ஒன்றிய நிதி அமைச்சருக்கு ஒன்றிய அமைச்சகங்களே பதிலடி!

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

‘‘பெண்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டதன்  காரணமாக, தமிழ்நாடு எதையாவது பெறுவதற்குப் பதிலாக இழப்புகளை சந்திக்க நேரிடும்,” என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது மிரட்டலா, குற்றச்சாட்டா? என்பதை நிர்மலா சீதா ராமன்தான் விளக்க வேண்டும்.

மகளிர் இட ஒதுக்கீடு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலர் இபிஎஸ் வெளியிட்ட சமூக வலைதள அறிக்கையை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ‘‘வெறுப்பு நிறைந்த எதிர்க்கட்சிகள், மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவ வாய்ப்பைத் தமிழ்நாடு இழக்கச் செய்துள்ளது என்பதைச் சிறப்பாக இபிஎஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

‘‘கண்மூடித்தனமான வெறுப்பு – மாநிலத்திற்குக் கிடைக்கவேண்டிய நியாயமான தொகுதிப்பங்கீட்டையும் பெண்களுக்குக் கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டையும் பாதித்துள்ளது. குறுகிய பார்வை கொண்ட, பிடிவாதமான, தொலைநோக்கற்ற, பெண்களுக்கு எதிரான தி.மு.க.வினால், தமிழ்நாடு ஆதாயமடைவதற்குப் பதிலாக இழப்புகளைச் சந்திக்க உள்ளது. (பெண்களுக்கான 33 விழுக்காட்டில் பிற்படுத்தப்பட்டவருக்கு உள் ஒதுக்கீடு உண்டா என்பதற்குப் பதில் தேவை!)

பிரதமர் மோடி உறுதியளித்த இருதரப்புக்கும் பலனளிக்கும் திட்டத்தில் நீங்கள் பங்கெடுக்க மறுத்து, தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துவிட்டீர்கள்!’’ என்றும் அந்த அறிக்கையில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

‘கடன் கொடுத்தால் ஓட்டுப்போடுவார்கள்’ என்று உள்ளூர் காவி வேட்டிக் கும்பல் கூறியதை நம்பிய ஒன்றிய நிதி அமைச்சர் அவரது அமைச்சரகத்தின் புள்ளி விவரத்தைக் கூடவா நம்ப மாட்டார்?

ஒன்றிய நிதி அமைச்சரகம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் துறைகளே  தமிழ்நாடு அரசைப் பாராட்டிய திட்டங்கள்  இதோ:

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: ஒன்றிய நிதி அமைச்சரகம் மற்றும் பிரதமரின் நிர்வாகத்தில் நேரடிக்கண்காணிப்பின் கீழ் வரும்  ‘நிதி ஆயோக்’ மற்றும் மகளிர் – குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சரகம்  உள்ளிட்ட பல்வேறு அமைச்சரகங்கள் தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளது.   பள்ளிக்கு வரும் குழந்தைகளின் வருகை  பெருமளவு அதிகரித்துள்ளது. கல்வி கற்போர் விகிதம் மற்றும் இடை நிற்றல் பெருமளவு குறைதல் போன்றவை தணிக்கைத் துறையின் புள்ளி விபரங்கள் மூலம் அறிந்து, தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தைப்  பாராட்டியுள்ளது.

குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்கி, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு இது ஒரு “முன்னோடித் திட்டம்” (Model Scheme) என அங்கீகரித்துள்ளது – மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஆணையம் – இது நிதி அமைச்சரகத்தின் கீழ் வரக் கூடியதாகும்.

புதுமைப் பெண் திட்டம் :

பாராட்டிய அமைப்பு: ஒன்றிய கல்வி அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சரகம்.

ஏன் பாராட்டப்பட்டது?

அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்குவதன் மூலம் இடைநிற்றல் (Drop-out) விகிதத்தைக் குறைத்துள்ளது. பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு இது முக்கியப் பங்காற்றுவதாகக் கருதப்படுகிறது.

இல்லம் தேடிக்கல்வி:

பாராட்டிய அமைப்பு: ஒன்றிய கல்வி அமைச்சகம் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பாராட்டியுள்ளனர்.

ஏன் பாராட்டப்பட்டது?

கரோனா காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை மிகச் சிறப்பாகக் கையாண்ட உலகின் மிகச்சிறந்த தன்னார்வலர் அடிப்படையிலான திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

நான் முதல்வன் திட்டம்:

பாராட்டிய அமைப்பு: திறன் மேம்பாட்டு அமைச்சகம்.

ஏன் பாராட்டப்பட்டது?

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்குத் தேவையான நவீன தொழில்நுட்பத் திறன்களைப் பயிற்சி அளிப்பதில் இத்திட்டம் முன்னணியில் உள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பை உறுதி செய்யும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிதி மேலாண்மை மற்றும் ஜிஎஸ்டி வசூல்:

பாராட்டிய அமைப்பு: ஒன்றிய நிதி அமைச்சகம்.

ஏன் பாராட்டப்பட்டது?

தமிழ்நாடு அரசு டிஜிட்டல் முறையில் வரி வசூலை மேம்படுத்தியதற்காகவும், நிதிப் பற்றாக்குறையை  நிர்வகிப்பதில் காட்டிய வெளிப்படைத்தன்மைக்காகவும் பாராட்டப்பட்டுள்ளது.

ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இரண்டாவது பெரிய பங்களிப்பாளராக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்வதற்கு இத்தகைய நிதி மேலாண்மை முக்கியக் காரணம்

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்:

பாராட்டிய அமைப்பு: ஒன்றிய பொருளாதார ஆய்வு அமைப்புகள்.

ஏன் பாராட்டப்பட்டது?

மில்லியன் கணக்கான பெண்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதன் மூலம் அவர்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது.

பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் ஒரு சமூகப் பொருளாதார நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் திட்டங்களை ஒன்றிய பிஜேபி அரசுத் துறை அமைச்சர்களே எப்படியோ மனந்திறந்து பாராட்டியுள்ளனர்.

மிரட்டலான குற்றச்சாட்டைக் கூறிவரும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய அரசுத் தரப்பிலிருந்து நிதி கொடுக்காத போதும் ஒன்றிய அரசுத் துறைகளே பாராட்டும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ள ‘திராவிட மாடல்’ அரசின் திட்டங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *