புதுடில்லி, செப். 8- மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை விட்டுவிலகி தவெகவில் இணைந்தனர்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களின் பதவி விலகலை பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக் கொண்டதையடுத்து அந்தத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முதலமைச்சர் ஜோசப் விஜய் விலகினார். இதனால், அந்த தொகுதியும் காலியானது. இதன்மூலம், மொத்தம் 7 தொகுதிகள் காலியாகின.
இதனிடையே, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி பதவியை விட்டு விலகிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சார்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.
மேலும், கட்சித் தாவல் நடவடிக்கை நிலுவையில் இருந்து வந்த நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக் கான இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் செப்.9ஆம் தேதி தொடங்கும்.
வேட்புமனு தாக்கல் செய்ய செப்.16 கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை செப்.17ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற செப்.19 கடைசி நாள். தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அக்.-9ஆம் தேதி நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்கு வங்கத்தின் ரெஜிநகர், நந்திகிராம், அசாமின் நாகோன் ஆகிய தொகுதிகளுக்கும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்றும், அக்.9ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
