வினை தீர்ப்பவனா விநாயகன்?

5 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மகாகணபதி குழுவினருக்கும்,

கிங் ஆப் திருவல்லிக்கேணி குழுவினருக்கும் இடையே மோதல்!

சென்னை, செப்.21- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பகுதியில் சுமார் 45க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர். விநாயகர் சிலை கரைப்பு நாளான நேற்று (20.9.2026) இந்தச் சிலைகள் அனைத்தும் கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்காக திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரர் கோயில் அருகே பிள்ளையார் கோயில் தெருவில் ஒருங்கிணைக்கப்பட்டன.

அப்போது, ஜாம்பஜார் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த மகா கணபதி விநாயகர் சிலை குழுவினரும், அதே ஜாம்பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கிங் ஆப் திருவல்லிக்கேணி விநாயகர் சிலை குழுவினரும் தங்கள் சிலைகளை அடுத்தடுத்து கொண்டு வந்தனர்.

இந்த இரு சிலைகளும் பகீர் சாஹிப் தெருவில் வரும்போது மகா கணபதி விநாயகர் குழுவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கிங் ஆப் திருவல்லிக்கேணி விநாயகர் சிலை குழுவினரின் மேள வாத்திய குழுவினருடன் வந்து ஆடவந்தார். அப்போது அவர் கை விரல்களில் பிளேடை வைத்துக் கொண்டு ஆட முற்பட்டதாக தெரிகிறது.

இதைக் கண்ட கிங் ஆப் திருவல்லிக்கேணி விநாயகர் சிலையுடன் வந்த குழுவினர் அந்த வாலிபரை தாக்கி உள்ளனர். இதனால், மகா கணபதி விநாயகர் சிலை குழுவினருக்கும், கிங் ஆப் திருவல்லிக்கேணி விநாயகர் சிலை குழுவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

உடனடியாக காவல் துறையினர் விரைந்து வந்து பிரச்சினையை தீர்த்து வைத்து ஊர்வலத்தை அமைதியாக முன்னெடுத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து மகா கணபதி விநாயகர் சிலை பிள்ளையார் கோயில் சந்திப்பையடைந்தபோது, சாலையின் குறுக்கே சென்ற கேபிள் தட்டி விநாயகர் சிலையின் தலை உடைந்து கீழே நின்ற சிறுவன் மீது விழுந்தது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் விநாயகர் ஊர்வலத்தில்

இரு தரப்பினர் மோதல்!

பட்டினப்பாக்கத்தில் கலங்கரை விளக்கம் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் வந்து கொண்டிருந்தபோது, அணுகுசாலை அருகே இரு தரப்பினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அவர்களில் 2 வாலிபர்கள் கைகளில் கம்புகளை கொண்டு மற்றொருவரை தாக்கியடியும், சாலையில் நடந்து சென்றவர்கள் மீதும் தாக்கினர். இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து வேகமாக தப்பியோடினர். இந்த நிகழ்வால் அப்பகுதியில் சிறிது பரப்பானது. மோதல் நிகழ்விற்கான காரணம், தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்த விவரம் உடனடியாகத் தெரியவில்லை. தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விநாயகர் என்ன செய்கிறார்?

விநாயகர் சதுர்த்தி அன்னதானத்தில்

சினிமா ஊழியருக்கு கத்திக் குத்து!

ஆசாமி கைது!

சென்னை விநாயகர் சதுர்த்தி அன்னதானத்தில் ஏற்பட்ட தகராறில், சினிமா ஊழியருக்கு கத்தி குத்து விழுந்தது. இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ராமாபுரம் திருமலை நகர், நேதாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் (40). சினிமாத் துறையில் வேலை செய்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி மாலை, கார்த்திக்கின் வீட்டின் அருகே உள்ள வரசக்தி விநாயகர் கோயில் முன்பு அன்னதானம் நடைபெற்றது. இதில், அவர் உணவு பரிமாறி கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோவில் வந்த திருவள்ளூர் மாவட்டம், அய்யப்பன் தாங்கல், பெரிய கொளத்துவாஞ் சேரியைச் சேர்ந்த ராஜா என்ற தங்கராசா உட்பட 3 பேர், கார்த்திக்குடன் உணவு பரிமாறிக் கொண்டிருந்த தினேஷ் என்பவரிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.

இதனைப் பார்த்த கார்த்திக், ராஜாவை சமாதானப்படுத்த முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, அவரது நண்பர்கள் 2 பேர், சமாதானப்படுத்த முயன்ற கார்த்திக்கை தகாத வார்த்தைகளால் பேசினர். தொடர்ந்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கினர்.

கொலை மிரட்டல்

இதனை தடுக்க வந்த நித்திஷ் என்பவரையும் தாக்கினர். பின்னர் ராஜா உட்பட 3 பேரும் கார்த்திக்குக்கு கொலை மிரட்டல் விடுத்து, ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இந்த விவகாரம் குறித்து ராமாபுரம் காவல் துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், தலைமறைவாக இருந்த ராஜாவை கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜா ராமாபுரம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பது தெரிய வந்தது.

இவர் மீது ஏற்கெனவே கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 14 குற்ற வழக்குகள் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை காவல் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மும்பையில் விநாயகர் பந்தலில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு!

நான்கு பக்தர்கள் படுகாயம்

மும்பையில் பிரபல கணபதி பந்தலில் மின்சாரம் தாக்கி சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.

மின்சாரம் பாய்ந்தது

மும்பை லால்பாக் பகுதியில் உள்ள புகழ்பெற்ற காலா சவுக்கி கணபதி பந்தலில் நேற்று முன்தினம் (19.9.2026) நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது.

அதிகாலை 2.20 மணியளவில், பந்தலின் நுழைவாயில் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த குடிநீர் மற்றும் குளிர்பான கடையின் அருகே சென்ற மின் ஒயரில் திடீரென மின் கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் மின்சாரம் பாய்ந்தது.

2 பேர் பரிதாப உயிரிழப்பு

இதனையடுத்து வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். எனினும், மின்சாரம் தாக்கியதில் 6 பேர் நிகழ்வு இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், காவல் துறையினர் மற்றும் மின் நிறுவன அதிகாரிகள் உடனடியாக அப்பகுதிக்கான மின் இணைப்பைத் துண்டித்து, மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட 6 பேரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ராகினி யாதவ் (வயது 8) என்ற சிறுமியும், சுஜாதா (33) என்ற பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிறுமி கவலைக்கிடம்!

மேலும், காயமடைந்த கிரண் அக்பர் நாயக் (19), தன்வி நரேஷ் ஹண்டே (19), சாஹில் சந்தீப் தாரே (19) ஆகிய 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், ரூஹி சிங் (12) என்ற சிறுமி பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு குறித்து காலா சவுக்கி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *