தமிழ்நாட்டில், தமிழ் – ஆங்கிலம் என்னும் இருமொழிக் கொள்கைதான்! ஹிந்தித் திணிப்பை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது!

6 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஒன்றிய அரசின் கொள்கையை அமல்படுத்துமாறு
நீதிமன்றம் ஒரு மாநிலத்தைக் கட்டாயப்படுத்த முடியாது!
உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல!

தமிழ்நாட்டில், தமிழ் – ஆங்கிலம் என்னும் இருமொழிக் கொள்கைதான்! ஹிந்தித் திணிப்பை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! ஒன்றிய அரசின் கொள்கையை அமல்படுத்துமாறு நீதிமன்றம் ஒரு மாநிலத்தைக் கட்டாயப்படுத்த முடியாது! உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு

இந்தியாவில், டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைந்த வரைவுக் கமிட்டி உருவாக்கிய அரசியல மைப்புச் சட்டம் மக்களாகிய ‘‘நமக்கு நாமே வழங்கிக் கொள்ளும் அரசியலமைப்புச் சட்டம்’’ என்ற பீடிகையோடுதான் தொடங்கும். அதில் நமது அரசு (எக்கட்சி ஆட்சி செய்தாலும்), ‘இறையாண்மை மிக்க, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்ற கொள்கையின் அடிப்படையின்கீழ் என்றும் இயங்கி வரும் அரசு’ என்றே அந்த முகவுரை, பீடிகை (Preamble) அமைந்துள்ளது; இது நமது அடிக்கட்டுமானம் (The basic Structure of the Constitution) ஆகும். இதனை எந்த ஆட்சியும் கைவிட முடியாது, கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின், அரசியலமைப்புச் சட்டத்தின் பல தீர்ப்புகள்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல!

உச்சநீதிமன்றமும் அதில் தீர்ப்பு எழுதும் நீதிபதி களும்கூட, இந்தப் பிரகடனத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும்  உட்பட்டவர்களே தவிர, அப்பாற்பட்ட வர்கள் அல்ல.

இரண்டாவது, உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்றும் சட்டம் செல்லுமா, செல்லாதா என்று தங்களுக்கு வந்த வழக்குகளில் தீர்ப்புக் கூற முடியுமே தவிர, புதிதாக சட்டம் இயற்றும் அதிகாரமுள்ள சட்டமன்ற, நாடாளு மன்றத்தின் அதிகாரங்களை உச்சநீதிமன்றமே தமது கையில் எடுத்துக் கொள்ள முடியாது.

மூன்றாவதாக, அரசுகளின் கொள்கை முடிவு (Policy Decision) என்ற நிலைப்பாட்டில் தலை யிட உரிமையற்றவை உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்க ளும் என்பது காலங்காலமாக நடைமுறையில் இருந்து வருகின்ற முறை.

இந்தியா ஒரு கூட்டாட்சியே தவிர,
ஒற்றை அரசு அல்ல!

நான்காவது, மாநிலங்கள் என்பவை ஒன்றிய அரசிடம் கப்பங்கட்டி வாழும் பழைய கால சிற்றரசுகள் அல்ல; மாநிலங்கள் இணைந்த அமைப்பே இந்தியா – அதாவது பாரதம் என்ற கூறு (Article) தான் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதலாவது பிரிவு. (India that is Bharat, Shall be the union of state…).

அதாவது இந்தியா ஒரு கூட்டாட்சியே (Federal) தவிர, ஒற்றை அரசு (Unitary Government) அல்ல.

அண்மையில், உச்சநீதிமன்றத்தில் ஜஸ்டிஸ் பி.வி.நாகரத்தினா, ஜஸ்டிஸ் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு, நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அமைத்தே தீரவேண்டும் என்றும், அதற்கு நிலங்களைத் தேட மூன்று மாதக் கெடு என்றும் கூறியிருப்பது எவ்வகையில் சட்டப்படி சரியாகும்?

1986 இல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு அப்போதைய தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பினைத் தெரிவித்தது;

காரணம், நவோதயா பள்ளி என்பது தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிரானது.

தமிழ், ஆங்கிலம் தவிர, ஹிந்தி மொழியைத் தமிழ்நாடு அரசு ஏற்காது!

இரு மொழிக் கொள்கையை 1967 இல் அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த தி.மு.க. அரசு கொள்கை முடிவாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி, தமிழ், ஆங்கிலம் தவிர, ஹிந்தி மொழியைத் தமிழ்நாடு அரசு ஏற்காது; காரணம், அது ஒரு பண்பாட்டுப் படை யெடுப்பு என்பதை ஒருமனதாகக் கூறியதோடு, கடந்த 59 ஆண்டுகளுக்குமேல், பல கட்சி அரசுகள் வந்த நிலையிலும், ஏன் குடியரசுத் தலைவர் ஆட்சி, ஆளுநர் ஆட்சி போன்ற இடைக்கால அரசுகள் (டில்லி அரசுதான் அவை) வந்தபோதும், இன்றுவரை அது நடைமுறையில் உள்ள ஒன்று ஆகும்!

தற்போதுள்ள த.வெ.க. அரசின் கொள்கை முடி வும்கூட, இரு மொழிக் கொள்கைதான்.

கல்வி என்பது, முன்பு நெருக்கடி காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்ட ஒன்று.

அதன்படிகூட, அது யூனியன் லிஸ்ட் என்ற ஒன்றியப் பட்டியலுக்கு மாற்றப்படவில்லை; எனவே, மாநிலக் கல்வியைத் தன்னிச்சையாக எடுத்துக்கொண்டு, ஒன்றிய அரசின் திணிப்புகளை ஏற்க மறுக்கும்  எந்த மாநில அரசு மீதும், தனது திட்டமான ஹிந்தி, சமஸ்கி ருதத்தைத் திணிக்க ஒருபோதும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் கிடையாது!

ஹிந்தியைச் சொல்லிக் கொடுக்கும் தனி அமைப்புகளைத் தமிழ்நாடு அரசு தடுக்கவில்லை!

இத்தனை சட்டத் தெளிவுகளும், நடைமுறையும் பின்பற்றப்படும்  இப்பிரச்சினையில்,  மொழி என்பது உணர்வுப்பூர்வமான  ஒன்று என்று தெரிந்தும், ‘‘ஏன், ஹிந்திப் படித்தால் என்ன?’ என்று கேட்டு,  இத்த கைய திணிப்புகளைக் கொண்டுவர முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல. ஹிந்தியைச் சொல்லிக் கொடுக்கும் தனி அமைப்புகளைத் தமிழ்நாடு அரசு தடுக்கவில்லை.

(எடுத்துக்காட்டு: தட்சண பாரத, ஹிந்தி பிரச்சார சபாக்கள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளன).

‘தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும்  ஒன்றிய அரசின் நிதியால் செயல்படும் நவோதயா பள்ளிகளை நிறுவவேண்டும்’ என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த முறை இவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற அமர்வு, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கு, இடங்களைத் தேர்வு செய்வது தொடர்பாக மூன்று வாரத்திற்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு  உத்தரவிட்டிருந்தது.

மேலும், நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாடு மட்டும், புறக்கணிப்பது ஏன்? என்று கேள்வி கேட்டுள்ளது!

தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடிய மூத்த வழக்கு ரைஞர் ஜெய்தீப் குப்தா, சரியான வாதத்தை மிகத் துல்லி யமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன் வைத்துள்ளார்!

ஒன்றிய அரசின் கொள்கையை அமல்படுத்துமாறு நீதிமன்றம் ஒரு மாநிலத்தைக் கட்டாயப்படுத்த முடியாது!

‘‘தமிழ்நாடு தற்போது இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது.

நவோதயா பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், ஹிந்தியும், அப்பள்ளிகளில் இடம்பெறுவதைத்தான் அரசு தீர்க்கமாக எதிர்க்கிறது.

இந்த விவகாரம் வெறும் ஹிந்தி தொடர்பானது மட்டுமல்ல; மாநிலத்தின் கொள்கை வகுக்கும் அதிகாரம்; மற்றும் கூட்டாட்சித் தத்துவம் தொடர்பானதும் ஆகும்.

நவோதயா பள்ளிகளைவிடச் சிறந்த கல்வியை (தமிழ்நாடு) மாநில அரசே வழங்கி வருகிறது.

தவிர, நவோதயா பள்ளிகள் திட்டம் மாநிலங்களுக்குக் கட்டாயமில்லை என்பதால், ஒன்றிய அரசின் கொள்கையை அமல்படுத்துமாறு நீதிமன்றம் ஒரு மாநிலத்தைக் கட்டாயப்படுத்த முடியாது.

நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் கூடுதல் நிதிச் சுமை.

எந்தச் சட்டப் பிரிவின்கீழ்
ஏற்றுக் கொள்ளத் தகுந்தது?

இதில் குறுக்கிட்ட நீதிபதி திருமதி பி.வி.நாகரத்தினா அவர்கள், ‘‘உங்கள் மன நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஹிந்தி மொழி கற்பிப்பதை முற்றிலும் தவிர்க்க முடியாது’’ என்று கூறியிருப்பது எந்தச் சட்டப் பிரிவின்கீழ் ஏற்றுக் கொள்ளத் தகுந்தது என்று விளக்குவாரா?

தேவையில்லாமல், ‘குளவிக் கூட்டில் கைவிடுவது’ போன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறலாமா?

மாண்புக்குரிய ஜஸ்டிஸ் பி.வி.நாகரத்தினா அவர்களுக்குக் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

1937–1938 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அதுவரை இல்லாத கட்டாய ஹிந்தியைப் பள்ளிகளில் திணித்த அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் ‘சிறீமான்’ சி.இராஜகோபாலாச்சாரியார் அவர்களே, 1967–களில் தமிழ்நாட்டில், ‘‘Hindi Never, English Ever’’ என்று முழங்கியவர் என்ற வரலாற்றை அறியவேண்டும்.

சமஸ்கிருத கலாச்சாரத்தினைத் திணிக்கக் கால்கோள் விழா செய்ய முயற்சிக்கலாமா?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்படி ஹிந்தித் திணிப்பு என்ற வட மொழி சமஸ்கிருத கலாச்சாரத்தினைத் திணிக்கக் கால்கோள் விழா செய்ய முயற்சிக்கலாமா?

இது அரசியலமைப்புச் சட்ட விரோதம் மட்டுமல்ல;  மக்களாட்சியின் மாநில உரிமைகள் – பண்பாட்டுப் பாதுகாப்பு உரிமைகள் பறிப்பும் ஆகும்!  இது தேவையின்றி, கிளர்ச்சிகளுக்கு வழிவகுப்பதாகிவிடும்!

அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில், விரும்பத்தகாத ஒரு நிலையை உருவாக்கக் கூடாது. அமைதிக்குப் பங்கம் ஏற்படும் நிலை உருவாகும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். இம்மாதிரித் திணிப்பு முயற்சிகள் கூடாது.

ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல!

அதுவும் கொள்கை முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றம் சொல்வதும், நிபந்தனை விதிப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல!

வேலியே, பயிரை மேய எத்தனிக்கலாமா?

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை         

23.9.2026        

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *