சண்டிகர், செப். 23– கல்வி கற்பதற்கு வயது ஒருபோதும் தடையல்ல; சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு இருந்தால் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் கனவுகளை மெய்ப்பாக்கலாம் என்பதற்கு வாழும் உதாரணமாகத் திகழ்கிறார் அரியானாவின் சிர்சாவைச் சேர்ந்த 85 வயதான லால் சந்த் கோதாரா. இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அண்மையில் எம்.ஏ. பட்டத்தைப் பெற்றுள்ள இவர், அத்தோடு நின்று விடாமல் அடுத்து
பிஎச்.டி. அல்லது சட்டம் படிக்க வேண்டும் என்ற புதிய இலக்கோடு தனது கல்விப் பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.
தனது 20ஆவது வயதுக்கு முன்பே ராணுவத்தில் இணைந்த கோதாரா, நாட்டுக்காகப் பணியாற்றியவர். பின்னர் அரியானா போக்குவரத்துத் துறையில் பணியாற்றி 2002இல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு விளையாட்டுத் துறையில் களமிறங்கி, தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களைக் குவித்தார். தன் வாழ்வில் பல பரிமாணங்களைக் கண்டபோதிலும், ‘கல்வி’ என்பது மட்டும் அவருக்கு முற்றுப்பெறாத ஒரு ஏக்கமாவே இருந்து வந்தது.
பேரக் குழந்தைகளின் கேள்விகள் தந்த உந்துதலால், தனது 76ஆவது வயதில் மீண்டும் பாடப்புத்தகங்களைக் கையில் எடுத்தார். தன்னம்பிக்கையுடன் படித்து, தனது 81 வயதில் இளங்கலைப் பட்டத்தை கடந்த 2023இல் முடித்தவர், தற்போது 85 வயதில் முதுகலைப் பட்டத்தையும் வெற்றிகரமாக முடித்துக் காட்டியுள்ளார்.
நாகை உள்பட 8 துறைமுகங்களில்
1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
நாகப்பட்டினம், செப். 23- வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதால் நாகை உள்பட தமிழ்நாட்டின் 8 துறைமுகங்களில் நேற்று (22.9.2026) ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் 1ஆம் எண் தொலைதூர புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகை மட்டுமின்றி சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 8 துறைமுகங்களிலும் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் ராமேசுவரம், குளச்சல் ஆகிய துறைமுகங்களுக்கும் இது குறித்த எச்சரிக்கை செய்தி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மேற்கு- வடமேற்கு திசையில் நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, செப்.23ஆம் தேதி இரவு முதல் 24-ம் தேதி அதிகாலைக்குள் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
