆகும்.
விமான நிலையத்தைத்
தனியார் மயமாக்க வேண்டுமா?
தனியார் மயமாக்க வேண்டுமா?
அதே போல, சென்னை விமான நிலையத்தைத் தனியார் மயமாக்க வேண்டும் என்று முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் பிரதமருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு எழுதிய கடிதம் வெளிவந்துள்ளது. விமான நிலையம் சரியாகச் செயல்படவில்லை, அது மேம்படுத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புவாரேயானால், அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வதற்குக் கோரிக்கை விடுக்க வேண்டுமே தவிர, அதைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு வற்புறுத்த வேண்டுமே தவிர, விமான நிலையத்தையே தனியாருக்குத் தாரை வார்க்கப் பரிந்துரைப்பதா? தனியார் மயத்தைத் தடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்குக் கூற வேண்டிய முதலமைச்சரே தனியார் மயமாக்க வேண்டுகோள் விடுப்பதா?
தமிழ்நாடு அரசுக்கே உரிமையாகும் வகையில் அமைக்கப்படவிருந்த பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், ஏற்கெ னவே இருக்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்தையும் தனியார் மயமாக்குமாறு வேண்டுகோளும் விடுத்திருப்பது எந்த நோக்கத்தில்? யாருக்குப் பயன் அளிப்பதற்காக என்ற சந்தேகத்திற்கு என்ன பதில்? விமான நிலையங்களைக் குத்தகைக்கு எடுக்கும் அதானி, அம்பானி போன்ற பெரு நிறுவனங்களுக்குத் தானே இந்தப் பரிந்துரை பயன்படும்?
தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம்
இடஒதுக்கீடு பறிப்பு!
இடஒதுக்கீடு பறிப்பு!
இன்னொரு புறம், அண்மையில் தமிழ்நாடு அரசு தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான விதிகளைத் திருத்தி, ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்குக் குறைந்தது 100 ஏக்கர் நிலம் தேவை என்ற விதியை மாற்றி, சென்னை பெருநகரம் என்றால் 12 ஏக்கர் நிலம் போதுமானது என்றும், பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் என்றால் 18 ஏக்கரும், பிற இடங்களுக்கு 24 ஏக்கரும் போதுமானது என்று மாற்றியுள்ளது. இதன் மூலம் ஏராளமான தனியார் கல்லூரிகள் – தனியார் பல்கலைக்கழங்களாக உருவாகும்.
அரசுப் பல்கலைக்கழகங்களின் இணைப்புக் கல்லூரியாக இருக்கும் கலை – அறிவியல் கல்லூரிகளிலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளாக இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ்நாடு அரசுச் சட்டப்படியான 69% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கத் திருத்தப்பட்டுள்ள இந்த விதிமுறைகள் மூலம், அரசுப் பல்கலைக்கழகங்களிலிருந்து விடுபடும் தனியார் நிறுவனங்கள் இந்த இடஒதுக்கீட்டைப் பின்பற்ற மாட்டார்கள். இதனால், பாதிக்கப்படப் போவது யார்? ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இஸ்லாமியச் சமூகங்களைச் சார்ந்த ஏழை, எளிய மக்கள் தான்! அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்புடன் உள்ள 69% இட ஒதுக்கீட்டை, இப்படி தனியார் மயத்தின் மூலம் காலி செய்வதா?
சமூகநீதியை மறைமுகமாக மறுக்கும் நடவடிக்கையே!
தனியார் மயம் என்பது பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல; சமூகநீதிப் பிரச்சினையும் ஆகும். தற்காலிகப் பணியாளர்களை நிரப்புவது சமூகநீதியை மறைமுகமாக மறுக்கும் நடவடிக்கை ஆகும். தனியார் மயமாகும் நிறுவனங்களில் இடஒதுக்கீடு அறவே இல்லை என்பதையும் சேர்த்துத் தான் இப் பிரச்சினையை அணுக வேண்டும்.
முன்பு இப்படித்தான், ஒன்றிய அரசுப் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் ஆணையப் பரிந்துரை செயல்படுத்தப்பட்ட பின், வரிசையாக அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு, இடஒதுக்கீட்டின் பலன் முழுமையாகக் கிடைக்காமல் தடுக்கப்பட்டது. அதே போன்ற செயலைத் தமிழ்நாட்டிலும் செய்யலாம் என்று யார் நினைத்தாலும், அது அவர்களுக்குக் கடுமையான எதிர் விளைவைத் தோற்றுவிக்கும் என்பது அனுபவப் பூர்வமாகத் தமிழ்நாடு கண்டுள்ள வரலாறு! மீண்டும் அதைச் சோதித்துப் பார்க்க த.வெ.க. அரசு முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிப்பது நம் கடமை!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.9.2026
