உங்களுக்கு நோயைக் கண்டுபிடித்துச் சொல்வதற்கு டாக்டர் வேண்டாமா?
திருநெல்வேலி, செப்.23 உங்களுக்கு நோயைக் கண்டுபிடித்துச் சொல்வதற்கு டாக்டர் வேண்டாமா? அந்த வேலையைத்தான் நாங்கள் செய்கிறோம்! உங்கள் நோயை ஒழிப்பது எப்படி மருத்துவத்திற்கு முக்கியமோ, அதுபோலத்தான் சமுதாய நோய்களை ஒழிப்பதற்கு எதிர்நீச்சல் அடித்துப் போராடுகிறோம். எங்களைப் பற்றி கவலையில்லை; எங்கள் வாழ்வைப் பற்றிக் கவலையில்லை. உங்கள் தாழ்வு நீக்கப்படவேண்டும். அதற்காகத்தான் நாங்கள் முழுக்க முழுக்க இந்தப் பணியைச் செய்துகொண்டிருக்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
“எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு”
கடந்த 19.08.2026 அன்று, திருநெல்வேலியில் நடைபெற்ற, “எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு” எனும் தலைப்பில், வாகையடி அம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
‘நாங்கள் திரும்பி வந்தால் வரவு;
இல்லையென்றால் அவ்வளவுதான்!
வீட்டில் இருந்து புறப்பட்டு வரும்போதே, என்ன சொல்லிவிட்டு வருவோம் தெரியுமா? ‘நாங்கள் திரும்பி வந்தால் வரவு. இல்லையென்றால் அவ்வளவுதான்’ என்று சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறோம். ஆகவே எங்களுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. நாங்கள் என்ன பதவிக்கு போகிறோமா? ஆனால், சமூகத்திற்காக பாடுபட வேண்டும் என்கின்ற உணர்வு. இந்த உணர்வு; கொள்கை தோற்றுப்போகாது. எதிர்நீச்சல் அடித்தார். அதன் விளைவு படிப்படியாக வெற்றி பெற்றார்.
வ.உ.சி. அவர்களை காங்கிரசில் இருக்கும்போது தலைவராக ஆக்கவேண்டும் என்று நினைத்தார்கள். பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள். அதையெல்லாம் வரத ராஜுலு நாயுடு அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். இதெல்லாம் வரலாறு. ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களெல்லாம் கல்வி பெறவேண்டும் என்று பாடுபட்டார்கள்.
நாங்கள் யாருக்காக பாடுபடுகிறோம்? எங்களை எதிர்க்கிறவர்களுக்கும் சேர்த்துப் பாடுபடுகிறோம்!
ஆகவே, ஏதோ சம்பந்தமில்லாமல் இவர்கள் கடவுள் மறுப்பாளர்கள்; இவர்கள் வரலாமா? விடலாமா? என்றெல்லாம் சொல்வது இருக்கிறதே – போதை ஏறியவன் வேட்டி இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாமல் ஆடுவது மாதிரி ஆகும். வேறு ஒன்றும் கிடையாது. நன்றாக இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் யாருக்காக பாடுபடுகிறோம்? எங்களை எதிர்க்கிறவர்களுக்கும் சேர்த்துத்தான் பாடுபடுகிறோம். எங்க ளுக்கு அனுமதி கொடுக்காதவர்களுக்கும் சேர்த்தே பாடுபடுகிறோம். ஏனென்றால், நாங்கள் யாரையும் விரோ திகளாகப் பார்ப்பதில்லை. எங்களுக்குக் கொள்கை முக்கி யம். அந்தக் கொள்கை, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதியும், ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயம் என்பனவாகும்.
காவல் துறைக்கு உதவியாக இருப்போமே தவிர, காவல் துறைக்குத் தொல்லை கொடுப்பது அல்ல!
‘‘மனிதனை மனிதன் தொடக்கூடாது’’ என்று சொன்னார்கள். இன்றைக்கும் தீட்டு என்கிறானே? வெட்கமாக இல்லையா? இரத்தம் கொதிக்கவில்லையா? சொந்தப்பிள்ளை, வேறொருவனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் என்றால், அதற்காக கூலிப்படையை ஏவி, ஆணவக்கொலை நடக்கிறது. அதுவும் இந்த மாவட்டத்தில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. இதைத் தடுக்க வேண்டும். காவல் துறைக்கு உதவியாக இருப்பது எங்கள் வேலையே தவிர, காவல் துறைக்குத் தொல்லை கொடுப்பது அல்ல. ‘‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்.’’ இது பழைய பழமொழி. ஆகவேதான் அவர்கள் நன்றாக நினைத்துப்பார்க்க வேண்டும்.
பெரியார் என்பது ஒரு சமூக விஞ்ஞானம்!
ஜாதிவெறி எந்தளவுக்கு இருக்கிறது? சுதந்திர நாட்டில் இன்னமும் கிராமங்களில் இருக்கிறது. இல்லை என்று நினைக்காதீர்கள். இந்த ஆண்டு சுதந்திரம் கொண்டாடுவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு அகில இந்தியாவையே உலுக்கிய ஒரு சம்பவம். ஜாதி வெறி, தமிழ்நாட்டில் அந்த உணர்வு அந்தளவுக்குக் கிடையாது. தமிழ்நாட்டில் இருந்தாலும், ஒப்பீட்டளவில் குறைவு. காரணம் பெரியார் இருக்கிறார். பெரியாருடைய பணி இருக்கிறது. காரணம், திராவிடர் இயக்கத்தினுடைய பணி. ‘திராவிட மாடல்’ ஆட்சி! அதனால்தான் பெரியார் பிறந்த நாள், அம்பேத்கர் பிறந்த நாள் விழாக்கள் அரசு விழாவாக நடக்கிறது. இன்றைக்கு எந்த ஆட்சி வந்தாலும் பெரியாரைத் தாண்டி அவர்களால் ஆட்சி நடத்த முடியாது. காரணம் பெரியார் என்பது ஒரு சமூக விஞ்ஞானம். அந்த அடிப்படையிலேதான் இந்தப் பணியை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். 80 ஆம் ஆண்டு சுதந்திரம் என்று கொடியேற்றுகிறோம், மகிழ்ச்சி. ‘‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’’ என்று உற்சாகம் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு செய்தி உலகத்துக்குப் போகிறது? உலகம் முழுவதும் அந்தச் செய்தியைத் தெரிந்துகொண்டால் இந்த நாட்டுக்குப் பெருமையா? தேசிய அவமானம் அல்லவா? என்ன அந்தச் செய்தி?
எங்களாலும் கண்டிக்கப்பட்டிருக்கிறது!
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. அவர் மாநிலங்களவையிலே எதிர்க்கட்சித் தலைவர். கருநாடகத்தைச் சார்ந்தவர். 80 வயதுக்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி! அப்பேர்ப்பட்டவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர். 140 ஆண்டுகள் ஆன ஓர் இயக்கத்தின் தலைவர். அகில இந்திய எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சி, ஆளுங்கட்சியாக இருந்த கட்சியினுடைய தலைவர். அப்படிப்பட்டவர் டில்லிக்குப் பக்கத்தில் இருக்கிற உத்ரகாண்டில் போய்ப் பேசுகிறார். ‘‘அங்கேதான் நாங்கள் பத்ரிநாத்துக்குப் போறோம். அந்தக் கடவுளைப் பார்க்கிறோம்; இந்தக் கடவுளைப் பார்க்கிறோம்’’ என்றெல்லாம் நிறைய பேர் செல்கிறார்கள். நிலச்சரிவு அதிகமாக இருக்கும் பகுதி அது. அந்தப் பகுதிக்கு மல்லிகார்ஜூன கார்கே சென்று, மேடை போட்டுப் பேசுகிறார். அவருடைய கொள்கையை எடுத்துச் சொல்கிறார். உடனே அங்கிருக்கும் பா.ஜ.க.காரர்கள், அங்கிருக்கும் சில வைதீகர்கள், அங்கிருக்கும் சில ஸநாதனிகள் என்ன செய்தார்கள் தெரியுமா? பத்திரிகையிலே அந்தச் செய்தி வந்திருக்கிறது. நாடாளுமன்றத்திலே பேசப்பட்டிருக்கிறது. பல இடங்களில் கண்டிக்கப்பட்டிருக்கிறது. எங்களாலும் கண்டிக்கப்பட்டிருக்கிறது. என்ன நடந்தது? கார்கே பேசிவிட்டுப் போனார். உடனே அங்க வந்து யாகம் நடத்துகிறான். என்னன்னா? ‘‘இந்த மேடை தீட்டாயிடுச்சு? இந்த ஊரே தீட்டாயிடுச்சு?’’ என்று தண்ணீர் ஊற்றிக் கழுவிவிடறான். ஏனென்று கேட்டால், ‘‘கார்கே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதனால் தீட்டுக்கழிக்க வேண்டும். ஊரே கெட்டுப்போய்விடும், நாடே கெட்டுப்போய்விடும். பார்ப்பனர்களை அழைத்துக் கொண்டு வாங்க, மந்திரம் சொல்லுங்கள், யாகம் நடத்துங்கள்’’ என்று சொல்லி, அவமரியாதை செய்திருக்கிறார்கள். கார்கே மனம் நொந்து சொல்கிறார். இப்படியொரு தேசம் இருக்கலாமா? இப்படியொரு சமூகம் இருக்கலாமா? இன்னமும் என்னை தாழ்த்தப்பட்டவனாகவே பார்க்கிறீங்களே இது நியாயமா? என்று கேட்கிறார்.
இராணுவ அமைச்சராக இருந்த
பாபு ஜெகஜீவன்ராமிற்கு ஏற்பட்ட அவமானம்!
அதற்கு முன்பு, பாபு ஜெகஜீவன்ராம்! அவர் இராணுவ அமைச்சர்! அவரை உத்திரப்பிரதேசத்திற்கு அழைத்து, அதற்கு முன்பிருந்த முதலமைச்சர் சிலையை திறக்கச் சொல்கிறார்கள். ஒப்புக்கொண்டு போகிறார். பனாரஸ் பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர்கள். உடனே உயர்ஜாதிக்காரர்கள், அந்த மாணவர்களை தூண்டி விட்டார்கள். ெஜகஜீவன்ராம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் சிலையைத் திறந்தால் அது தீட்டாயிடும். ஆகவே, உயர் ஜாதிக்காரர் சிலையை அவர் திறக்கக் கூடாது. இராணுவ அமைச்சராக இருந்த ெஜகஜீவன்ராம் அசந்து போகிறார். இராணுவமே அவர் கைகளில் இருக்கிறது. இராணுவ அமைச்சராகவே இருந்தும், ெஜகஜீவன்ராம் செய்த குற்றம் என்ன? படித்தவர், விவரம் தெரிந்தவர், 50 ஆண்டுகளாக கேபினட்டில் அமைச்சராக இருந்தவர். அப்படிப்பட்டவர் உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரின் சிலையைத் திறந்துவைக்க முடியவில்லை. வெறுத்துப் போகிறார். ‘அய்யா, நான் பேசமாட்டேன். சும்மா பொத்தானை அழுத்திட்டு போய்விடுகிறேன்’ என்றார். அவர் மேலே ஏறவில்லை. சிலையைக் கட்டிப்பிடிக்கவில்லை. பொத்தானை அழுத்தினார். சிலை திறக்கப்பட்டது. மனம் நொந்து போய், விமானத்தில் சென்னைக்கு வந்துதான், தமிழ்நாடுதான் சமத்துவமண் என்று தன்னுடைய ஆற்றாமையை, துயரத்தை, துன்பத்தை, அவமானத்தைத் தீர்த்துக் கொண்டார். அங்கே ஸநாதனத்தைப் படிக்கிற பிள்ளைகள் – காசிப் பல்கலைக் கழகத்தின் உயர் ஜாதிக்கார மாணவர்கள், கங்கையிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து சிலையின் மீது ஊற்றினார்கள். ெஜகஜீவன்ராம் திறந்ததனால் சிலை தீட்டுப்பட்டுவிட்டது என்கிறார்கள். இது அன்றைக்கு நடந்தது. அதே கதை இன்றைக்கும் உத்ரகாண்ட்டில் நடக்கிறது என்றால், இந்த நாடு சுதந்திரநாடா? அதைத்தான் பெரியார் கேட்டார். அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். வேறொன்றும் நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்குப் பதவி வேண்டும் என்று கேட்கவில்லை. எங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டாமா? எங்களைத் தொடக்கூடாத ஜாதி என்றாக்கினீர்கள். படிக்கக்கூடாத ஜாதி என்றாக்கினீர்கள். இன்றைக்கு நீட் தேர்வை எதிர்த்து ஏன் நாங்கள் போராடுகிறோம்? முன்னாலே இதே சூழ்ச்சியை செய்தார்கள். நீதிக்கட்சிதான் அதை முறியடித்தது. டாக்டர் ஆக வேண்டும் என்றால், மருத்துவர் ஆக வேண்டும் என்றால், அந்த மருத்துவப் படிப்புக்கு மனு போடுவதற்கே பல பேருக்குத் தெரியாது. அதிகாரிகளாய் இருக்கிறவர்களுக்கும் தெரியாது. காவல்துறையிலும் பல பேருக்குத் தெரியாது. எங்களை எதிர்க்கிறவர்கள் பல பேருக்கும் தெரியாது. அருள் கூர்ந்து அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். – ஜஸ்டிஸ் கட்சி வந்த பின்னால்தான், பனகால் அரசர் ஆண்ட பின்னால்தான், பெரியார் சொன்ன பிற்பாடுதான் மாறியது.
கீழ் ஜாதிக்காரன் சமஸ்கிருதத்தைப் படிக்கக்கூடாது!
என்ன மாறியது? எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு மனு போட வேண்டும் என்றால், சமஸ்கிருதம் படித்தி ருக்கவேண்டும். சமஸ்கிருதம் யார் படிக்கலாம்? கீழ் ஜாதிக்காரன் சமஸ்கிருதத்தைப் படிக்கக்கூடாது. மேல் ஜாதிக்காரன் மட்டும்தான் படிக்க வேண்டும். அப்படியென்றால் அதற்கு என்ன அர்த்தம்? உயர் ஜாதிக்காரர்கள் மட்டும் டாக்டர்கள் ஆகவேண்டும் என்பதுதானே? பெரியார் போராடி – நீதிக்கட்சி – திராவிடர் இயக்கம் ஆட்சிக்கு வந்ததாலே அதைத் தூக்கி எறிந்தார்கள். அதனுடைய விளைவுதான் இன்றைக்கிருக்கும் இத்தனை மருத்துவக் கல்லூரிகள்.
ஆதாரம் இல்லாமல் எதையும் பேசமாட்டோம் நாங்கள்!
அதற்குப் பிறகு இராஜகோபாலாச்சாரியார் ஆட்சி வந்தது. அந்த ஆட்சியிலே நம்மாட்கள் படிக்க ஆரம்பித்தார்கள். ஆச்சாரியார் உடனே பள்ளிக்கூடங்களை மூடவேண்டும் என்று நினைத்தார். காரணம், இதோ மனுதர்மம் (அசல் மனு தர்மம் புத்தகத்தை எடுத்துக்காட்டுகிறார்) ஆதாரம் இல்லாமல் பேசமாட்டோம். இது மனுதர்மம். இந்த மனுதர்மத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியை, அறிவைக் கொடுக்கக்கூடாது. எவ்வளவு கொடுமை? இது இன்னமும் இருக்கலாமா? இதை எல்லாரும் சகித்துக்கொண்டிருந்தால் சொல்வதற்கு ஆள் வேண்டாமா? உங்களுக்கு நோயைக் கண்டுபிடித்துச் சொல்வதற்கு டாக்டர் வேண்டாமா? அந்த வேலை யைத்தான் நாங்கள் செய்கிறோம்! உங்கள் நோயை ஒழிப்பது எப்படி மருத்துவத்துக்கு முக்கியமோ, அதுபோலத்தான் சமுதாய நோய்களை ஒழிப்பதற்கு எதிர்நீச்சல் அடித்துப் போராடுகிறோம். எங்களைப் பற்றி கவலையில்லை; எங்கள் வாழ்வைப் பற்றிக் கவலையில்லை. உங்கள் தாழ்வு நீக்கப்படவேண்டும். அதற்காகத்தான் நாங்கள் முழுக்க முழுக்க இந்தப் பணியைச் செய்துகொண்டிருக்கிறோம்.
நாங்கள் யாரையும் தூண்டிவிடுவதில்லை!
எண்ணிப்பாருங்கள் தோழர்களே… இதை நாங்கள் சொல்லவில்லை. ‘‘இந்து… இந்து…’’ என்று பெரிய அளவுக்கு இந்த வெறியைக் கிளப்புகிறவர்களுக்குச் சொல்கிறேன். அந்த அரைவேக்காடுகளுக்குச் சொல்கி றேன். அந்தப் புரியாதவர்களுக்குச் சொல்கிறேன். நாங்கள் யாரையும் தூண்டிவிடுவதில்லை. ரத வீதியிலே இவர்கள் கூட்டம் போடுவதா? என்று கேட்கிறார்கள். ரத வீதியில் நாங்கள் எத்தனைக் காலமாக கூட்டம் போட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களால் ஒரு சின்ன ஆபத்து ரத வீதிக்கு உண்டா? சாமி தூக்கிக் கொண்டு வருகிறவர்கள் வந்தால்கூட, பெரியார் என்ன செய்வார் தெரியுமா? நாங்கள் என்ன செய்வோம் தெரியுமா? பேசிக்கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்தால், அமைதியாக போகட்டும் என்று பேச்சை நிறுத்திவிடுவோம். அந்த சாமியை தூக்குகிற ஆள், பெரியாருக்குக் கும்பிடு போட்டுவிட்டுப் போவார். அதுதான் மிக முக்கியம். இந்தக்காட்சி சாதாரணம். எங்களுக்கு யாரும் எதிரிகள் கிடையாது. அதை நன்றாக நினைத்துப் பாருங்கள் நண்பர்களே…
எங்கள் கூட்டத்தினால் எந்தவொரு தொல்லையும் யாருக்கும் நடந்ததே கிடையாது!
உங்களுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். ஏனென்றால் நெஞ்சம் பதறுகிறது. இன்னமும் புரியாமல் இருக்கிறார்கள். அந்தக் கோயிலில் இதுவரைக்கும் முன்னால் மேடை போட்டிருக்கிறோம். இன்னமும் தமிழ்நாட்டில் எத்தனையோ கோயில்களுக்கு முன்னால்தான் கூட்டம் நடக்கிறது. விருதுநகருக்குப் போனால், அங்கே சுற்றி மூன்று இடங்களிலேயும் கோயில் இருக்கும். எங்கள் கூட்டத்தினால் எந்தவொரு தொல்லையும் யாருக்கும் நடந்ததே கிடையாது. எங்களால் யாருக்காவது தொல்லை உண்டா?
‘இந்து மதம் எங்கே போகிறது?’
கடவுள் இல்லை என்று சொல்வது எங்களுடைய வேலைத்திட்டம். ஏன்? ஜாதியை நிலைநாட்டுவதற்குக் கடவுள் தான் காரணம். ‘பகவத் கீதை’யில் கிருஷ்ணன் சொல்லுகிறார். புத்தகம் இருக்கிறது. அதில் எழுதி யிருக்கிறார்கள். மனுதர்மத்தில் சொல்லுகிறார்கள். பிரம்மாதான் ஜாதியை உண்டாக்கினார். கீதையில் கிருஷ்ணன் சொல்லுகிறார், ‘‘சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்” நான்கு ஜாதிகளையும் நான்தான் உண்டாக்கினேன். இந்தத் தர்மப்படி நடக்க வேண்டும். மாற்றி நடக்கக்கூடாது. வர்ண தர்மப்படிதான் நடக்க வேண்டும் என்றால் என்ன? சூத்திரன், சூத்திரனாக இருக்க வேண்டும். பஞ்சமன், பஞ்சமனாக இருக்க வேண்டும். இதோ ஆதாரம் (அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, ‘இந்து மதம் எங்கே போகிறது?’ புத்தகத்தைக் காட்டுகிறார்) இந்து மதம் எங்கே போகிறது? இந்தப் புத்தகம் யார் போட்டது? பெரியார் எழுதியதா? இல்லை வீரமணி எழுதியதா? அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். நான் இதைப் பேசமாட்டேன். நீங்கள் கிளப்பிவிட்டதினால் பேசுகிறேன். அதற்கு மிக்க நன்றி. காவல்துறை உள்பட அவர்களுக்கும் விளக்கம் தெரிய வேண்டும். நாங்கள் ஏதோ பொறுப்பில்லாமல் பேசிவிட்டுப் போகக் கூடியவர்கள் அல்ல. பேசுவதற்கு பொறுப்பேற்கிறோம். நாங்கள் மக்களுக்காக பேசுகிறோமே தவிர, எங்களுக்காக கிடையாது. இந்தப் புத்தகத்தில் முதலில் எடுத்த உடனே, மனுதர்மத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்.
(தொடரும்)
