சென்னை, செப். 12– தமிழ்நாட்டில் வறுமையில் வாடும் முதியோர், கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,200-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500-ம் அரசு உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் இந்தத் தொகை, செப்டம்பர் மாதத்தில் 10ஆம் தேதியை கடந்தும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வரவு வைக்கப்படாததால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்ட பயனாளிகள் விவரம்: விழுப்புரம்: 1,71,621 பேர் திருச்சி: 1,10,000 பேர் தஞ்சாவூர்: 81,159 பேர் மயிலாடுதுறை: 72,528 பேர் திருவாரூர்: 60,500 பேர் புதுக்கோட்டை: 14,500 பேர்.
பொதுமக்கள் வேதனை: “மாதந்தோறும் அரசு வழங்கும் இந்த உதவித்தொகையை நம்பியே எங்கள் அன்றாட உணவிற்கும், மருத்துவச் செலவுகளுக்கும் வழி தேடுகிறோம். விழாக் காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பணம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம்” எனப் பாதிக்கப்பட்ட முதியோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு திட்டமிடுகிறதோ என்ற அச்சமும் முதியோரிடையே ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்ட அதிகாரிகள் கூறுகையில் ஒரே தவணையாக செலுத்தும் திட்டம்: வங்கிக் கணக்கில் வழக்கமாக இரு கட்டமாகச் செலுத்தப்படும் தொகையை, ஒரே கட்டமாகச் செலுத்த உத்தரவிடப்பட்டதால் பட்டியல் சரிபார்ப்பில் தாமதம் ஏற்பட்டது. மென்பொருள் மாற்றம் சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யும் பணிக்கான சாப்ட்வேர் மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மென்பொருள் மாற்றப் பணிகள் நிறைவடைந்து, அடுத்த வாரத்திற்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் தொகை முழுமையாக வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
