சென்னை, செப். 8- “தமிழ்நாடு அரசின் காவல் துறை மற்றும் இந்து அறநிலையத் துறையின் ஏழை, அடித்தட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை, சைதாப்பேட்டை தொகுதி, மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஆதிசென்ன கேசவ பெருமாள் கோயில் நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாடகை செலுத்தி வசித்து வருகிறார்கள். அவர்களில் 20 குடும்பங்களை சேர்ந்த ஏழை, எளிய மக்கள், அவர்களின் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டுமென மிரட்டப்படுகிறார்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்.
அவர்களின் வசிப்பிடத்தை வேறு சில தனியார் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலரும், அதிகாரிகளும், தனிநபர்களும் இணைந்து அவர்களை மிரட்டுகிறார்கள் என பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.
தனது வீட்டுக்கு எதிரே ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகள் இருப்பதை விரும்பாத ஒரு நபர், அக்குடியிருப்புகளை அகற்ற பொது நல வழக்கை போட்டுள்ளார் என்றும், ஏழை மக்களின் குடியிருப்புகள் உள்ள இடத்தை அபகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்றும் பாதிக்கப்பட்டுள்ளோர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (7.9.2026) காலை காவல் துறை அந்த குடியிருப்புப் பகுதியில் குவிக்கப்பட்டது. ஏழை, எளிய மக்களின் குடியிருப்பை பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை பொதுமக்கள் நாடினர். நீதிமன்றத்தில் தனிநபருக்கு ஆதரவாக அறநிலையத் துறையில் உள்ள அதிகாரிகளில் சிலர் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசுக்கு சொந்தமான கோயில் நிலத்தில் வாடகை செலுத்தி நீண்ட காலமாக வசிக்கும் ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை பாதுகாக்க வேண்டும், அம்மக்களின் வசிப்பிட உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக இந்து அறநிலையத் துறை நீதிமன்றத்தில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து போராடியது.
போராட்டம் நடத்திய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் அபிஷேக், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ர.சவுமியா, துணைத் தலைவர் கமலக்கண்ணன் முதலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் காவல் துறையும், இந்து அறநிலையத் துறையும், 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் பொருட்களை எடுத்து சாலையில் வீசியுள்ளன. கைக்குழந்தைகளுடன் உள்ள ஏழை, எளிய மக்களையும் வீட்டுக்குள் புகுந்து வெளியேற்றிவிட்டு, வீடுகளுக்கு சீல் வைத்துள்ளன. தமிழ்நாடு அரசின் காவல் துறை மற்றும் இந்து அறநிலையத் துறையின் இத்தகைய ஏழை, அடித்தட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டும். கோயில் மனைகளில் குடியிருக்கும் அந்த 20 குடும்பங்களின் குடியிருப்பு உரிமைகளை பாதுகாத்திட முன்வர வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது” என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.6,000 ஆக உயர்த்தக் கோரி
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்!
விழுப்புரம், செப்.8- மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ. 6,000 ஆக உயர்த்தி வழங்கக் கோரி, விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று (7.9.2026) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவது போன்று, தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை ரூ. 6,000 ஆக உயர்த்தி வழங்கக் கோரி, விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு விழுப்புரம் மாவட்டச் செயலர் ஏ. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் காவல் துறையினர் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஜாதியப் பாகுபாடு:
ஊராட்சி செயலர் பணி நீக்கம்!
ஊராட்சி செயலர் பணி நீக்கம்!
கொட்டாம்பட்டி, செப்.8- தூய்மைப் பணியாளரிடம் ஜாதிய பாகுபாடு காட்டியது தொடர்பான புகாரில், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கம்பூர் ஊராட்சி செயலர் ரூபா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தூய்மைப் பணியாளர் சசிகலா அளித்த புகாரின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“வன்கொடுமை புகார் மீது நடவடிக்கை! ஜாதி பாகுபாட்டுடன் தாம் நடத்தப்படுவதாக ஊராட்சி செயலர் மீது தூய்மைப் பணியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், நமது துறையின் அறிவுறுத்தலின்பேரில் ஊராட்சி செயலர் 7.9.2026 அன்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முந்தைய காலங்கள்போல் அல்லாமல், ஜாதி பாகுபாடுகளை எந்த வகையிலும் அனுமதிக்காமல், நமது ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
