தமிழர் தலைவர் மீது அன்பு மழை பொழிந்த விடுதலைபுரம், பெருவளப்பூர் மக்கள்…!

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பூங்கொத்து வழங்கியும், பயனாடை அணிவித்தும், விடுதலை ஏட்டிற்கு சந்தா வழங்கியும், பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கியும் பேராதரவு

திராவிடர் கழகம்

விடுதலைபுரத்தில் கழகத் தலைவருக்கு வரவேற்பு

இலால்குடி மாவட்டம் பெருவளப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியார் 148 ஆம் பிறந்தநாள் நிகழ்வுக்கு செல்லும் பாதையில் இருக்கும் விடுதலைபுரத்தில், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. பெரியார் பிஞ்சுகள் முதல் முதிர்ந்த வயதுடையோர் வரை ஊரே திரண்டு வந்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, வெடி வெடித்து மிகுந்த உற்சாகமான வரவேற்பை வழங்கி விட்டனர். 15.06.1994 அன்று, இதே இடத்தில், தமிழினக் காவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ”தந்தை பெரியார்” சிலையைத் திறந்து வைத்திருக்கிறார். அதே நிகழ்ச்சியில், கழகக் கொடியை, அப்போது கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த கோ.சாமிதுரை அவர்கள் ஏற்றி வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு, 20.09.2026, ஞாயிற்றுக்கிழமை அன்று இப்போதுதான் இங்கே வருகை தந்திருக்கிறார். கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, தாங்கள் கடைப்பிடித்தொழுகும் கொள்கை வழிகாட்டியை சந்திப்பது; அதுவும் தங்கள் ஊரிலேயே என்றால், கருஞ்சட்டைத் தோழர்களுக்கு இது எவ்வளவு உணர்வுப் பூர்வமான விசயம். அந்த உணர்வுகள் அம்மக்களின் அகத்திலும், முகத்திலும் அப்படியே பிரதிபலித்தன.

அதே உற்சாக முழக்கங்களுக்கு இடையே தந்தை பெரியார் சிலைக்கு, கொள்கைத் தனயன் மாலையணிவித்தும், கழகக் கொடியை ஏற்றுவைத்தும் மகிழ்ந்து, மக்களையும் மகிழ்வித்தார். உற்சாக முழக்கங்களால் அப்பகுதி எங்கும் பரபரப்பாக இருந்தது. மக்கள் தங்களுக்கு ஏதேனும் அறிவுரை கூறிவிட்டுச் செல்லுங்கள் என்று, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடன் ஆவலுடன் கேட்டனர். அன்புக்குக் கட்டுப்பட்ட கழகத் தலைவர், ”விடுதலைபுரம் மக்களை 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன். பெரியார் பிஞ்சுகள் உள்பட ஊரே திரண்டு வந்திருக்கிறீர்கள். பிள்ளைகளை நன்றாகப் படிக்க வையுங்கள். பெருவளப்பூருக்குச் செல்ல வேண்டும். ஆகவே, தனியாக விடுதலை புரத்தில் இன்னொரு நாள் வந்திருந்து பேசுகிறேன்” என்று சுருக்கமாகப் பேசி, அவர்களை உற்சாகப்படுத்தி, தானும் மகிழ்ந்தார். கழகத் தலைவர் சூழ்ந்து நிற்கும் மக்களிடம் கலந்துரையாடிக் கொண்டே வாகனத்தை நெருங்கும் போது, பின்னணியில், விடுதலை புரம் மகளிர் தோழர் விவேகி, ”ஏற்றத் தாழ்வு போக்கி எல்லாம் சமம் ஆக்கி” என்ற வரிகள் உள்ளிட்ட, திராவிடர்  இயக்கத்தின் சாதனைகளை விளக்கி, ராகத்துடன் பாடிக்கொண்டிருந்தார்.

கழகத் தலைவர் அதே பாடலின் பின்னணியிலேயே அம்மக்களிடம் பிரியாவிடை விடைபெற்றார். இந்நிகழ்வில், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டக் காப்பாளர் ப.ஆல்பர்ட், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, மாவட்டத் தலைவர் வீ.அன்புராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் வெ.சித்தார்த்தன், பெரியார் வீரவிளையாட்டுக்கழக மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

(விடுதலைபுரம், 20.09.2026)

 

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

பெருவளப்பூரில் கழகத்தலைவருக்கு வரவேற்பு!

 

விடுதலைபுரத்தில் வழங்கப்பட்ட வரவேற்பு என்பது திடீர் குறு நிகழ்ச்சியாகவே மாறிவிட்டது. அதை முடித்துக்கொண்டு புறப்பட்ட கழகத் தலைவர் அவர்களின் வாகனம் பெருவளப்பூரில் நுழைந்தது. முதல் நிகழ்வின் மகிழ்ச்சி தீருவதற்குள் அடுத்த வரவேற்பு அதைவிட சிறப்பாக அமைந்துவிட்டது. அங்கே பேண்டு வாத்தியங்கள் அதிர, அதிர விறுவிறுப்பான வரவேற்பு அளித்துவிட்டனர் பெருவளப்பூர் மக்கள். அங்கேயும் தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவித்தும், கழகக் கொடியை கழகத் தலைவர் ஏற்றிவைத்தும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்வித்தார். அப்போது, ”தந்தை பெரியார் வாழ்க!” ”அன்னை மணியம்மையார் வாழ்க!” ”தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழக!” என்ற ஒலி முழக்கங்கள் அவ்விடத்தையே நிரப்பிவிட்டது.

அம்முழக்கங்களை பெரியார் பிஞ்சுகள் உள்பட பெரியவர்கள் வரை உணர்வுப் பூர்வமாக உச்சரித்ததைக் காண்பதற்கு மயிர்கூச்செறிவதாக இருந்தது. கழகத் தலைவரைச் சூழ்ந்த வண்ணம் ஏராளமான மக்கள், சாலையை அடைத்துக் கொண்டு நின்றதால் பேருந்துகள், சிற்றுந்துகள் முன்னும் பின்னுமாக இரண்டு பக்கமும் நின்றுவிட்டன. சற்று எட்டிநின்ற மக்கள் கழகத்தலைவர் அவர்களை அருகில் பார்ப்பதற்கு முயன்று ஏமாந்து போயினர். கழகத் தலைவர் விடைபெற்றுக்கொண்டு வாகனத்தில் ஏறிவிட்டாலும் முடிந்துவிடவில்லை அந்த வரவேற்பு! பேண்டு வாத்தியங்கள் முழங்க பொதுக்கூட்ட மேடை வரை கழகத் தலைவர் வாகனத்தை ஊர்வலம் போல மக்கள் புடைசூழ அழைத்துச்சென்றனர் கழகத் தோழர்கள். மேடைக்குச் சென்றதும் கொள்கை ஒலிமுழக்கங்கள், கழகத் தலைவர் பற்றி வாழ்த்தொலிகள் அவ்விடத்தையே நிறைத்துவிட்டன. பொது மக்கள், கழகத்தலைவரை வியந்து பார்த்த வண்ணம் இருந்தனர்.

மேடையேறிய கழகத்தலைவர் தோழர்கள், மக்கள் அனைவருக்கும் சேர்த்து இருகரம் கூப்பி வணக்கம் வைத்தார். ஒட்டுமொத்த கூட்டமும் அவருக்கு வணக்கம் வைத்தது. பெரியார் தொண்டர் திவ்யநாதன், புள்ளம்பாடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வீரமணி, கழகத் தோழர் லூகாஸ் ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்துச் சிறப்பித்தனர்.

(பெருவளப்பூர், 20.09.2026)

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *