ஸநாதனம் இதுதான்! பிராமண விசுவாசம்!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

யாழ்ப்பாணம் சரசாலை வாசகரும் ஆயுள்வேத வைத்தியருமான சிறீ.சி.வைத்தியலிங்கம் அவர்களால் இயற்றப்பட்ட ‘வேதாந்த சித்தாந்த சமரச விளக்க சங்கிரகம்’ (1919) எனும் நூல் என் கவனத்தை ஈர்த்தது. ‘வேதாந்த சித்தாந்த சமரச விளக்க சங்கிரகம்’ எனும் தலைப்பே இந்நூலின் உட்கருத்தைத் உணர்த்துகிறது. குருவுக்கும் சீடனுக்குமிடையில் நடைபெறும் சம்பாஷணையாகப் பல பாடங்களை உள்ளடக்கியுள்ளது இந்நூல். எடுத்துக் காட்டுக்குச் சில பாடங்கள்:

பாடம் (இரண்டாம் பாடம்)

பிராமண விசுவாசம்

(சீடன்) அற்புத சித்திகளைப் பெற்ற ஆனந்தகுருவே அருள் நிறைந் தோங்கிப் பிரம்மத்தின் நிலையடைந்த பிராமணரைப் பிடிவாதமாய் விசுவாசிக்கலாமா?

(குரு) சர்வகண்மணி சாற்றுவேன் கேள்.

தெய்வாதீனம் செகச்சர்வம் மந்திராதீனந் துதெய்வதம்

தன்மந்திரம் பிராமணாதீனம் பிராமணோமமதேவதா.

இதன் பொருளாவது- உலக மெல்லாம் தெய்வத்துக் குளடங்கினது, தெய்வம் மந்திரத்துளடங்கினது, மந்திரம் பிராமணனுளடங்கினது. ஆதலான் பிராமணனே நம்முடைய தேவன். இன்னும் பிரமணனுக்கும் பசுவுக்கும் ஆபத்து வருங்காலத்திலே தன்னுயிரையாகிலுங் கொடுத்து இரட்சித்தானேயானால் நூறு சனனம் பிராமண யோனியிலே பிறந்து ஐசுவரியவானாய் வாழ்ந்து பின் தேவனாவான். சர்வகண்மணி மிருகண்டேயர் (மார்க்கண்டேயனின் தந்தை) நித்தியப்படியாய் ஒரு பிராமணனைக் கண்டு தரிசித்தல்லாது அமுது புசிக்கிறதில்லையென்று விரதம் பண்ணிக்கொண்டார். இப்படியே பல நாட்சென்ற பின் ஒருநாளிலே பிராமண தரிசனக்கிடமில்லாமல் வெளியே புறப்பட்டுச் சுற்றிவரும்பொழுது ஒரு பறைச்சி தனது இரண்டு பிள்ளைகளுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். அவள் தன் இளைய பிள்ளைக்குப் பால் கொடுக்கிறபொழுது தன் ஸ்தனத்தைத் கண்ணீராற் கழுவித்துடைத்துக் கொடுத்தாள். இதைக்கண்டு அவர் பெண்ணே இரண்டும் உன்னுடைய பிள்ளையாயிருக்க ஒரு பிள்ளைக்கு மாத்திரம் சுத்தமாய்ப் பால் கொடுத்ததேன் என்று கேட்டார். அதற்கவள் மூத்தபிள்ளையை என் புருஷனுக்குப் பெற்றேன். இளைய பிள்ளையை ஒரு பிராமணனுக்குப் பெற்றேன். அதினிமித்தமப்படிச் செய்தேன் என்றாள். இந்த வார்த்தையைக்கேட்ட மாத் திரத்தில் மிருகண்டேயர் அந்தப் பிள்ளைக்கு முன்னே விழுந்து பிராமண பீசாய நமவென்று நமஸ்கரித்தார். அப்பொழுது தேவர்களெல்லாம் இவருக்கிருந்த பிராமண விசுவாசத்திற்காக அவரை மோட்சத்திற் சேர்த்திருக்கிறதென்று சிவபுராணத்திற் கூறுகிறது. பிராமண மகத்துவம் இவ்வளவில் நன்கு விளங்குமல்லவா? நீ எப்போதும் பிரம்மத்தின் நிலையறிந்த பிரமாணணைக் குருவாயடைந்துகொள். நீயும் பிரம்மத்தின் நிலையறிந்தாற் பிராமணனாவாய்.

பாடம் (மூன்றாம் பாடம்)

நற்புத்திரன்

(சீடன்) தேவரீர் உலகத்திற் பிள்ளைப் பாக்கியத்தை விட வேறொன்றுமில்லையென்று கூறுகிறார்களே, அதைப்பற்றிச் சொற்பமாய் விளக்கும்படி அஞ்சலி செய்கிறேன்.

(குரு) சர்வகண்மணி சாற்றுவேன் கேள்

எழுபிறப்புந் தீயவை தீண்டாப் பழிமிறங்காப்
பண்புடை மக்கட்பெறின்.

இதன் பொருளாவது தேவர், மக்கள், விலங்கு, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்னும் எழுபிறப்பிற் சென்றாலும் துன்பங்கள் வாரா. நல்ல புத்திரனைப் பெற்றாலென்பதை நீ கவனித்ததுண்டா? இன்னுமொரு பிராமணன் இராசாவின் பிரதானியாயிருந்து நாட்டிலுள்ளோருக்குக் கேடுகள் செய்ததினால் குடிகளைக் கெடுத்து மரண காலத்திலே நரகத்தையடைந்தான். அவனுக்கொரு பிள்ளை யுண்டு. அந்தப் பிள்ளை திருக்குற்றாலத்திலே வந்து தீர்த்தமாடித் தன் பிதாவை நோக்கித் தர்பணஞ் செய்தான். அந்த வேளையிற் சிவன் வந்து காட்சி கொடுக்க நரகத்திலே கிடந்த பிராமணன் விமானம் மேலாகச் சொர்க்கத்தை அடைந்தானென்று கூறியிருக்கிறதே. இவ்வுலகத்தில் பிள்ளைப் பாக்கியமே மேலான பொருளாயிருக்கிறது. இம்மைக்கும் மறுமைக்குங் காரணமாயிருக்கிறது. ஆகலான் நற்புத்திர பாக்கியமே சிற்றின்பச் செல்வம். இனிமேற் சகோதர அருமையைப் பற்றிக் கந்தபுராணம் முதலிய நூல்களிற் கூறியிருப்பதை நம் தேசத்தார் பெரும்பாலும் அறிவார்களென்று விடுத்தனம்.

இப்படிப் பாடம் நடத்துகிறது இந்தப் புத்தகம்!

 – தினகர ஞானகுருசாமி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *