– பா.வீரமணி
தமிழ்நாட்டின், ஏன் இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களின் விழிப்புணர்வுக்கும், சமத்துவத்திற்கும், முன்னேற்றத்திற்கும் சிந்தனை செலுத்தி எழுத்திலும், பேச்சிலும், சமூகச் செயற் பாட்டிலும் போராடிய தனினிகரற்ற பெரும் போராளிதான் தந்தை பெரியார். இந்தியாவில் தோன்றிய சமுதாயச் சிந்தனையாளர் பலர், ஒட்டுமொத்த சமுதாயத்தை நோக்கியே சிந்தித்துள்ளனர். அவர்களிள் சிலர் பெண்ணினத்தின் மீதும் சிந்தனை செலுத்தியுள்ளனர். ஆனால், அவர்களும் பெண்ணினத்தின் அனைத்து நிலைகளைப் பற்றியும் சிந்தித்தார்கள் என்று கூற முடியாது. ஆனால், தந்தை பெரியார் பெண்களின் அனைத்து நிலைகளைப் பற்றியும் சிந்தித்தவர். களமாடியவர்; போராடியவர். கவிஞர்கள் பலர் பெண் முன்னேற்றம் குறித்துச் சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள்; சிந்தனையாளர்கள் பலர் ஆழமாக எழுதியிருக்கிறார்கள்; எனினும், அவர்களின் சிந்தனைகள் ஒரு வரையறை யுடன் முடிந்து விடுகின்றன. ஆனால், தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கு வரையறை இல்லை. அவரின் சிந்தனைகள் வரையறையைத் தாண்டிய வடிவம் கொண்டது. அவ் வடிவமும் ஓரளவுடன் நின்று விடுவது அன்று: அது காலத்திற்கேற்ப விரிவடையும் சால்பு கொண்டது. இயல்பு கொண்டது.
தந்தை பெரியாரின் சிந்தனைகள் இப்படி விரிவடைவதற்குக் காரணம் என்ன? அவர் வெறும் சிந்தனையாளர் மட்டுமல்லர்: நாள்தோறும், மணிதோறும் களமாடிய போராளி. மக்களிடம் போய் களமாடியதால் அவர்களின் அனைத்து நிலையையும் அவர் அறிந் திருந்தார்; அதனால் பெண்களின் அனைத்து நிலைகளைப் பற்றியும் ஆழமாகச் சிந்தித்துள்ளார். எப்பொருளிலும் ஊடுருவி உள்நுழைந்து உண்மை காணும் தத்துவஞானி அவர். அதனால்தான்அவர் எல்லாவற்றிலும் ஆதியையும் அந்தத்தையும் தேடும், காணும் அறிவியல் சிந்தனையாளராக விளங்கினார்.
இந்த அறிவியல் சிந்தனையே அவரைப் பெண்களின் பல நிலைகளைப் பற்றி ஆழமாகவும் அகலமாகவும் சிந்திக்க வைத்துள்ளது. அதனால்தான் அவரைத் தோழர் தா.பாண்டியன் ‘சமுதாய விஞ்ஞானி’ என்று புகழாரம் சூட்டினார். அந்தப் புகழாரம் மிகச் சரியானது என்ற தந்தை பெரியாரின் சீரிய சிந்தனைகள் காலந்தோறும், இதுகாறும் மெய்ப்பித்துக் கொண்டே இருக்கின்றன. அப்படி, மெய்ப்பித்துக் கொண்டிருப்பதில் ஒன்றை மட்டும் இங்கு நோக்குவோம்.
சென்னையில் 1933ஆம் ஆண்டு தைத் திங்களில் பெண்களே நடத்திய பெண் மாநாடு நிகழ்ந்துள்ளது. அம் மாநாட்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி யிருக்கிறார்கள். அத் தீர்மானம் எத்துணைப் பிழையானது, எத்துணை மூடத்தனமானது என்பதை அவர் விளக்கி விமர்சித்திருப்பதுதான் முக்கியமானது. நற்போக்கும், முற்போக்கும் கொண்ட சிந்தனையாளர்கள் கூட, சமுதாயப் பழக்கம், மரபு என்ற எளிதாகக் கடந்து சென்றுவிட்ட ஒன்றைத் தந்தை பெரியார் உள்ளவாறு உணர்ந்து, மறுத்துரைக்கின்றார். அம் மறுப்பு உண்மையை அடிப்படையாகக் கொண்டது. அவர் மானுடப் பற்றுக் கொண்ட பகுத்தறிவாளர் என்பதால் அம் மறுப்புரையைத் தக்க நேரத்தில் நிகழ்த்தியுள்ளார். அதுவும் உடனுக்குடன் நிகழ்த்தி உள்ளார். இந் நிலையே அவரின் அறிவு மாட்சியைக் காட்டுகிறது எனலாம். சரி, அத் தீர்மானம்தான் எனன? அதனையும் நாம் அறிய வேண்டும் அன்றோ! அதனைக் கீழே காணலாம.
சென்னையில் கூடிய பெண்கள் சங்கத்தில், பெண்கள் நலனுக்கென்று, சில பெண்கள் கூடி, சில தீர்மானங்கள் செய்திருக்கிறார்கள் என்பதாகத் தெரிய வருகிறது. அவற்றின் ஒரு தீர்மானமானது, இந்திய ஸ்தீரி ரத்தினங்கள் நளபாக அடுப்பும் சப்ர மஞ்சக் கட்டிலும், பிரசவ ஆஸ்பத்திரியும், தவிர வேறு இடத்திற்குத் தகுதியானவர் அல்ல என்கின்ற மனப்பான்மையைக் காட்டுவதாய் இருக்கின்றது. அதாவது, சிறுவர் பாடசாலைகளில் சிறுமிகளுக்கு அவசியமாக வேண்டப்படும் சங்கீதம், கோலாட்டம், பின்னல், குடித்தன சாஸ்திரம், இவைகளைப் போதிக்க வேண்டியிருப்பதால் சிறுவர் பாடசாலைகளையும், சிறுமிகள் பாடசாலைகளையும் ஒன்றாகச் சேர்க்கக் கூடாது” என்கிறார்கள்.
‘குடிஅரசு’ – தலையங்கம் – 29.1.1933
சிறுவர், சிறுமிகள் சேர்ந்து படிப்பதை அப் பெண்கள் மாநாடு கண்டிக்கிறது. அதனை மறுக்கிறது, அம் மாநாட்டில் கலந்துகொண்ட பெண்கள் மெத்தவும் படித்தவர்கள்; கல்வியாளர்கள்; பல்வேறு பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருப்பவர்கள்; இப்படிப் படித்த பெண்கள் மட்டுமல்லாமல், ஆண் கல்வியாளர்கள் கூட இந்தக் கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள்; காரணம், மரபு வழிச் சிந்தனையிலிருந்து அவர்கள் மாறுவதில்லை.
பழைமையைப் போற்றுவதுதான் அவர்களின் இயல்பாக இருந்துள்ளது. மாற்றத்தை, முன்னேற்றத்தை, காலச் சூழ்லை அவர்கள் அறிந்து கொள்வதில் சிறிதும் நாட்டம் செலுத்துவதில்லை. இந்தப் பழமைப் பித்துதான் அவர்களைக் காலத்துக்கேற்றுச் சிந்திக்கத் தடை போடுகிறது. பழைமையே பெருமை என்ற அவர்களின் மனோநிலை நின்று விடுகிறது.
ஆண் – பெண் சேர்ந்து படிப்பது பல இடங்களில் உறுதியாகி விட்டாலும், கல்வியாளர்களில் பெரும்பாலோர் அதனை விரும்புவதில்லை. இந்நிலை இப்போதும் உள்ளது. இந்த மனோநிலை கொண்ட சூழலில்தான் தந்தை பெரியார் அக் காலத்திலேயே ஆண் – பெண் கூட்டுக் கல்வியை வரவேற்றதுடன் அக் கல்விதான் நிலைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆண் – பெண் சேர்ந்து படிப்பது பிறநாடுகளிலும் தவறென்று கருதப்பட்டது. பின்னர் மாறிவிட்டது. இது பற்றிய பல கல்விக் குழுக்கள் ஆய்வுசெய்த பின்னரே ஆண் – பெண் கூட்டுக் கல்வி சிறப்பானது என்பது நிலைநாட்டப் பெற்றது. ஆனால், இந்தக் கல்விக் குழுக்களின் ஆய்வுக்கு முன்னரே, தந்தை பெரியார் தம் சிந்தனைப் பட்டறையிலிருந்து அதனை அறிவித்திருப்பது அவரின் தொலைநோக்குப் பார்வையையே காட்டுகிறது. அதுதான் அவரது சிந்தனையின் பலம்.
ஆண் – பெண் கூட்டுக் கல்விக்கு (Co-Education) மறுப்பு தெரிவிக்கும் அம் மாநாடு, சிறுமியர்கள் கோலாட்டம், பின்னல், சமையற்கலை போன்றவற்றைக் கற்றுக் கொள்ள இருப்பதால் கூட்டுக் கல்வி வேணடாம் என்கிறது அம் மாநாடு. இதனைத் தந்தை பெரியார் அறிவுப்பூர்வமாக மறுப்பதுடன், கடும் சாடலுடனும் மறுக்கிறார். பெண் குழந்தைகளுக்கு ஆடல், பாடல், கோலாட்டம், பினனல் போன்றவை தேவைதான். ஆனால், அவை மட்டும் போதுமானவை அல்ல என்பதுதான் தந்தை பெரியாரின் கொள்கையாகும். மற்றும், மகளிர் சமையலறை, பிள்ளைப்பேறு போன்றவற்றோடு தம்மைச் சுருக்கிக் கொள்ளக் கூடாது என்றும், அவர்களும் ஆண்களைப் போல் எல்லாப் பணிகளிலும் ஈடுபட்டு முன்னேற வேண்டும் என்கிறார். மேலைநாடுகளில் அம் முன்னேற்றம் நாளும் முன்னேறிக் கொணடிருக்கும்போது, தமிழ்நாட்டுப் பெண்கள் தம்மைச் சுருக்கிக் கொண்டு பேதைகளாக வாழ்வது எப்படிச் சரியாகும் என்கிறார். மேலும், இப்பேதைகளால் அறிவார்ந்த பிள்ளைகளைப் பெற்று நன்முறையில் எப்படிப் பேணிக் காக்க முடியும் என்றம் வினா எழுப்புகிறார்.
பெண்களுக்கு அறிவும், துணிவும், தன்னம் பிக்கையும் ஏற்பட வேண்டி, அப்போது உலக அளவில் சிறந்து விளங்கிய பெண்களைக் குறிப்பிட்டுத் தெளிவுப்படுத்துகிறார். குறிப்பாக, எலிநார் மிச்சேல், மிஸ் ஏமி ஜான்சன், ஜாய்ஸ் கூப்பர், மிஸஸ்கார்னவ், மிஸஸ் ஸ்டூவர்ட், பெட்டி கார்ஸ்டேர் போன்றோர் ஆண்களைப் போல் ஆகாய விமானத்தை இயக்குவதிலும், கப்பல்களை இயக்குவதிலும், கடினமான விளையாட்டுகளில் ஈடுபடுவதையும், துருக்கியில் பெண்கள் கோஷாவை ஒதுக்கி, காவல் துறையில் உயர் பணியில் இருப்பதையும், மற்றும் ரஷ்யாவில் மகளிர் ரயில் ஓட்டுவதையும், பெரிய தொழிற்சாலைகளுக்குத் தலைவர்களாக இருப்பதையும், சட்டிக் காட்டுகிறார். அந்நாட்டில் ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்யும்போது அங்குச் சமத்துவமும், வளர்ச்சியும் எற்படுகின்றன. அக் காலத்தில் ரஷ்யாவில் 17 கோடி மக்கள் தொகையில் சரி பாதியினரான பெண்களால் உற்பத்தி வளர்ச்சி ஏற்பட்டிருக்க, இந்தியாலுள்ள 34 கோடி மக்களில் சரிபாதியினரான பெண்கள் வெறும் கோலாட்டத்திலும், பின்னல் வேலையிலும் ஈடுபட்டுச் சமையலறையோடு சுருக்கிக் கொண்டால் நம் நாட்டில் எப்படி வளர்ச்சி ஏற்படும்? என்கிறார். வேலைகளில் பொறுப்புகளில் ஆண்களுக்கேற்ற வேலை என்றும், பெண்களுக்கேற்ற வேலை என்றும் எந்நிலையிலும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்கிறார். அது குறித்து அவர் எழுதியிருப்பதைச் சற்று நோக்குவோம்.
“ஆண்களுக்கேற்ற கலை வேறு; பெண்களுக்கேற்ற கலை வேறு என்று சொல்லுவார்களேயானால், அந்தப் புத்தியைத்தான் என்ன செய்தாவது ஒழிக்க வேண்டும் என்று நாம் சொல்லுகின்றோம். அந்தப் புத்தியின் உணர்ச்சிதான் பெண்களைக் கும்மி, கோலாட்டம், ஆடல், பாடல், குடும்ப சாஸ்திரம் ஆகியவை வேண்டுமென்று சொல்லுகின்றது என்று சொல்லுகின்றோம்.”
(‘குடிஅரசு’ – தலையங்கம் – 29.1.1933)
ஆண்களுக்குரிய கலைகள் வேறு; பெண்களுக்குரிய கலைகள் வேறு என்று காலங்காலமாகப் பழைமை யிருட்டைப் பேணி வருபவரைச் சாடுகிறார். இந்தப் பழைமைப் பித்துதான் அவர்களைக் கோலாட்டத் திற்கும், சமையலுக்கும் ஏற்றவர்கள் என்று கூற வித்தாக அமைந்திருக்கிறது என்கிறார். இதில் ஆண் மக்களைச் சாடுவதோடு, பல்லாயிரம் ஆண்டுகளாக பெண் மக்களை காலந்தோறும் அடிமைப் படுத்திவரும் வேதம், மனுதர்மம், கீதை போன்ற ஆரிய நூல்களின் உள்ளடக்கத்தையும் அடையாளம் காட்டிச் சாடுகிறார். பெண் அடிமைக்கு அவைதான் வேர் என்கிறார். அவற்றின் தாக்கமே இன்றைய நிலை என்கிறார்.
“பெண்கள் முன்னேற்றத்திலும் கூடப் பார்ப்பனியப் பேய்த்தன்மை புகுந்து நாட்டைப் பாழாக்குகிறதென்றால், பிறகு அவர்களுக்கு வேறு என்னதான் கதி என்பது நமக்கு விளங்கவில்லை. ஏனெனில் பச்சைப் பார்ப் பனியத்தில்தான் பெண்களுக்கு இந்த யோக்கியதைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
“குடிஅரசு” – 19.1.1933
வேதம், உபநிடதம், மனுதர்மம், கீதை, பின்னர்த் தோன்றிய இந்து சட்ட நூல்கள், பராசரமத்துவன், பிரகஸ்பதி மற்றும் மதனபுரி ஜாதகம் போன்ற அனைத்து நூல்களும், பெண்ணை ஒரு மனிதப் பிறவி என்று கருதாமலேயே மிருகத் தன்மையில் மதிப்பிட்டு அடிமைப்படுத்தியுள்ளன. இந்த இழிநிலையை, அவல நிலையை, சமூக அநீதியை எண்ணித்தான், பார்ப்பனிய நூல்களைக் குறித்து மார்க்சிய ஆய்வாளரான பிரேம்நாத் பசாஸ் குழுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்..
“பார்ப்பனர்கள், சமூகத்தின் குரல்வளையைக் குறுக்கினார்கள்; அறிவு வளர்ச்சியைத் தடை செய்தார்கள்; அறியாமையை ஊட்டி வளர்த்தார்கள்; இச் சாதனைகளைச் செய்து முடித்த பார்ப்பனர்கள், வேத காலத்துக்குப் பிந்தைய நூற்றாண்டுகளில் பழைய கற்பனைக் கதைகளை உண்மை உரமிட்டு வளர்த்தார்கள். இவையெல்லாம் இன்றுவரை தொடரு கின்றன. அறநெறியற்ற சிந்தனைகளுக்கு வழி வகுக்கக் கூடிய ஏராளமான மாற்றங்களை சம்கிதைகளில் இடைச் செறுகல்கள் செய்தார்கள்.”
(இந்திய வரலாற்றில் கீதையின் பங்கு – பக்.67)
இக் கூற்றையும், தந்தை பெரியாரின் கூற்றையும் ஒப்பிட்டு நோக்க வேண்டும். பஸாஸ் கூறுவதற்கு அரை நூற்றாண்டுக் காலத்திற்கு முன்பே தந்தை பெரியார் பார்ப்பனியத்தின் பேராபத்தை அடையாளம் கண்டு குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கது. இங்கு மற்றொன்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 1935ஆம் ஆண்டில் நடந்த பெண்கள் மாநாட்டின் செய்தியை எந்த அரசிய்ல் தலைவரும் விமர்சனம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால், இதில் தந்தை பெரியாரே உடனுக்குடன் செயற்பட்டுள்ளார். இப்படி அனைத்திலும் வேகமாக, விவேகமாக வினையாற்றுபவரே அவர்.
கோலாட்டம், பின்னல், சமையல் போன்றவற்றில் ஈடுபடுவோர்களில் விஞ்ஞானிகள் உண்டா? நோபல் பரிசு பெற்றவர் உண்டா? மேலை நாடுகளில் 1933 வரை பெண்கள் நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். இப் பரிசு 1901ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுள்ளது. 1903இல் மேரி கியூரி பவுதிகத்தில் நோபல் பரிச பெற்றுள்ளார். அவரே மீண்டும் 1911இல் வேதியியலிலும் நோபல் பரிசு பெற்றுள்ளார். 1901 முதல் 1925 வரை 67 பெண்கள் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள்.
உலகிலேயே மிக இளம் வயதில் அதாவது 17 வயதில் மலாலா என்ற பெண் வரலாற்றுத் துறையில் நோபல் பரிசு பெற்றுள்ளார். இனி, வருங்காலத்தில் எண்ணற்ற பெண் மக்கள் அப் பரிசைப் பெறுவார்கள். ஆண் மக்களைக் காட்டிலும் பெண்களே அறிவில் சிறந்தவர்கள் என்கிறார் அமர்த்தியா சென்.இன்று உலகின் பல நாடுகளில் பெண்கள் தலைமை அமைச்சர்களாக விளங்குகிறார்கள். மேலும், அந்த எண்ணிக்கை கூடும். அந்த முன்னேற்றத்தை எண்ணிச் செயல்பட்டவர்தான் தந்தை பெரியார். கோலாட்டம், பின்னல் வேலை, சமையல் வேலை என்னும் வேலைகளைச் சிறந்த வேலைகளாகக் கருதினால், தலைமை அமைச்சர்களாக, விஞ்ஞானிகளாகப் பெண்கள் வருங்காலத்தில் விளங்க முடியுமா? என்பதுதான் தந்தை பெரியாரின் ஆதங்கம். இப்படிப் பெண் மக்களின் அனைத்து வளர்ச்சிக்கும், அறிவுறுத்தியவர்தான், போராடியவர்தான் அவர். கீழுள்ள குறிப்பை நோக்கினால் அவ்வுண்மையை உணரலாம்.
“பெண்களும் ஆண்களைப் போல் உடல் வலிமையிலும் சிறப்படைய வேண்டும். தேகப் பயிற்சி முதலிய பழக்கங்களைப் பெற்றிருக்க வேண்டும். தங்களை மானப்பங்கப் படுத்த நினைக்கும் அறிவற்ற, வெறிகொண்ட ஆண்களை எதிர்த்துத் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும்.
சமயம் நேரும்போது படை வீரர்களாகச் சேர்ந்து பகைவர்களை எதிர்க்கக் கூடிய சக்தி பெண்களுக்கு இருக்க வேண்டும்.”
(‘குடிஅரசு’ – 17.7.1932)
இப்படிப் பெண்களின் அனைத்து வளர்ச்சியிலும் சிந்தனை செலுத்திப் போராடிய போராளிதான் அவர்.
“பெண்ணடிமை தீரும்மட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்ந்துவரல் முயற் கொம்பே”
– புரட்சிக்கவிஞர்
