தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி; அவர் மறைந்த கடந்த 52 ஆண்டு காலத்திலும் சரி, அவரது பிறந்த நாள் விழா என்பது வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், செப்டம்பர் 17 அன்று மட்டுமல்ல; ஆண்டு முழுமையும் கொண்டாடப்படுவதும் உண்டு.
தந்தை பெரியார் அவர்களே அத்தகு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, “பிறக்காத கற்பனைக் கடவுள்களுக்கே ராமநவமி என்றும், கிருஷ்ண ஜெயந்தி என்றும் கொண்டாடும்பொழுது, உண்மையிலேயே பிறந்த எனது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது என்ன தவறு?” என்று வினா எழுப்புவார்கள்.
தந்தை பெரியார் பிறந்த நாளில் நடைபெறும் விழாக்களில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பெருமக்கள் எல்லாம் கலந்து கொள்வதுண்டு. பட்டை போட்டவர்களும், நாமதாரிகளுமான பெரிய பதவிகளில் இருக்கும் தமிழர்களும் பங்கேற்று உரையாற்றுவதுண்டு.
அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் ஒன்றைச் சொல்லுவதுண்டு:
“அய்யா, மன்னிக்கவும்; எனக்குக் கொஞ்சம் கடவுள் நம்பிக்கை உண்டு” என்று தாழ்ந்து பணிந்து சொல்வதுண்டு.
கடவுள் நம்பிக்கை என்பது மன்னிக்கப்பட வேண்டிய குற்றமான செயல் என்கிற அளவுக்குப் படித்த பக்திமான்களிடத்திலேயேகூட தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதுதான் இதன் பொருள்.
தந்தை பெரியார் பிறந்த நாள் என்று சொன்னாலும், அவை கொள்கைப் பிரச்சார நிகழ்ச்சிகளாகும்.
கொள்கையில் உறுதியான தலைவர்
தந்தை பெரியார் அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாளில் 80 பரிசுப் பொருள்களைக் கொடுத்தனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தந்தை பெரியார் சொன்ன கருத்து, அவர்தம் தனித்தன்மைக்கான – அவருக்கே உரித்தான முத்திரையாகும்.
“இதே தஞ்சையில், இதே இடத்தில் காங்கிரஸ் காரனாக, நீதிக்கட்சிக்காரனாக, சுயமரியாதை இயக்கத்துக்காரனாக, திராவிடர் கழகத்துக்காரனாகப் பேசியிருக்கிறேன்.
சுயமரியாதைப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது கடும் எதிர்ப்புகள் இருக்கும். கல்லால் அடிப்பார்கள். அழுகிய முட்டை வீச்சுகள் நடைபெறும். கூட்டத்தில் பாம்பை விடுவார்கள். அப்படிப்பட்ட இந்த ஊரில் எனது பிறந்த நாள் என்று சொல்லிப் பரிசுப் பொருள்களைக் கொடுக்கின்றனர் என்றால், இதன் பொருள் என்ன?
நான் என் கொள்கையில் பல்டி அடித்துவிட்டேனா? அல்லது உங்களுக்குப் புத்தி வந்திருக்கிறது என்று காட்டிக் கொள்கிறீர்களா?” என்ற கேள்வியை எழுப்பியபோது, கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.
அடுத்து சொன்னதுதான் முக்கியமானது. சிறப்பானதும்கூட!
“என்னைப் பொருத்தவரை, என் கொள்கையில் நான் தீவிரமாகத்தான் மேலும் மேலும் இருந்து வந்திருக்கிறேன். அதில் மாற்றமில்லை. என்பதால், உங்களுக்குப் புத்தி வந்திருக்கிறது என்று காட்டிக் கொள்ளத்தான் இந்தப் பரிசுப் பொருள்களைக் கொடுத்துள்ளீர்கள்” என்று பேசினார்கள்.
இப்படியான கருத்தைச் சொல்லக்கூடிய ஒரு தலைவரை உலகில் இதுவரை கண்டதுண்டா?
தனக்குப் பாராட்டு கிடைக்கிறது; பரிசுகள் குவிகின்றன என்றால், அதற்கேற்றாற்போல், சூழலுக்கு ஏற்ப விழா ஏற்பாட்டாளர்களின் உச்சிக் குளிரப் பேசுவதுதான் வழமை.
ஆனால், தந்தை பெரியார் அவர்களோ எதையும் கொள்கை எடைமேடையில் போட்டுநிறுத்துப் பார்க்கும் ஒப்பாரும் – மிக்காரும் இல்லாத தலைவர்களுக்கெல்லாம் தலைவராவார்.
தமிழர்களின் வாழ்வில் – தந்தை பெரியார்
தந்தை என்று அவரை மட்டுமே எந்தத் தரப்பினரும் கூறுவர்.
கடவுள் மறுப்புக் கொள்கையைச் சீரணித்துக் கொள்ள முடியாதவர்கள்கூட, தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதிக் கொள்கையின் காரணமாகத்தான், அதற்காக அவர் பிரச்சாரம், போராட்டங்களை நடத்தியதன் விளைவுதான், பார்ப்பனரல்லாதாரால் படிக்க முடிந்தது; உத்தியோகப் படிக்கட்டுகளை மிதிக்க முடிந்தது என்ற நன்றி உணர்ச்சியின் காரணமாக, பெரியாரை ஒவ்வொருவரும் தங்களை வாழ வைத்த தந்தையாகப் போற்றுகிறார்கள்.
தந்தை பெரியாரின் கைமாறு கருதாப் பெருந் தொண்டால் பலன் பெறாத ஒரே ஒரு தமிழன் குடும்பத்தைக் காட்ட முடியுமா? என்று சவால் விட்டே கேட்க முடியும்.
தந்தை பெரியார் அவர்கள் சமுதாயத்தைத் தன் பக்கம் வைத்திருந்தால், அரசியலும் ஆட்சியும்கூட அவரது கொள்கைக்கு எதிராக நடைபோட முடியாது என்பதுதான் தமிழ்நாட்டின் யதார்த்த நிலையாகும்.
ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததை எதிர்த்து, தந்தை பெரியார் தலைமையில் நாடே கிளர்ந்து எழுந்தபோது, அவர் ஆட்சியை விட்டே விலகி ஓட நேர்ந்தது என்பது நினைவிருக்கட்டும்.
தந்தை பெரியார் அவர்களின் ஆதரவோடு முதலமைச்சர் ஆன காமராசர் அவர்கள் ‘பச்சைத் தமிழர்’ ஆனதும், ‘கல்வி வள்ளல்’ ஆனதும், ‘கர்ம வீரர்’ ஆனதும் எந்த அடிப்படையில் என்பதை நாடே அறியும்.
“நல்ல பெயர் வைக்க வேண்டுமா?” என்று கேட்டு, ‘காமராசர்’ என்று பெயர் சூட்டினார் தந்தை பெரியார்.
அதேபோல, அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில், “ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை” என்றாரே!
மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள், “இது சூத்திரர்களால் சூத்திரர்களுக்காக ஆளப்படும் அரசு” என்று சட்டப்பேரவையில் பிரகடனப்படுத்தியதோடு அல்லாமல், இந்த அரசே பெரியார் அரசு என்று பெருமையுடன் துணிவோடு குறிப்பிட்டார்.
மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு இடத்தை ஒதுக்கி, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங், “தந்தை பெரியார் கனவு நனவாயிற்று” என்று சொல்லவில்லையா?
சட்டமன்றப் பக்கம் செல்லாத – ஓட்டுக் கேட்காத ஒரு தலைவருக்கு ஆட்சிகள் அர்ப்பணிக்கப்படுவதும், பிரதமரால் அங்கீகரிக்கப்படுவதும் சாதாரணமானது தானா?
தந்தை பெரியார் நினைத்திருந்தால், அரசியலில் எந்தப் பதவிக்கும் எட்டியிருக்க முடியும்.
“அந்தப் பணிக்கு ஏராளம் பேர் உள்ளனர். நான் செய்யும் இந்தச் சமூகப் பணிக்கு என்னை விட்டால் வேறு நாதியில்லை” என்றாரே – அது நூற்றுக்கு நூறு உண்மையே.
ஆம், பெரியார் பதவிக்குப் போகாமல் இருந்ததால் தான் தமிழர்கள் எல்லாம் பதவி பெற்றார்கள்.
தந்தை பெரியார் கொள்கைகள் தமிழ்நாட்டையும் தாண்டி, இந்தியா முழுவதும் தேவைப்படும் ஒரு காலகட்டத்தில் நாடு இருக்கிறது. மதவாத அச்சுறுத்தல் தாண்டவமாடுகிறது. இந்த நோயை ஒழிக்கும் ஒரே மருந்து தந்தை பெரியாரியல் கோட்பாடுதான்.
ஆம், தந்தை பெரியார் கொள்கை இந்தியா முழுவதும் புதிய வீச்சில் பரவியிருக்கிறது என்பது மட்டும் உறுதி! உறுதியிலும் உறுதி!!
– மு.வேலவன்
