சென்னை, செப். 17– உலகத் தலைவர் அறிவாசான் தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2026) சென்னை பெரியார் திடலில், தமிழர் தலைவர் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தப்பட்டு, சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- அன்னை மணியம்மையர் சிலைக்கு…
- தந்தை பெரியார் சிலைக்கு…
- அய்யா, அம்மா நினைவிடங்களில்…
- தந்தை பெரியார் நினைவிடத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
- அமைச்சர் வன்னிஅரசு
- காங்கிரஸ்
- மனிதநேய ஜனநாயகக் கட்சி
- அம்பேத்கர் அமைப்பு
- இந்திய கம்யூனிஸ்ட்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- த.வெ.க.
- உழைப்போர் உரிமை இயக்கம்
- தந்தை பெரியார் பிறந்த நாள் ‘விடுதலை’ மலர் வெளியீடு
- கையடக்கப் புத்தகம்!
- BAN NEET – கையெழுத்து இயக்கம் தொடக்கம்
- உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (12 தொகுதிகள்)
உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் அரசியல், ஜாதி, மத, பாலின வேற்றுமைகளைக் கடந்து ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்று சம உரிமை சமூக நீதிக்காகப் பாடுபட்டு, தான் வாழ்நாளிலேயே தனது போராட்டத்திற்கான வெற்றியைக் கண்டவர். தமிழினத்தின் பண்பாட்டுத் திருவிழாவாக அறிவுலக ஆசானின் 148ஆம் ஆண்டு பிறந்த நாளை ஆக்கப்பூர்வமாகப் புது உற்சாகத்தோடு கொண்டாடும் வகையில் திராவிடர் கழகத் தோழர்கள் இல்லங்களில் இன்று கழகக் கொடி ஏற்றி, புத்தாடை அணிந்து, கிராமம், ஒன்றிய, நகரப் பகுதிகளில் இனிப்புகள் வழங்கி ஒலி-ஒளி அமைத்து, கொள்கை விளக்கப் பட ஊர்வலம், பாடல்களை ஒலிபரப்பி பெரியார் சிலைக்கு மற்றும் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து கோலாகலமாக தமிழ்நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்னை மணியம்மையர் சிலைக்கு…
திராவிடர் கழகத் தலைமையகமான சென்னை வேப்பேரி பெரியார் திடலில் காலை 10.30 மணியளவில் தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தொடக்கமாக கழகத் தோழர் – தோழியர் பெருந்திரளாக ஒன்று கூடி ஊர்வலமாகச் சென்று வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழக மகளிரணியினர் சார்பில் மாலை அணிவித்து வாழ்த்து ஒலி முழக்கமிட்டனர்.
தந்தை பெரியார் சிலைக்கு…
இதைத் தொடர்ந்து பெரியார் திடலில் அமைந்திருக்கும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தப்பட்டது.
அய்யா, அம்மா நினைவிடங்களில்…
பின்னர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் இணைந்து தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் திருமதி மோகனா அம்மையார், சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் பா.மணியம்மை, க.இறைவி, பேராசிரியர் வீ.கே.ஆர்.பெரியார் செல்வி, பசும்பொன், மகளிர் அணித் தோழர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியார் நினைவிடத்தில்
சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பின்னர் கழகத் தோழர்-தோழியர்கள் பெருந்திரளாக ஒன்று கூடிய நிலையில் கடவுள் மறுப்பு கூறப்பட்டு திரும்பக் கூறிய பின்னர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கீழ்க்கண்ட சமூகநீதி நாள் உறுதி மொழியைக் கூறிட அனைவரும் அதைப் பின்பற்றிக் கூறி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் – யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்! மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.
சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்” என்ற சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தே.செ.கோபால், மாநில கழக இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், மேனாள் நீதிபதி இரா.பரஞ்ஜோதி, சுதா அன்புராஜ், ஆடிட்டர் இராமச்சந்திரன், முனைவர் ஜெயக்குமார், நெய்வேலி வெ.ஞானசேகரன், விழிகள் பதிப்பகம் வேணுகோபால், புலவர் முத்துவாவசி, புலவர் சங்கரலிங்கம் மற்றும் சென்னை மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிரணியினர் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியார் நினைவிடத்தில் திராவிட தொழிலாளரணி, புதுமை இலக்கியத் தென்றல், பெரியார் நூலக வாசகர் வட்டம், பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யம், திராவிடன் நிதி, திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, பெரியார் மருத்துவமனை, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நலச்சங்கம் ஆகியவற்றின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

அமைச்சர் வன்னிஅரசு
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2026) தந்தை பெரியார் சிலைக்கும், நினைவிடத்திலும் தமிழ்நாடு அரசின் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னிஅரசு அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி செல்வம் உள்ளிட்டத் தோழர்களும் மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி மேனாள் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள், காங்கிரஸ் கட்சித் தோழர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மனிதநேய ஜனநாயகக் கட்சி
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் தோழர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கர் அமைப்பு
அம்பேத்கர் அமைப்பின் நிறுவனத் தலைவர் திண்டிவனம் சிறீராமுலு தலைமையில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டாக்டர் இரவீந்திரநாத் அவர்கள் தோழர்களுடன் இணைந்து தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அவர்கள் தலைமையில் தோழர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
த.வெ.க.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் பூக்கடை எஸ்.கே.எம்.குமார் தலைமையில் தோழர்கள் வந்து தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
உழைப்போர் உரிமை இயக்கம்
உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் பெருந்திரளானத் தோழர்கள், தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதேபோல் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு அமைப்பினர் சார்பிலும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தை பெரியார் பிறந்த நாள்
‘விடுதலை’ மலர் வெளியீடு
‘விடுதலை’ மலர் வெளியீடு
ஆண்டுதோறும் வெளியிடப்படும் தந்தை பெரியார் பிறந்த நாள் ‘விடுதலை’ மலரை தமிழர் தலைவர் வெளியிட சமூகநீதி அமைச்சர் வன்னிஅரசு பெற்றுக் கொண்டார்.
கையடக்கப் புத்தகம்!
மக்களின் சிந்தனையைச் செழுமைப்படுத்த, கெட்டுத் தட்டிப் போயிருந்த அடிமைச் சமூகத்தைத் தட்டி எழுப்ப கையடக்க நூலாக “பெரியார் கேட்கும் 148 கேள்விகள்?” நூலைத் தமிழர் தலைவர் வெளியிட மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பெற்றுக் கொண்டார்.
BAN NEET – கையெழுத்து இயக்கம் தொடக்கம்
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் Ban Neet – இந்திய அளவிலான மாபெரும் இணையவழிக் கையெழுத்து இயக்கத்தை ‘நீட்’ எதிர்ப்புக் கூட்டியக்கம் தமிழ்நாடு சார்பில் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று (17.9.2026) தந்தை பெரியார் நினைவிட நுழைவு வாயிலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தார். இதில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சமூகநீதித் துறை அமைச்சர் வன்னிஅரசு, சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி மற்றும் பலர் கையெழுத்திட்டனர்.
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (12 தொகுதிகள்)
தந்தை பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை விரிவாக அறிய உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (12 தொகுதிகள்) ஆசிரியர் சாமி.சிதம்பரனார் (முதல் தொகுதி), கி.வீரமணி (11 தொகுதிகள்). நூல்களை தமிழர் தலைவர் வெளியிட பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் அவர்கள் ரூ.3000 கொடுத்துப் பெற்றுக் கொண்டார்.
