தேர்தலில் வென்று குறுகிய காலத்தில் பதவியிலிருந்து விலகுபவர்கள் மீண்டும் போட்டியிடத் தடை விதிக்க சட்டம் கோரி வழக்கு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.13- தேர்தலில் வெற்றிபெற்று குறுகிய காலத்தில் பதவியிலிருந்து விலகுபவர்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரக் கோரியும், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.சுதன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை எஸ்.ஜெயக்குமார் ஆகியோரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி அன்றைய தினமே தவெகவில் ஐக்கியமாகினர்.

இந்நிலையில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இல்லாத மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தனித் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எஞ்சிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடக்கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே விதித்த தடை செப்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் ஏற்கெனவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய இருவரும் தற்போது தவெக வேட்பாளர்களாக இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளனர். இது தேர்தல் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சீர்குலைத்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதுபோல உள்ளது. இதனால் மக்களின் வரிப்பணமும் தேர்தல் செலவு என்ற பெயரில் வீணடிக்கப்பட்டு வருகிறது.

எனவே, சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி மீண்டும் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது அந்த தேர்தலுக்கான செலவை அவர்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களை பொறுப்பாக்கி, தேர்தல் செலவுத் தொகையை டெபாசிட் செய்ய உரிய நடைமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் மக்கள் தீர்ப்பை புறக்கணித்து தங்களது அரசியல் லாபத்துக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதால் சம்பந்தப்பட்டவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியாதபடி தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.

இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோரது வேட்பு மனுக்களை ஏற்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

அதேபோல, திருச்சி கிழக்கு,கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவுத் தொகையை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *