ஊன்றிப் படித்து, உண்மையைப் பரப்புங்கள்! ‘‘பெரியார் என்ன செய்தார்? – அவருக்கு ஏன் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம்?’’

இணையவழி கையெழுத்து இயக்கம்

கி.வீரமணி

ஒப்பற்ற சுய சிந்தனையாளரும், 95 ஆம் ஆண்டில் முதுமைக் கொடுமையின் நோய்களையும் பொருட்படுத்தாது, புறந்தள்ளி, மரணம் அவரைத் தொடுவதற்கு மூன்று நாள்கள் முன்புவரை கூட, தாள முடியாத வலியுடன், முக்கி முனகிய நிலையில்கூட, சுயமரியாதை முழக்கமிட்டவர்; ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தந்தை பெரியார் அவர்கள்!

அவரது 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா உலகமெங்கும் கொண்டாடப்படுவது கண்டு, இன்னமும் வஞ்சக வந்தேறிகளான ஆரியம் எரிச்சல் அடைந்து, சில்லறை எதிர்ப்புகளைத் தன்னால் முடிந்தவரை செய்து, வழக்கம்போல், மூக்குடைந்து மூலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. சில கூலிப் பட்டாளங்களையும், காசு பெற்று காலித்தனங்களைச் செய்வோரும் அரசு இயந்திரத்தி்ல அதிகாரமயமாகி விட்ட வாய்ப்பின்மூலம், கழகத்தின் சுயமரியாதை உரிமைப் பிரச்சாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏகடியம் பேசியும், தன் இயல்பான வன்ம புத்தியை மாற்றிக் கொண்டுள்ள, ஒருபோதும் ‘மாறவே மாட்டோம்’ என்று வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம், விபீஷண, சுக்ரீவ, அனுமன் பட்டாளத்தை விட்டுக் கூச்சல் போடுவது, எலலாம் செய்கிறார்கள்!

ஆனால், தந்தை பெரியார் விழா, ஆண்டுக்கு ஆண்டு வெளிச்சங்களோடு மேலும் மேலும் சிறப்பாகவே நடைபெறுகிறது! காரணம், காலத்தை வென்ற தத்துவத்தின், சரித்திரப் புகழ் வாய்ந்த சமூக விஞ்ஞானத்தின் மறுபெயர்தான் பெரியார் என்பது!

அவர் ஒரு கட்சித் தலைவரல்ல; மாறாக, விடியல் தேவைப்படும் உலக மக்கள் அனைவருக்கும் பயன்படும் ஒரு மாமருந்து! தத்துவக் கொள்கை கலங்கரை வெளிச்சம்!

அவர் கண்ட சுயமரியாதை இயக்கம் ஒரு நூற்றாண்டில், பல நூற்றாண்டுகளை அடக்கிய பழைமை, வைதீக, ஸநாதன நடைமுறைகளை அகற்றிய மண்; சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் அவை எதிரானவை என்பதால், அவற்றை ஒழித்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதில் இமாலய வெற்றி பெற்றிருக்கிறது!

உலகில் எங்குமில்லாத பிறவி பேதமான ஜாதி – தீண்டாமையை எதிர்த்து, சமத்துவ, சம உரிமைச் சமுதாயத்தை உருவாக்க ஜாதி ஒழிந்த ஒரு புதிய சமுதாயத்தை உண்டாக்க, அவரது சுயமரியாதை இயக்கக் கொள்கைப் பரப்புதல்களும், போராட்டங்களும் வியக்கத்தக்க புதிய விளைச்சல்களைத் தந்துள்ளன!

ஒரு நூற்றாண்டில் – பலத்த எதிர்நீச்சல்களுக் கிடையே சில மாற்றங்கள், இதோ:

சிறப்புக் கட்டுரை

  1. ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலில் உள்ள ஒரு செய்தி.

‘தேசப் பிதா’ என்று அழைக்கப்பட்ட ‘மகாத்மா காந்தி’ 1919 ஆம் ஆண்டு தஞ்சையில் தங்கியிருந்தபோது, அவரை கே.எஸ். சீனிவாச பிள்ளை உள்ளிட்ட தஞ்சை நகரின் முக்கியப் பிரமுகர்களும், வழக்குரைஞர்களும் சந்திக்கிறார்கள். சுயமரியாதை  இயக்கத்தினால் –  பார்ப்பனர்களே அல்லாத இயக்கத்தினால் ஏற்பட்டுள்ள தாக்கம் பெருகி வருகிறது. எனவே, நீங்கள் தலையிட்டு, அதற்கு ஒரு தீர்வு – அவ்விரு சமூகங்களுக்கும் இடையே ஒரு நல்ல தீர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்று அந்தத் தூதுக்குழு காந்தியாரிடம் வேண்டுகோள் விடுக்கிறது.

அதற்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?

‘‘முன்பெல்லாம் நான் தமிழ்நாட்டிற்கு வந்தபோது, சென்னையில் சிறீமான் சீனுவாசய்யங்கார் வீட்டுத் திண்ணையில் (மயிலாப்பூர்) தான் தங்குவேன். ஆனால், இப்போது அவர்கள் வீட்டுக்குள் செல்லும் நிலை உள்ளது; எனது மனைவி கஸ்தூரிபாய், சீனுவாசய்யங்காரின் வீட்டு அடுப்பங்கரை வரை செல்லுகிறார்’’ என்று எளிதான பதில் கூறினார்.

இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய அரிய செய்தி என்ன தெரியுமா?

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றி, அதன் தீவிர ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை ஒழிப்புப் பிரச்சாரம் மூலமே இந்த ‘அமைதிப் புரட்சி’ ஏற்பட்டுள்ளது என்பதுதான்!

‘பளிச்சென்று’ விளங்கும்படிச் சொல்ல வேண்டுமானால்,

சுயமரியாதை இயக்கம் தோன்றி, பிரச்சாரம் செய்வதற்கு முன்னால் இருந்த நிலை மாறுவதற்கு, வருண தர்ம முறை, ‘வைசிய’ ஜாதியினர் (பிராமணருக்கு இரண்டுபடி கீழே உள்ள படி நிலை ஜாதி) உயர்ஜாதி ‘பிராமண’ சீனுவாசய்யங்காரின் வீட்டுத் திண்ணையிலிருந்து உள்ளே சென்று புழங்கும் அளவுக்கு உரிமை வருவதற்குக் காரணமாகிறது என்ற அரிய உண்மை அல்லவா!

தேசியம் பேசி, வர்ண பேதத்தைக் காத்தக் கொடிய நிலை மெல்ல மெல்ல மாறி, கஸ்தூரிபாய் காந்தி அவர்களுக்கும்கூட சீனுவாசய்யங்காரின் வீட்டு அடுப்பங்கரை வரை செல்லும் உரிமையை வாங்கித் தந்தது என்பதுதானே!

இந்த அமைதிப் புரட்சியை ஏற்படுத்திய தத்துவத்தின் பெயர்தான் பெரியார் – சுயமரியாதை இயக்கம்! மறுக்க முடியுமா, தோழர்களே?

  1. சட்டம் படித்துப் பிரபல வழக்குரைஞர்களாக ஆகியவர்களுக்குத் தான் அன்றும், இன்றும் அரசியலா? பொதுவாழ்க்கையா? என்பதை மீறிய தனித்த மரியாதை, மதிப்பு என்ற நிலை உள்ளது!

காரணம், அவர்கள் நீதிக்காக வாதாடி, வழக்கில் நீதி பெற்றுத் தருபவர்கள். இந்தப் பெருமை என்ற அத்தொழிலின் அடையாளமாக உளளது அன்றும், இன்றும்!

அப்படிப்பட்ட வழக்குரைஞர்களைக் கூட விட்டு வைக்காது  ஜாதியும், தீண்டாமையும் ‘‘அர்த்தமுள்ள ஹிந்து மதத்தின்’’ பிரிக்கப்பட முடியாத அம்சங்கள் என்பதால், அவர்கள் சமத்துவத்துடன் மதிக்கப்பட, அழைக்கப்பட முடியாத ஒரு கொடிய சமூக நிலை இருந்தது.

சிவகங்கை வக்கீல்கள் சங்கத்தின் (Bar Association) வைர விழா கொண்டாட்டத்தின்போது வெளியிட்ட சிறப்பு மலர் ஒன்றில், ஒரு முக்கிய செய்தி  – அந்த நீதிமன்றத்தில், வழக்குரைஞராக இருந்து பின்பு, சட்ட செயலாளராகி, தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தலைவரான திரு.ஆர்.ராமசுப்ரமணியன் எழுதிய ஒரு கட்டுரையில், அந்த வழக்குரைஞர்கள் சங்கக் கட்டடத்தில் பார்ப்பன வழக்குரைஞர்களுக்கு ஒரு தனி தண்ணீர்ப் பானை, பாரப்பனரல்லாதாருக்கு வேறு ஒரு தண்ணீர்ப் பானை என்று வைக்கப்பட்டிருந்ததை, தனது தந்தையும், பிரபல வழக்குரைஞருமான திரு.இராமச்சந்திரன் (சேர்வை) அவர்கள் பிறகு, இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராகவும், பொறுப்பு வகித்த மூத்த வழக்குரைஞர், சுயமரியாதை வீரர், 1920ஆம் ஆண்டில் அந்த இரண்டு தண்ணீர்ப் பானை முறையை ஒழித்து, ஒரே பானையில் அனைவரும் தண்ணீர் குடிக்கும் நிலை ஏற்படுத்தியதைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புக் கட்டுரை

ஆர்.ராமசுப்ரமணியன்

சிறப்புக் கட்டுரை

இதற்கு மூல காரணம் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் அல்லவா?

  1. இதுபோல் வழக்குரைஞர்கள், மாவட்ட நீதிபதிகள் (கீழமை நீதிபதி) கும்பகோணத்தில் எப்படி ஜாதியைக் காட்டி, சமத்துவமின்றி தகாத சமூகக் கொடுமையான நடப்புகள் ஏற்பட்டன என்பதற்கு இரண்டு முககிய ஆவணச் சாட்சியங்கள் – நடத்தைகளான சம்பவங்கள்.

(அ) சட்ட நிபுணரும், உச்சநீதிமன்றத்தில் தற்போது டில்லியில் பிரபலமான மூத்த வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் அவர்களின் தந்தை எம்.கே.நம்பியார், கும்பகோணத்தில் பல ஆண்டுகளாக வழக்குரைஞர் தொழில் நடத்தி வந்து, பிறகே சென்னைக்குச் சென்று பிரபலமான சட்ட மேதையாகவும் – திறன்மிக்க மூத்த வழக்குரைஞர்.

அவர்பற்றி அறியவேண்டிய ஓர் அரிய தகவல் – சம்பவம் என்ன தெரியுமா?

‘M.K.Nambiyar A Constitutional Visionary’ என்ற தலைப்பில், அவருடைய மகன் கே.கே.வேணுகோபால் எழுதியுள்ள வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அக்கால ஸநாதனம், வைதீகம் – ஜாதிக் கொடுமைகள் எப்படிப் படமெடுத்தாடின என்பதை அந்த நிகழ்ச்சிகள் சுட்டிக்காட்டுகிறது.

திரு.கே.கே.வேணுகோபால் அவர்களின் தந்தை எம்.கே.நம்பியார் (வழக்குரைஞர்) கும்பகோணத்தில் தனது நண்பர்களுடன் உணவு சாப்பிட, ஓர் ஓட்டலுக்குள் சென்று அமர முயலும்போது, (அந்த அய்வரில் கே.கே.நம்பியாரும், இன்னொருவரும்  பார்ப்பனரல்லாதவர்கள்; மற்ற மூவரும் பார்ப்பனர்கள்) பார்ப்பனர்களை ஓட்டல் உள்ளே அனுப்பினாலும், எம்.கே.நம்பியார், அவரது பார்ப்பனரல்லாத நண்பர் இருவரையும் வெளி வராண்டாவில் உட்கார வைத்து, உணவு பரிமாறப்பட்ட நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, அன்றைய சமூக சூழ்நிலை அப்படி; அதனால், தனது தந்தை எந்த எதிர்ப்பையும் கூறாமல், அந்த நிலையில், சாப்பிட்டுவிட்டு வந்தார் என்பதை ‘நாசுக்காக’ பதிவு செய்துள்ளார்!

சிறப்புக் கட்டுரை

கே.கே.வேணுகோபால்

இதனை ‘ஹிந்து’ ஆங்கில நாளேட்டில், மூத்த செய்தியாளர் நண்பர் பி.கோலப்பன் அவர்கள், அந்தப் புத்தகம் பற்றிய விரிவான  விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்!

‘ஹிந்து’ ஆங்கில நாளேடு, 6.3.2026 பக்கம் 2 (Supplement). (படம் அருகே காண்க).

அந்நிலை மாறியது எதனால்? எப்படி?

ஓட்டல்களில், ‘‘பிராமணர்களுக்கு மட்டும்’’ என்றும்,

‘‘சூத்திராள் – இதராள்களுக்கு’’ என்று தொங்கிய பலகை காணாமற் போனது எப்படி?

‘பிராமணாள் காபி கிளப்’ விளம்பரப் பலகைகளை மாற்றி, ‘Ideal Cafe’ என்று ஆன வரலாறு, யாரால், எந்த இயக்கத்தால் ஏற்பட்டது?

இன்று காண முடியுமா?

அதே கும்பகோணத்தில் (அந்த ஆரிய ஸநாதனக் கோட்டையில்) மற்றொரு முக்கியச் சம்பவம்.

பின்னாளில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாகி, சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளைத் தந்த, வரலாறாகிவிட்ட இரண்டு நீதிபதிகள் ஜஸ்டிஸ் சுப்ரமணிய நாடாரும், கே.ஒய்.கணபதியாபிள்ளை அவர்களும் (ஒருவர் பிற்படுத்தப்பட்ட ஹிந்து; மற்றொருவர்  சைவப் பிள்ளைமார், முன்னேறிய ஜாதி).

இவர்கள் இருவரும் சம கால மாவட்ட கீழமை நீதிபதிகளாக கும்பகோணத்தில் பதவியில் இருந்தபோது, ஒரு சம்பவம்; இதை அவர்களே வெளியிட்டனர் முன்பு!

ஒரு ‘‘பிராமண’’ வழக்குரைஞரின்  வீட்டு விசேஷத்திற்கு இந்த இருவருக்கும் அழைப்பு. அதை ஏற்று, அங்கு சென்றார்கள்.

அப்பார்ப்பன வழக்குரைஞர்கள், மற்ற கீழமை வழக்குரைஞர்களானப் பார்ப்பனர்களை உள்ளே அழைத்ததோடு, இவ்விருவரையும் திண்ணையில் அமர்த்திவிட்டதைக் கண்டு, மிகவும் ‘பொருமி’ இந்த இருவரும் உடனே விருந்து எதிலும் பங்கேற்காது திரும்பி வந்துவிட்டார்கள். பிறகு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களே மனங்குமுறி வெளியிட்டத் தகவல்!

ஜாதிக்கு முன்னே நீதிக்கு என்ன மரியாதை பார்த்தீர்களா?

இன்று அந்த நிலை மாறியுள்ளது! எப்படி?

(பார்ப்பனர்கள் பெரிதும் தங்களது ஆதிக்க மனப்பான்மையை மாற்றிக் கொண்டுவிட்டனர்; ஒரு சில விலக்குகள் இருக்கலாம்).

இதற்கு மூல காரணம், தந்தை பெரியாரும், அவரது சுயமரியாதை கொள்கை முழக்கங்களும்தானே!

ஆரியத்திற்கு அடிமைகளான “நன்றி கெட்ட” கூலிகளான சூத்திரர்களுக்கும் இது உரைக்க வேண்டாமா?

வரலாறு உங்களைப் பார்த்துச் சிரிக்காதா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *