ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட மனித மூளை திசுக்கள் எலிகளுக்கு பொருத்தம்: மருத்துவ உலகில் புதிய சாதனை!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மனித மூளையின் வளர்ச்சி மற்றும் நரம்பியல் குறைபாடுகளை வாழும் மனிதர்களில் நேரடியாக ஆய்வு செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆய்வகத் தில் செயற்கையாக வளர்க்கப்பட்ட மனித மூளை திசுக்களை மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலிகளின் மூளையில் வெற்றிகரமாக பொருத்தி மருத்துவ ஆராய்ச்சியில் மாபெரும் சாதனையை படைத்துள்ளனர். இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் மூளை தொடர்பான பல்வேறு தீவிர நோய்களுக்கான சிகிச்சைகளை கண்டறிய புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மனித மூளையின் வளர்ச்சி மற்றும் நரம்பியல் குறைபாடுகளை வாழும் மனிதர்களில் நேரடியாக ஆய்வு செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். இதனை எதிர்கொள்ள, பேராசிரியர் செர்ஜியூ பாஷ்கா தலைமையிலான ஸ்டான்போர்ட் மருத்துவக் குழுவினர் மனிதனின் தோல் செல்லில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி “ஆர்கனாய்ட்ஸ்” எனப்படும் சிறிய அளவிலான மனித மூளை திசுக்களை ஆய்வகத்தில் வளர்த்தெடுத்தனர்.

பின்னர், எலிகளின் மூளைப் பகுதியில் உள்ள வெளிப்புற அடுக்கை மரபணு மாற்றம் மூலம் அகற்றி, அங்கு இந்த மனித மூளை திசுக்களைப் பொருத்தினர். எலியின் மூளையில் பொருத்தப்பட்ட மனித திசுக்கள் அழியாமல் தொடர்ந்து வளர்ந்ததுடன், எலியின் நரம்பு மண்டலம் மற்றும் தண்டுவடத்துடன் வெற்றிகரமாக இணைந்து இயங்கத் தொடங்கின. மூன்று மாத கால இடைவெளியில், அந்த எலிகளின் மூளைப் பகுதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி மனித மூளைச் செல்களால் நிரப்பப்பட்டது.

இந்த மனித நரம்பு செல்கள் எலிகளின் உடலில் மின் சமிக்ஞைகளை கடத்தி இயல்பாகச் செயல்பட்டதை ஆய்வாளர்கள் கவனித்தனர். மேலும், வழக்கமாக மனிதர்களின் மரணத்திற்கு பின் செய்யப்படும் ஆய்வுகளில் மட்டுமே காணப்படும் அபூர்வமான “வோன் எகனமோ” வகை நரம்பு செல்கள் இந்த எலிகளின் மூளையில் உருவாவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மருத்துவ உலகிற்கு கிடைக்கும் நன்மைகள்

இந்த வெற்றி மூலம் குழந்தைகள் பிறப்பின் போது ஏற்படும் மூளை முடக்குவாதம், மனசிதைவு நோய், வலிப்பு மற்றும் ஆட்டிசம் போன்ற சிக்கலான நரம்பியல் குறைபாடுகளின் மூல காரணங்களை மிகத் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மேலும், மூளை நோய்களுக்கான புதிய மருந்துகள் மற்றும் மரபணு சிகிச்சைகளை மனிதர்களுக்கு வழங்குவதற்கு முன்பே, இந்த எலிகள் மூலம் சோதித்து பார்க்க ஒரு சிறந்த தளம் கிடைத்துள்ளது.

இந்த மகத்தான அறிவியல் வளர்ச்சி உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், சில உயிரியல் நெறிமுறை கேள்விகளையும் எழுப்பியுள்ளது. மனித மூளைச் செல்கள் விலங்குகளின் உடலுக்குள் செயல்படும் போது, அந்த விலங்குகளுக்கு மனிதனை போன்ற உணர்வுகளோ அல்லது சிந்தனைத் திறனோ உருவாக வாய்ப்புள்ளதா என்ற விவாதம் பன்னாட்டு விஞ்ஞானிகளிடையே எழுந்துள்ளது. இருப்பினும், இந்த ஆராய்ச்சி அனைத்து பன்னாட்டு உயிரியல் நெறிமுறைகளுக்கும் உட்பட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *