சென்னை, செப்.24- அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. நடப்பாண்டில் 55 சதவீத இடங்களே நிரம்பியுள்ளன.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்தவகையில் நடப்புக் கல்வியாண்டில் (2026-2027) தமிழ்நாடு முழுவதும் உள்ள 181 அரசு கலைக் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 154 இடங்கள் இருக்கும் நிலையில், அதில் 96 ஆயிரத்து 477 இடங்கள் மட்டுமே நிரம்பின. அதாவது 74.13 சதவீதம் இடங்களில் மாணவ-மாணவிகள் சேர்ந்திருக்கின்றனர். இன்னும் கலந்தாய்வு நடக்கிறது.
இளங்கலைப் படிப்புகளில் கூட ஓரளவுக்கு மாணவர் சேர்க்கை இருக்கும் சூழலில், முதுகலை படிப்புகளில் அதைவிட மாணவர்கள் சேர்ந்திருக்கும் எண்ணிக்கை பின்டைவை சந்தித்திருக்கிறது. நடப்பாண்டில் மட்டும் இந்த நிலை ஏற்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே முதுகலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைசரிவை நோக்கி வருவதை புள்ளி விவரங்களில் பார்க்க முடிகிறது.
அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை 2023-20–24இல் 66.2%, 2024-20–25இல் 63%, 2025-20–26இல் 62%, 2026-20–27இல் 55.22% என குறைந்து வருகிறது.
நடப்பாண்டில் 181 அரசு கலைக் கல்லூரிகளில் 24 ஆயிரத்து 812 இடங்கள் இருக்கும் நிலையில், 4,061 மாணவர்கள், 9,627 மாணவிகள், 12 திருநங்கைகள் என இதுவரை 13 ஆயிரத்து 700 இடங்கள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன. அதாவது 55.22 சதவீதம் இடங்களே நிரம்பியுள்ளன. 44.78 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன.
முதுகலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை குறைப்புக்கு பலகாரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் இளங்கலை பட்டம்முடிந்தடனே மாணவர்கள் தனியார் நிறுவன வேலைகள், சேவைத் துறைகள் போன்றவற்றில் சேரவே அதிகம் விரும்புவதாகவும், 2 ஆண்டு கூடுதல் படிப்புக்கு பின்னரும் ஆரம்பகட்ட ஊதியத்தில் பெரிய வித்தியாசம் இல்லாததால் முதுகலை படிப்பை தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கைத் தொடங்கி பெரும்பாலான கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின. அரசு கல்லூரியைப் பொறுத்தவரையில், அதன் பிறகே மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கி நடத்தப்பட்டு மாணவர்-மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். இதுவும் மாணவர் சேர்க்கை சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
