சென்னை, செப்.24- அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில்லை என்று கூறியுள்ள திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறைமாதத்தில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காக்கப் பயன்படுத்தப்படும் முக்கியமான சர்ஃபாக்டன்ட் (Surfactant) மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டால் குழந்தையின் உயிரைக் காக்க இந்த மருந்து அவசியம் என்று கூறுகிறார்கள்.
இந்நிலையில் பல மாவட்ட அரசு மருத்துவமனைகளிலேயே இந்த மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
திமுக எம்.பி. கனிமொழி இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணா மலை, வேலூர், கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகி யிருக்கின்றன.
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்படைத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வழங்க முடியாமல் என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத் துறை?
இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் அக்கறையைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா? குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
