புகழுக்கோ, பெருமைக்கோ, பதவிக்கோ, சிறப்புகளுக்கோ ஆசைப்பட்டவரல்லர்; எதிர்ப்புகள், வசைமொழிகள், கல்லடிகள், சிறைகளை எதிர்நோக்கியே பொதுத் தொண்டுக்கு வந்தவர். அதைப் பொது நலம் என்று கூட சொல்லாமல், பொதுத் தொண்டாற்றுவதில் தனக்கு ஏற்படும் திருப்தியே காரணம் என்றும் சொன்னவர்.
‘நன்றியை எதிர்பார்ப்பது கூட சிறுமைக் குணம்’ என்று சொன்னவர் பெரியார். அதனால்தான் அவரால், சிறிதும் சலிப்பின்றிச் சமுதாயத் தொண்டாற்ற முடிந்தது.
சுயமரியாதை உணர்வை இம் மக்களுக்குக் கொண்டு வருவதற்காக உழைத்தவர். ஆனால், தனது தொண்டு, ‘மானம் பாராத் தொண்டு’ என்று வரையறுத்துக் கொண்டவர். அந்தத் துணிச்சல் தான், யாருக்காக உழைக்கிறோமோ அவர்களாலேயே தூற்றப்பட்டும், தாக்கப்பட்டும், எதிர்க்கப்பட்டும் கூட அவர்களுக்காகப் பணியாற்ற வைத்தது. இனமானம் காக்கும் பணியில் தன்மானத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்.
பெரியார் என்னும் பெயரைக் கேட்டாலே இன்றைக்கும் தொடை நடுங்கும் ‘வீராதி வீரர்கள்’ தான், அவர் சிலையோடு மோதுகிறார்கள். மறைந்து 52 ஆண்டுகள் முடிந்துவிட்டன என்று நாம் சொன்னாலும், கொள்கை எதிரிகள் அதை ஏற்பதில்லை. நம்மவர்களை விட அவர்களுக்கு நன்கு தெரியும் – “பெரியார் என்பவர் தனி மனிதரல்லர்!” அவர் ஒரு வாழும் தத்துவம்; வரலாற்றை உருவாக்கும் வரலாறு; காய்த்துப் போயிருந்த அடிமைத் தோல்களுக்குச் ‘சுரீர்’ என்ற உணர்வைத் தந்த சூரியன்.
அவர் ஆற்றிய உரைகளெல்லாம் காற்றில் கரைந்து போய்விடவில்லை; விமானத்திலிருந்து வீசிய விதைகளாய் எங்கெங்கோ முளைத்திருக்கிறது. ஆதிக்கக் கோட்டையின் கற்சுவர்களைப் பெயர்த்துக் கொண்டும், மொட்டைப் பாறையின் இடுக்குகளிலிருந்தும், சிந்தனை வறண்ட பாலைவனமாக இருந்த மூளைகளிலும் அந்த விதைகள் வெடித்துக் கிளம்புகின்றன. எங்கெங்கிருந்தோ முளைத்தெழும் சமூகநீதியும், பகுத்தறிவுக் கேள்விகளும் ஆரியத்திற்குச் சவால் விடுவதற்குப் பின்புலமாக பெரியாரின் தத்துவ விதைகள் விழுந்திருப்பதை அவர்கள் கண்டுகொள்கிறார்கள்.
“அவர் ஒரு சகாப்தம்; ஒரு காலகட்டம்; ஒரு வரலாற்றுத் திருப்பம்” என்று அறிஞர் அண்ணா சொன்னவை வெற்று அலங்காரச் சொற்கள் அல்ல என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பெரியாரைப் பொதுவானவர்கள் போற்றுவது அவர்களுக்கு அச்சத்தைத் தருகிறது.
பெரியாரைத் தமிழ்நாட்டுக்குள் அடைக்க நினைத்தவர்கள், பிரிவினைவாதி என்று முடக்க நினைத்தவர்கள், ஹிந்தியை எதிர்த்தவர் என்று அடையாளப்படுத்த முயன்றவர்கள் – இன்று பெரியாரை இந்தியாவின் எல்லாப் பகுதிகளும் கொண்டாடுவதை, ‘ஹிந்தி பெல்ட்’ என்று சொல்லப்பட்ட மாநிலங்களே பெரியாரின் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பைப் புரிந்துகொண்டு, அதன் நியாயத்தை விளக்குவதைக் கண்டு விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
பெரியாரைக் கடவுள் மறுப்பாளர், ஹிந்து விரோதி என்று அடையாளப்படுத்தி, பெரியாரை வெறுக்க வைக்க வேண்டும் என்று கருதியவரக்ள் – இன்று அதே பெரியாரைக் காவி உடை தரித்தோரும், பட்டையும், நாமமும் பூசிய மேனிகளும், தங்களுக்கு வழிபாட்டு உரிமையைப் பெற்றுக் கொடுத்தவர் என்று போற்றுவது கண்டு பொருமிக் கிடக்கிறார்கள்.
பெரியாரின் காலத்தில் இருந்ததை விட, இன்றைய தேவை என்னவென்பதை, புதுப் புது திசைகளில் இருந்து தேடிவருவோர் மூலம் அறிய முடிகிறது. காலங்காலமாக வெய்யில் கொடுமையால் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தூரத்துச் சோலையாய்த் தமிழ்நாடு தெரிகிறது. தேடி வருவோருக்கும், நாடி வருவோருக்கும், அந்தச் சோலையை உருவாக்கிய களைப்பறியா விவசாயியின் உழைப்பும், அதைக் காவல்காக்க அவர் உருவாக்கிய கொள்கை வேலியும் நம்பிக்கை தருகின்றன. அந்த வீரிய விதையையும், வேலியின் சிறப்பையும் உணர்ந்து தங்களுக்கும் தேவை என விரும்பிக் கொண்டு செல்கின்றனர். அந்தச் சோலையின் காவல்காரராகவும், விதைப் பண்ணையை வளர்த்தெடுக்கும் தோட்டக்காரராகவும் இருக்கும் திராவிடர் கழகத் தலைவருக்கு, திசையெட்டும் வரும் அழைப்புகள், பெரியாரை அங்கெல்லாம் விதைக்க அழைக்கின்றன.
கல்லூரி படிக்கும் பெண்களின் வீடுகளில், ஜாதி கேட்கப்படாமல் எல்லா மக்களும் நுழையும் கோயில்களில், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து கல்வியால் சிறந்தோர் உலகெங்கும் பயணிக்கும் விமானங்களில், மூளை அழுக்கேறிய குடும்பங்களில் இருந்து வந்த பேரப் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளில் பெரியாரே மிளிர்கிறார். ஆம், கால தேச வர்த்தமானம் தாண்டிப் பெரியாரே ஆள்கிறார்!
