எங்களைப் புரிந்துகொள்ளுங்கள் – பெரியாரைப் புரிந்துகொள்ளுங்கள் – பெரியாரைத் தெரிந்துகொள்ளுங்கள்!
நாங்கள் சமூக விரோதிகள் அல்ல, சமூகத்தை ஒன்றாக்கக் கூடியவர்கள்; சமூகத்தை ஓரணியில் நிறுத்தக்கூடியவர்கள்!
அனைவரும் பெரியாரைப் பின்பற்றுவோம் – அதன் மூலமாக தன்மானம் பெறுவோம் – உரிமை பெறுவோம்!
திருநெல்வேலி, செப்.24 எங்களைப் புரிந்துகொள்ளுங்கள், பெரியாரைப் புரிந்துகொள்ளுங்கள்,பெரியாரைத் தெரிந்துகொள்ளுங்கள்; நாங்கள் சமூக விரோதிகள் அல்ல. சமூகத்தை ஒன்றாக்கக் கூடியவர்கள். சமூகத்தை ஓரணியில் நிறுத்தக்கூடியவர்கள். இன்றைக்கு பெரியார் என்ற மாமருந்துதான் நம் வியாதிகளுக்கு ஒரே மருந்து! அனைவரும் பெரியாரைப் பின்பற்றுவோம் – அதன் மூலமாக தன்மானம் பெறுவோம் – உரிமை பெறுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- எங்களைப் புரிந்துகொள்ளுங்கள் – பெரியாரைப் புரிந்துகொள்ளுங்கள் – பெரியாரைத் தெரிந்துகொள்ளுங்கள்!
- நாங்கள் சமூக விரோதிகள் அல்ல, சமூகத்தை ஒன்றாக்கக் கூடியவர்கள்; சமூகத்தை ஓரணியில் நிறுத்தக்கூடியவர்கள்!
- அனைவரும் பெரியாரைப் பின்பற்றுவோம் – அதன் மூலமாக தன்மானம் பெறுவோம் – உரிமை பெறுவோம்!
- “எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு”
- ‘இந்து மதம் எங்கே போகிறது?’
- ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் படிக்கக் கூடாது என்று சொன்னது ஸநாதனம்!
- ஏகலைவனின் கட்டை விரலை குருதட்சணையாகக் கேட்ட துரோணாச்சாரியார்!
- அன்றைக்கு சமஸ்கிருதம் – இன்றைக்கு நீட் தேர்வு!
- ஒன்றிய அரசுக்கு நீட் தேர்வு நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டப்படி உரிமை கிடையாது!
- நீட் தேர்வின் கொடுமையை விளக்கிப் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கும் தமிழ்நாடு அரசு!
- சமூகத்தை ஓரணியில் நிறுத்தக்கூடியவர்கள் நாங்கள்!
- என்ன விளைவுகள் வந்தாலும் மக்களுக்குத் தேவையானதை சொல்ல வேண்டும்!
- பெண்களுக்குச் சொத்துரிமையை மறுத்த ஸநாதன மதம்!
- இஷ்டப்பட்டவாளோட ஸ்திரிகள் ஓடிப்போயிடுவா? – சங்கராச்சாரியார்
- அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்!
- இன்றைக்கு பெரியார் என்ற மாமருந்துதான் நம் வியாதிகளுக்கு ஒரே மருந்து!
- அனைவரும் பெரியாரைப் பின்பற்றுவோம் – அதன் மூலமாக தன்மானம் பெறுவோம் – உரிமை பெறுவோம்!
“எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு”
கடந்த 19.08.2026 அன்று, திருநெல்வேலியில் நடைபெற்ற, “எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு” எனும் தலைப்பில், வாகையடி அம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
‘இந்து மதம் எங்கே போகிறது?’
“ஆரியர்கள், சிந்துநதி, இமயமலை என்று பள்ளத்தாக்குகளைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் சாலையைவிட, மலைச்சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும். ஆரியர்கள் வந்தேறிகள், அவர்களுடைய பாரம்பரி யம்தான் இன்றைக்கு உயர்ஜாதி – ‘நதிக்குக் கரை யில்லாத காலம் அது. ஆரியப் பெண்களுக்கு இவற்றெல்லாம் தாண்ட தைரியம் இல்லை’ – பெண்கள் கொஞ்ச பேர் வருகிறார்கள். ஆண்கள் நடக்கிறார்கள். பெண்களால் நடக்க முடியவில்லை. அவர் எழுதுகிறார் – ‘பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள்’ – இங்கேயே இருந்துவிடுவோம். வேறெங்கும் போகவேண்டாம். ஏனென்றால் நாடோடிகள் அவர்கள் – ‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருந்துவிடலாம்’ என்று சொல்லிவிடுகிறார்கள் – ஆப்கானிஸ்தானத்தைவிட்டு, ஆரியக்கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது, கூட வந்த பெண்கள் கம்மி. ஆரியர்கள் கூடவந்த பெண்களை விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனுஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தார்கள். (மனுதர்மம் புத்தகத்தை எடுத்துக்காட்டுகிறார்) இதுதாங்க ஆபத்து. இதுதான் இன்றைக்கு ஆட்சி செய்கிறது. ஒன்றிய அரசில் ஆர்.எஸ்.எஸ். என்று சொன்னால் மனுதர்மம்தான். அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, மனுதர்மம்தான் வரவேண்டும் என்று அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆதாரங்கள் உள்ளன. ஒரு வார்த்தைகூட கற்பனையோ அல்லது எங்களது சொந்த சரக்கோ கிடையாது.
அடுத்தது சொல்கிறார். ‘பிராமணன், சத்திரியன், வைஸ்சியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை மனு பிளவாக்கியது. மனு சூத்திரனைப் பற்றி இப்படி எழுதுகிறது. சூத்திரனுக்கு’ – அதாவது மிகப்பெரும் பான்மையாக இருக்கக்கூடியவர்களுக்கு. அதாவது தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன், அதுக்கும் கீழே – அதுதான் அம்பேத்கர் சொன்னார்’. Graded inequality. இதுதான் வருண தர்மம் – சூத்திரனுக்கு அறிவைக் கொடுக்காதே. தர்ம உபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப்பக்கம் இருக்கிறானோ, அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை? இதைச் சொன்னது மனுதர்மம். இது வன்முறை அல்லவா? எண்ணிப்பாருங்கள். இந்த மனுதர்மத்தைக் காப்பாற்றுவதற்காக சாம, தான, பேத, தண்டம் என்று எதை வேண்டுமானாலும் செய்யலாம்? என்ன வேண்டுமானாலும் செய்யலாம்? இதனால்தான் இந்த நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு படிப்பு இல்லை. சரி, மீறி இதைச் செய்துவிட்டால் என்ன ஆகும்?
ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் படிக்கக் கூடாது என்று சொன்னது ஸநாதனம்!
அப்படியென்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரையறுத்த உலக அறிவாளியான அம்பேத்கர் மனம் நொந்து சொன்னார். ‘நான் உலக நாடுகளின் வரலாற்றையெல்லாம் படித்திருக்கிறேன். சமூக விஞ்ஞானத்தை எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரேயொரு கொடுமை. என்னவென்றால், மற்ற நாடுகளில் ‘படி படி’யென்று எல்லா மதமும் சொல்லும். அவர்கள் இசுலாம் மதமாக இருக்கட்டும், கிறித்துவ மதமாக இருக்கட்டும் அவர்கள் பள்ளிக்கூடம் நடத்துவார்கள். படி என்று சொல்வார்கள். ‘பெரும்பான்மை மக்களை படிக்காதே’ என்றும், நாங்கள் மட்டும்தான் படிக்க வேண்டும் என்றும் என்று சொல்வதற்கு ஒரு மதம் என்று சொல்லிவிட்டு எழுதுகிறார். படிப்பைத் தடுத்தது மட்டுமல்ல, இந்த வருணாசிரம மததர்மம்; இந்த ஸநாதன மதம். ‘மீறி வேதத்தைப் படித்தால்’ – அன்றைக்கு வேதம்தான் கல்வி. வேதம் என்கிற வார்த்தைக்கு அறிவு என்று பெயர் சொல்கிறார்கள் – ‘காதால் கேட்டால், அதைக் கேட்கிற கீழ்ஜாதி சூத்திரனுக்கு, காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று. தப்பித்தவறி படித்துவிட்டல் அவன் நாக்கை அறுக்க வேண்டும்’. எதில் இருக்கிறது இது? மனுதர்மத்தில் இருக்கிறது. ‘கவுதம சம்ஹிதா, சூத்திர சம்ஹிதா’ என்பதில் இருக்கிறது. இதை வேதனையோடு சொல்கிறார் அம்பேத்கர், மீறிப் படித்தால் அவனைப் பாராட்ட வேண்டும்.
ஏகலைவனின் கட்டை விரலை குருதட்சணையாகக் கேட்ட துரோணாச்சாரியார்!
உங்களுக்குத் தெரியுமே ஏகலைவன், துரோணாச்சாரி யார் கதை, எதைக் காட்டுகிறது? பாரதக் கதையிலே ஏகலைவனுக்கு சொல்லிக்கொடுக்க மறுக்கிறார். நாங்கள் ஏன் புராணத்தைக் கண்டிக்கிறோம்? இந்தக் கொடுமையெல்லாம் நடக்கிறதே. ஜாதியை நிலை நாட்டுகிறானே? துரோணாச்சாரியார் கேட்கிறார். யார் இந்த நாயின் வாயைப் பிளந்தது? என் சிஷ்யன் அர்ச்சுனனைத் தவிர இதை வேறு யாரும் செய்ய முடியாதே? என்று கேட்டவுடன், ஏகலைவன் அவரை வணங்கி, ‘நானும் உங்கள் சீடன்தான்’ என்கிறான். ‘உன்னை நான் பார்த்தது இல்லையே, யார் நீ?’ என்று கேட்கிறார் துரோணாச்சாரியார். ‘அய்யா நான் வேடுவர் குலத்தைச் சார்ந்தவன். என்னுடைய பெயர் ஏகலைவன்; குருவே, நான் வில்வித்தை கற்றுக்கொள்ள உங்களிடம் கேட்டேன். நான் கீழ்ஜாதிக்காரன் என்பதால் நீங்கள் மறுத்துவிட்டீர்கள்; நான் விடவில்லை. உங்களைப் போல ஒரு உருவம் செய்து, அதன் முன்னால விடாமல் வில்வித்தை பயிற்சி செய்தேன். அதனுடைய விளைவுதான் இது’’ என்று சொன்னான். யார் ஆசிரியராக இருந்தாலும் அந்த மாணவனை நாம் என்ன செய்வோம்? கட்டிப் பிடித்து, ‘‘ஆகா, நான் இல்லாமலேயே இதை கற்றுக்கொண்டாயே’’ என்று பாராட்டியிருப்போம். ‘மானசீக மாணவன்’ என்று சொல்லியிருப்போம். ஆனால், ஆரியம் அதைச் செய்யவில்லை. அதுதான் ஆரியம். துரோணாச்சாரியார் என்ன செய்தார் தெரியுமா? – பாரதக் கதைப்படி – துரோணாச்சாரியார், ‘‘ஆகா, அப்படியா? நீ இந்த வித்தையைத் தக்க வைக்க வேண்டுமென்றால், குருவுக்கு தட்சணை வைக்க வேண்டுமே’’ என்கிறார். உடனே நம்மாள் வெள்ளை மனதுடன், ‘‘என்ன தட்சணை கேட்டாலும் கொடுக்கிறேன்’’ என்று சொன்னான். ‘‘உன் கட்டை விரலை வெட்டிக்கொடு’’ என்று அவர் கேட்கிறார். இவனும் வெட்டிக் கொடுத்துவிட்டான்.
அன்றைக்கு சமஸ்கிருதம் –
இன்றைக்கு நீட் தேர்வு!
இன்றைக்கு நீட் தேர்வு!
நன்றாக நினைத்துப்பாருங்கள். வில்லில் நாணேற்றும் போது, அந்த கட்டை விரலை வைத்துத்தானே அம்பைத் தொடுக்க வேண்டும். அதற்குப்பிறகு ஏகலை வன் வில்லைத் தொடவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? என்ன செய்தாலும் சூத்திரன் படிக்கக் கூடாது. அதுதான் இன்றைக்கு நீட் தேர்வு. அன்றைக்கு சமஸ்கிருதம் படிக்க வேண்டும். புராணத்தில் பார்த்தீர்கள் என்றால், சூத்திரன் படிக்கக்கூடாது. இன்றைக்கு நவீன முறையில் டாக்டராகக் கூடாது என்று நீட் தேர்வு வைத்து நம்முடைய பிள்ளைகள் டாக்டராவதைத் தடுக்கிறார்கள். நம்ம பிள்ளைகளெல்லாம் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதற்கு நம்மாட்களில் சிலர், ‘‘தகுதி, திறமை இருக்கிறது நல்லதுதானே’’ என்கிறார்கள். இன்றைக்கு நீட் தேர்வில் எல்லா வகையிலும் ஊழல், ஊழல் என்று உச்சநீதிமன்றம் வரையிலும் சொல்லு கிறார்கள்.
ஒன்றிய அரசுக்கு நீட் தேர்வு நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டப்படி உரிமை கிடையாது!
நாம்தான் முதன்முதலில், தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் இதைக் கூடாதென்று சொன்னது. அடுத்து தி.மு.க. சொன்னது. இன்றைக்கு பா.ஜ.க.தவிர அத்தனை கட்சிகளும் எதிர்க்கக்கூடிய அளவில் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் இந்த இயக்கம்! இந்தக் கருத்து வடநாடு முழுவதும் பரவிவிட்டது. பரவினாலும் அங்கெல்லாம் இன்னமும் தெளிவு வரவில்லை. இன்னுங்கேட்டால் ஒன்றிய அரசு, மோடி அரசுக்கு நீட் தேர்வு நடத்துவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி உரிமை கிடையாது. அது பல்கலைக்கழகத்தைச் சார்ந்தது. இன்னமும் கேட்டால், நீட் தேர்வு பற்றி நாம் புத்தகம் போட்டிருக்கிறோம் (புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார்) இதைப் பாருங்கள். சின்னப் புத்தகம். நீட் தேர்வு மோசடி இல்லை. பச்சை மோசடி. இதை வாங்கிப் படிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிற விதிகளுக்கு முரண். ஒன்றிய அரசாங்கம், உச்சநீதிமன்றம் சொன்னாலும், தேர்வு முகமைக்குத் தேர்வு நடத்துவதற்கு சட்டப்படி உரிமை கிடையாது. இப்போது நடத்தியிருப்பது சட்ட விரோதம். இதனாலேயே நம் இளம் பிள்ளைகள் அனிதாவில் தொடங்கி தற்கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை ஒழிக்கும் வரையிலும் விடமாட்டோம். குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒழித்ததனால்தான் இன்று நம் பிள்ளைகள் படிக்க முடிகிறது. இந்தப் பிரச்சா ரத்தை செய்வதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம்.
நீட் தேர்வின் கொடுமையை விளக்கிப் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கும் தமிழ்நாடு அரசு!
ஒரு பக்கத்தில் இந்த ஆட்சியினர் தீர்மானம் போடுகிறார்கள். நீட் தேர்வை நாங்களும் தி.மு.க. மாதிரி எதிர்க்கிறோம் என்று சொல்கிறார்கள். வெறும் தீர்மானத்தை நிறைவேற்றினால் போதுமா? மக்களைத் தயார் செய்ய வேண்டாமா? மக்களிடம் செல்ல வேண்டாமா? அந்தப் பணியை நாங்கள் தானாக முன்வந்து செய்துகொண்டிருக்கிறோம். எங்களைப் பாராட்ட வேண்டியது அரசின் கடமை. பாராட்ட வேண்டாமய்யா…. எங்களுக்குத் தொல்லை கொடுக்காமலாவது இருக்கலாமே? ஆகவே புரியாமல் எதற்காகத் தடை போட வேண்டும்? இதை நீதிமன்றம் கண்டித்த பிற்பாடு, ‘‘இல்லை இல்லை கொடுக்கிறோம்’’ என்று சொல்கிறார்கள். 22.08.2026 முதல் 25.08.2026 வரை ஆறு முனைகளிலிருந்து ஆறு அணிகள் புறப்பட்டு இருசக்கர வாகனப் பேரணி சென்று பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படி பொதுக்கூட்டம் போட்டு இந்த மாதிரி அமைதியான வழியிலே, யாருக்கும் இடையூறு இல்லாமல், முழக்கம் போட்டுக்கொண்டுகூட நாங்கள் போகவில்லை. ஏனென்றால், மக்களுக்குத் தெரிய வேண்டும். இந்த உணர்வுகளை உண்டாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எங்கள் நெஞ்சு எப்படி கொதிக்கிறது என்பது தெரியப்படுத்தப்பட வேண்டும். எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் கைவைக்காதீர்கள் என்று சொல்வதற்காகத்தான் வந்திருக்கிறோம். எங்கள் வீட்டில் இனிமேல் படிக்கப்போகிற பிள்ளைகள் இருக்கிறார்களா? எங்களுக்காக அல்ல, உங்கள் பிள்ளைகளுக்காக! யார் எங்களை எதிர்க்கிறார்களோ? அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்காக! யார் எங்கள் பிரச்சாரம் நடக்கக்கூடாது? என்று நினைக்கிறார்களோ அவர்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் போராடுகிறோம்.
சமூகத்தை ஓரணியில் நிறுத்தக்கூடியவர்கள் நாங்கள்!
ஆகவே, எங்களைப் புரிந்துகொள்ளுங்கள், பெரி யாரைப் புரிந்துகொள்ளுங்கள்,பெரியாரைத் தெரிந்து கொள்ளுங்கள்; நாங்கள் சமூக விரோதிகள் அல்ல. சமூகத்தை ஒன்றாக்கக் கூடியவர்கள். சமூகத்தை ஓரணியில் நிறுத்தக்கூடியவர்கள்.
இன்றைக்கு தாய்மார்கள் ஏராளமாக வந்திருக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ஸநாதனம் என்கிற பெயரில் என்ன நடக்கிறது? ஒரேயொரு செய்தியைச் சொல்கிறேன். இந்த ஜாதிக்கொடுமை ஜாதியோடு நிற்கின்றதா? சரிபகுதிப் பெண்களை அதைவிட கீழே வைத்தார்கள். ஏன் இன்றைக்குக்கூட இடஒதுக்கீட்டை சுலபமாகக் கொடுக்கமாட்டோம் என்கிறார்கள்? ஒரேயொரு சம்பவம். அதைச் சொல்லி முடிக்கிறேன்.
என்ன விளைவுகள் வந்தாலும் மக்களுக்குத் தேவையானதை சொல்ல வேண்டும்!
ஏனென்றால், இந்தக் கருத்தை வேறு யாரும் சொல்லமாட்டார்கள். அதனால், நாங்கள்தான் பெரிய அறிவாளி என்று அர்த்தமில்லை. மற்றவர்களுக்கும் தெரியும். ஆனால், சொல்லத் துணிச்சல் கிடையாது. நாங்கள் மட்டும்தான் என்ன விளைவுகள் வந்தாலும் மக்களுக்குத் தேவையானதை சொல்ல வேண்டும் என்று கருதக்கூடியவர்கள்.
இந்து மதத்தில் பிள்ளைகள் பிறந்தால் – ஆண் பிள்ளை, பெண் பிள்ளை இரண்டு பேரும். அப்பா சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த சொத்துகளை அப்பாவுக்குப் பிறகு பிள்ளைகளுக்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கவேண்டும். அதுதான் நியாயம். அதைவிட்டுவிட்டு, ஆண்களுக்குத்தான் சொத்து. பெண்களுக்குக் கிடையாது என்று சொல்வதுதான் ஸநாதனம், இதுதான் இந்துமதம். வழக்குரைஞர் நான். அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தபோது இந்தக் கொடுமையை நீக்க, ‘இந்துச் சட்டத்திருத்த மசோதா’ (Hindu code Bill) கொண்டு வந்து, பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்று கேட்டார். சரி பகுதி இருக்கிற பெண்களுக்கு சொத்துரிமை வேண்டுமா? இல்லையா? அப்படிச் சொன்ன உடனே அன்றைக்கிருந்த ஸநாதனவாதிகள் எப்படி எதிர்த்தார்கள் என்பதைச் சொல்கிறோம். நாங்கள் சொல்வதை, ‘‘ஓஹோ இவர்கள் பெரியார் ஆள்கள்’’ என்று அலட்சியப்படுத்தாமல் கவனியுங்கள்.
பெண்களுக்குச் சொத்துரிமையை
மறுத்த ஸநாதன மதம்!
மறுத்த ஸநாதன மதம்!
மறுபடியும் அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார்) ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்று சொல்லக்கூடிய இந்த புத்தகத்தில் இருக்கக்கூடிய 104 ஆம் பக்கத்தில் ஒரு சம்பவம் சொல்கிறார். இதை அப்படியே படிக்கிறேன், கேளுங்கள். காஞ்சி சங்கராச்சாரியாரை மஹா மஹாப் பெரியார் என்பார்கள். மஹா சுவாமிகள், சந்திரசேகரேந்திர சுவாமிகள். இவர் காஞ்சிபுரம் சங்கரமடத்துக்கு மடத்தலைவராக இருக்கிறார். இவரும், அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் இருவரும் நண்பர்கள். 1954 இல் அம்பேத்கர் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்த உடனே, சங்கராச்சாரியார், கும்பகோணத்தில் இருக்கும் தாத்தாச்சாரியாருக்கு தந்தி அனுப்புகிறார். ‘‘டில்லியில், இந்து பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும்’’ என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்தபோது, பேப்பர்களில் செய்தி வந்தது. அப்போது காஞ்சிபுரத்திலிருந்து, ‘‘உடனே புறப்பட்டு வரவும் – சங்காராச்சாரியார்” என்று எனக்கு ஒரு தந்தி வந்தது. நான் உடனே காஞ்சிபுரம் போனேன். ‘‘என்ன சுவாமி?” என்றேன்.
இஷ்டப்பட்டவாளோட ஸ்திரிகள் ஓடிப்போயிடுவா? – சங்கராச்சாரியார்
அன்றைய பேப்பரை எடுத்து மகாப்பெரியவா சங்கராச்சாரியார் என்னிடம் காட்டி, ‘‘லோகமே அழியப்போறது ஓய்ய்… அழியப்போறது… – என்று பதட்டத்துடன் அவர் மொழியில் சொல்கிறார். ‘‘இதைப்பார்த்தீரா?” என்று படபடப்பாக பேசினார். “ஸ்திரிகளுக்கு சொத்தில பாத்தியம்’’ கொடுக்கப் போறாளாம். அவாளுக்குச் சொத்துல பங்கு கொடுத்தா என்னாகும் தெரியுமோ? – யாரு சங்கராச்சாரியார் சொல்றாரு. நம்ம ஆளுங்கதான் சங்கராச்சாரியார் சுவாமிகள். மஹாமஹாப் பெரியவா என்பார்கள். எங்களுக்கென்ன அவர் மீது கோபமா? தனிப்பட்ட முறையில் அவருக்கும் எங்களுக்கும் தகறாரா? இல்லை! அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். அந்தத் தத்துவம் எவ்வளவு கொடுமையானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ‘‘அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்னாகும் தெரியுமோ?… இஷ்டப்பட்டவாளோட ஸ்திரிகள் ஓடிப்போயிடுவா?” என்னய்யா அர்த்தம்? இங்கிருக்கிற பெண்களெல்லாம் ஒப்புக்கொள்கிறீர்களா?
1989 ஆம் ஆண்டு கலைஞர் முயற்சியினாலே தமிழ்நாட்டில் அந்த சட்டம் நிறைவேறிவிட்டது. அம்பேத்கர் காலத்தில் முடியவில்லை. 2006 இல் ஒன்றியத்தில் யு.பி.ஏ. அரசு வந்த பின்னாலே, இந்தச் சட்டம் இந்தியா முழுவதும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்துமதத்தில் என்ன சொல்லி வைத்தார்கள்? ‘ஆசைக்கொரு பெண், ஆஸ்திக்கொரு ஆண்’ என்றார்கள். என்ன கொடுமை இது?
இதில், தாத்தாரிசாரியார் கிண்டலாக ஒன்றைக் குறிப்பிடுகிறார். “நான் சிரித்தபடி பதில் சொன்னேன். சுவாமி எனக்கு நல்லதுதான். என் மாமனாருக்கு நிறைய சொத்து இருக்கு. ஒரு வேளை என் ஆத்துக்காரிக்கு வந்தால் எனக்கும் நல்லதுதானே?” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். உடனே சங்கராச்சாரியார், “ஓய்… அசட்டுத்தனமாய் பேசாதீர். இந்த சட்டம் வந்தால் ஸ்திரி தர்மமே பாழாயிடும். ஸ்திரிகளுக்கு பாத்தியமோ, சம்பாத்தியமோ இருக்ககூடாதுன்னு மனுஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கிறதுதான் ஸ்திரிக்கு வழி. இப்படிப்பட்ட ஸ்திரி தர்மத்தை நேரு நொறுக்கிட்டார்” என்று இதில் இருக்கிறது.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்!
இதுதாங்க ஸநாதனம். எங்களை ஏதோ ஸநாதனத்தை ஒழிக்கப்போகிறார்கள் என்று சொல்கிறார்கள். இந்த ஸநாதனத்தை பெண்கள் ஏற்கிறீர்களா? வர்ணம் என்ற பெயராலே, ஜாதிதர்மம் என்ற பெயராலே, கவுரவக் கொலை என்கிற பெயராலே சொந்த பிள்ளையை, வளர்த்து ஆளாக்கிய பிள்ளையை கூலிக்கு ஆள் வைத்துக் கொலை செய்வது என்கின்ற ஜாதிவெறி இருக்கக் கூடாது. மதவெறி இருக்கக் கூடாது. மனிதர்கள் ஒன்றுபட வேண்டும். எல்லாரும் ஓர் நிறை. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். இதுதான் எங்கள் கொள்கை. இதை சொல்வதற்குத்தான் இங்கே வந்தோம்.
இன்றைக்கு பெரியார் என்ற மாமருந்துதான்
நம் வியாதிகளுக்கு ஒரே மருந்து!
நம் வியாதிகளுக்கு ஒரே மருந்து!
அன்றைக்கு பெரியாரை நீங்கள் எதிர்த்தீர்கள். இன்றைக்கு பெரியார் என்ற மாமருந்துதான் நம் வியாதிகளுக்கு ஒரே மருந்து என்பதை உலகம் ஒப்புக்கொண்டிருக்கிறது. எனவே ஒத்துழைத்த உங்களுக்கு நன்றி. சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த காவல்துறைக்கும், அதிகாரிகளுக்கும் எங்கள் நன்றி. அமைதியாக கூட்டம் நடந்தது. கடைசி வரையிலும் இருந்தீர்கள். உங்கள் எல்லாருக்கும் பாராட்டு.
அனைவரும் பெரியாரைப் பின்பற்றுவோம் – அதன் மூலமாக தன்மானம் பெறுவோம் – உரிமை பெறுவோம்!
சுயமரியாதைச் சுடரொளிகளின் சந்ததிகள் இங்கே வந்தது உள்ளபடியே எங்களுக்குப் பெருமை. தலைமுறை தலைமுறையாக நீங்கள் அத்தனை பேரும் இயக்கத்தில் இருந்தால் எங்களுக்கு லாபம் அல்ல. உங்களுக்கு லாபம், நல்ல வாழ்வு என்பது பகுத்தறிவு வாழ்க்கை! சிக்கன வாழ்க்கை வாழ்ந்து அனைவரும் பெரியாரைப் பின்பற்றுவோம். அதன் மூலமாக தன்மானம் பெறுவோம். உரிமை பெறுவோம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! பெரியார் உலகமயம்! உலகம் பெரியார் மயம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
