வல்லம், செப்.28- வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாள் விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.
பிறந்த நாள் விழா கொண்டாட் டங்களின் ஒரு நிகழ்வாக 18.09.2026 அன்று காலை 10.00 மணியளவில் “தந்தை பெரியாரின் தொண்டறம்” என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடைபெற்றது. திராவிடர் கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் தந்தை பெரியார் பற்றிய சிறப்புரை நிகழ்த்தினார். அரங்கில் குழுமியிருந்த மாணவ, மாணவிகளிடையே எழுச்சிமிகு சொல்லாற்றலின் மூலம் தந்தை பெரியார் தமிழ் மக்களுக்கு ஆற்றிய தொண்டினை மாணவர்களின் உள்ளங்களில் பதிவு செய்தார். தனது நகைச்சுவையோடு கூடிய பேச்சு வன்மையின் மூலம் தமிழர்களின் மூடநம்பிக்கைகளை எவ்வாறு அகற்ற வேண்டும் எனவும், பகுத்தறிவோடும், சுயமரியாதை யோடும் எவ்வாறு வாழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இப்பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி தலைமை ஏற்று உரையாற்றினார்.
போதைப் பொருள் ஒழிப்பு
அன்று “போதைப் பொருள் ஒழிப்பு” பற்றிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
16.09.2026 அன்று இப்பாலி டெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டமும், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையும் இணைந்து இக்கல்லூரி வளாகத்தில் நடத்திய “இரத்தக் கொடை முகாம்” வாயிலாக சுமார் 50 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.
தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை யொட்டி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கலைப்பொருட்கள் தயாரிக்கும் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.
17.09.2026 அன்று காலை 10.00 மணியளவில் இப்பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் ”சமூகநீதி நாள்” உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அன்று காலை 11.00 மணியளவில் இப்பாலிடெக்னிக் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
