கோலாப்பூர், செப். 6- மராட்டிய மாநிலத்தில், இரு மாணவிகளின் கல்விக்காக அடர்ந்த காட்டுப் பகுதியில் தினமும் 5 கிலோமீட்டர் மலை ஏறி சென்று பாடம் நடத்தி வரும் அரசுப் பள்ளி ஆசிரியரின் அர்ப்பணிப்பு நெஞ்சை நெகிழ வைத்துள்ளது.
மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ககன்பவ்டா தாலுகாவில் உள்ள ஒரு சிறிய மலைக்கிராமம் காவல்டெக் தங்கர்வாடா. இந்த கிராமத்தில் வெறும் மூன்று வீடுகள் மட்டுமே உள்ளன. இங்கு மின்சார வசதியோ அல்லது முறையான சாலை வசதியோ கிடையாது. இந்த கிராமத்தை சேர்ந்த 8 வயது மற்றும் 5 வயதுடைய இரு சகோதரிகள் அங்குள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்திவிட கூடாது என்பதற்காக, ஜீவன் மிதாரி என்ற அரசுப் பள்ளி ஆசிரியர் நாள்தோறும் தார் சாலை இல்லாத, கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்று பாடம் கற்பித்து வருகிறார். பள்ளிக்கு செல்ல மோட்டார் சைக்கிள் கூட செல்ல முடியாத நிலை உள்ளதால், அவர் தினமும் 5 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காட்டு வழியே மலை ஏறி செல்கிறார். மீண்டும் மாலையில் 5 கிலோமீட்டர் நடந்து திரும்புகிறார்.
அவர் கடந்து செல்லும் அடர்ந்த காட்டுப்பகுதியில் காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள் மற்றும் காட்டு நாய்கள் போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். தன்னுயிரையும் பொருட்படுத்தாமல், அந்த மாணவிகளின் எதிர்காலத்திற்காக அவர் நாள்தோறும் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஆசிரியர் தினத்தை ஒட்டி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக திகழும் ஜீவன் மிதாரியின் இந்த அசாத்திய அர்ப்பணிப்பை பாராட்டி மக்கள் தங்களது வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
ராஜபக்சவின் மகன் இலங்கையில் கைது!
ஊழல் வழக்கில் வசமாகச் சிக்கினார்!
கொழும்பு, செப். 6- இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனும், எம்பியுமான நமல் ராஜபக்ச ஊழல் வழக்கில் அந்நாட்டு ஊழல் தடுப்புப் பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஏர்பஸ் விமான கொள்முதல் தொடர்பான ஊழல் வழக்கில் நமல் ராஜபக்ச தற்போது கைது செய்யப் பட்டிருக்கிறார். அவரது கைது நடவடிக்கை நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் ரக விமானங்களை வாங்குவது தொடர்பான பணப்பரிவர்த்த னைகளில் சுமார் 100 மில்லியன் ரூபாய் லஞ்சமாக பெற்றதாக நமல் மீது குற்றச்சாட்டு இருந்தது. 2014-2015ஆம் ஆண்டுகளில் இலங்கை தொழிலதிபர் ஒருவர் மூலமாக பல தவணைகளாக இந்த லஞ்சப் பணம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் ரூ.15.96 கோடியும், மற்றொரு கட்டத்தில் ரூ.7.55 கோடியும் கை மாற்றப்பட்டிருக்கிறது.
இந்த லஞ்சப பணம் முதலில் சிங்கப்பூரில் உள்ள Standard Chartered வங்கியில் BIZ Solutions Inc என்ற நிறுவனத்தின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. பின்னர், அதே தொழிலதிபருக்கு சொந்தமான Sabre Vision Holding Ltd என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் OCBC வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இந்த முறைகேடு தொடர்பாக பிரான்சு நாட்டின் ஏர்பஸ் அதிகாரிகள் வழங்கிய தகவல்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைய அலுவலகத்தில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த தீவிர விசாரணைக்கு பிறகு நமல் கைது செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வரும் செப்.18 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது.
